May 3, 2024
  • May 3, 2024
Breaking News
November 15, 2023

ரெய்டு திரைப்பட விமர்சனம்

By 0 187 Views

நிஜ வாழ்க்கையில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பிரச்சனை இல்லாமல் வாழ முடியுமோ என்னவோ, ஆனால் சினிமாவில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் வாழவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

அப்படி நேர்மையான போலீஸ் ஆக விக்ரம் பிரபு வாழ்ந்து தாதாக்களை சுளுக்கு எடுக்க… பதிலுக்கு அவர்கள் அவரது மனைவி ஸ்ரீ திவ்யாவைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள்.

வில்லன்களைப் பழிதீர்க்க விக்ரம் பிரபு ரெய்டு எடுப்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஒரு ஆக்சன் ஹீரோவாக பரிமளிப்பது என்பது சாதாரண வேலை இல்லை. அப்படி இந்தப் படத்தில் தன்னை ஒரு ஆக்சன் ஹீரோவாக நிறுவிக்கொள்ள விக்ரம் பிரபு போராடி இருக்கிறார்.

இயல்பான படங்களில் அவர் ஒன்றிப் போவது போல் இந்தக் கேரக்டரில் அவரால் ஒன்ற முடியாததற்கு இயக்குனரும், திரைக்கதையும் காரணமாக இருக்கலாம்.

மீண்டும் இந்தப் படத்தில் தோன்றியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. ஆனால் அவர் தமிழ் சினிமாவில் மீண்டு வரும் சாத்தியத்தை இந்தப் படம் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

இன்னொரு நாயகியாக வரும் அனந்திகா, வில்லன் ரிஷி ரித்விக், டெரர் வில்லன்களாக சௌந்தர்ராஜன், டானி, வேலு பிரபாகரன் ஆகியோர் வந்து போகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கதிரவன், படத்தொகுப்பாளர் மணிமாறனுக்கு என்ன விதமான கட்டளைகளை பிறப்பித்து இருப்பார் இயக்குனர் கார்த்தி என்பது புரியவில்லை.

ஆனால் இயக்குனர் முத்தையாவின் உதவியாளர் என்பதை ஆக்சன் அதிரிபுதிரி காட்சிகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

தன் சிஷ்யனுக்காக முத்தையாவே முன்வந்து வசனப் பகுதிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். இருந்தும் டி.ஆர் படம் போல் அடுக்குத்தொடர் வசனங்களே வந்து கொண்டிருப்பது இந்த ஆக்சன் படத்தை விட அதிகமாக பயமுறுத்துகிறது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தன் பங்குக்கு சீரியல் ரேஞ்சுக்கு வாத்தியங்களை அலற விட்டுக் காட்சிகளை நிரப்பி இருக்கிறார்.

ஏற்கனவே கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படத்தின் கதைதான் இது என்றாலும் அது கன்னட சூப்பர் ஸ்டார் நடித்த படம் என்பதால் எடுபட்டு இருக்கிறது என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தப் படத்தில் சிறப்பாக சொல்ல வேண்டிய விஷயமே இதன் வித்தியாசமான திரைக்கதை தான். எல்லாப் படங்களிலும் கடைசியில்தான் வில்லன்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே மள மளவென்று எல்லா வில்லன்களையும் கொன்று விட்டு, பின்னர் ஏன் ஹீரோ அவர்களைக் கொன்றார், எப்படிக் கொன்றார் என்பதை ஃப்ளாஷ் பேக் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் அல்லது சொல்லிக் கொல்கிறார்கள்.

இந்தப் படத்தின் பலன் – நானும் ஆக்சன் ஹீரோதான் என்று விக்ரம் பிரபுவால் சொல்லிக்கொள்ள முடியும்.

திருநாளுக்கு வந்த படம் என்ற அளவில் ரெய்டு படத்தைப் பார்க்க தியேட்டருக்கு ஒரு முறை ரெய்டு விடலாம்.