September 20, 2024
  • September 20, 2024
Breaking News
November 16, 2023

பார்க்கிங் பிரச்சினைக்காக கொலையே நடந்திருக்கிறது – இயக்குனர் சொன்ன அதிர்ச்சித் தகவல்

By 0 254 Views

“இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வண்டிகளை பார்க்கிங் செய்வதுதான்…” என்று ஆரம்பித்தார் ‘ பார்க்கிங் ‘ என்ற தலைப்பிட்ட படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

“கொல்கத்தாவில் நடந்ததாக நான் ஒரு செய்தி படித்தேன். அதில் ஐந்து பேர் சேர்ந்து ஒருவரைக் கொன்று விட்டார்கள். அதை விசாரணை செய்த போதுதான் அதன் பின்னணி வண்டி பார்க்கிங் செய்வதால் எழுந்த பிரச்சினை என்று தெரிய வந்தது…” என்ற ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கும் பார்க்கிங் படத்தில் ஹரிஷ் குமார் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகி இந்துஜா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து ’பார்க்கிங்’ படத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்கள். 

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தொடர்ந்து பேசும்போது, “ஊரடங்கு சமயத்தில் உண்மை சம்பவங்களை வைத்து நான் எழுதிய கதை இது. ரசிகர்களை தங்களது வாழ்க்கையில் அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் தொடர்பு படுத்தும் வகையில் படம் இருக்கும்.

இப்படி ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்ததும் என்னை சுற்றி இருந்த அனைவருமே அவரவர்களுக்கு பார்க்கிங்கில் ஏற்பட்ட பிரச்சனைகளைச் சொன்னார்கள். அது அனைத்தையும் சேர்த்து சைக்கலாஜிக்கலாக நான் எழுதிய ஒரு திரில்லர் டிராமாதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

தீர்க்க முடியாத இந்தப் பிரச்சினைக்கு படத்திலும் எந்தவிதமான தீர்வையும் நான் சொல்லவில்லை.

பார்க்கிங் பிரச்சனை மட்டும் அல்ல, சாலையில் வாகனத்தில் செல்லும் போது நம்மை யாராவது இடித்துவிட்டால், அவர்கள் சாரி என்று சொல்லிவிட்டால் போதும் அந்த பிரச்சனை முடிந்துவிடும், ஆனால் அப்படி சொல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முறைத்துக்கொண்டு, திட்டிக்கொண்டால் அந்த பிரச்சனை நினைத்து பார்க்க முடியாதபடி வளர்ந்து விடும். எனவே, மனிதாபிமானத்தோடு இத்தகைய செயலை அணுகினால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது, என்றுதான் சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

தொடர்ந்து படம் பற்றி கூறிய ஹரிஷ் கல்யாண், “இயக்குநர் ராம்குமார் இந்தத் திரைக்கதையை என்னிடம் கொடுத்த போது நான் உணர்ந்த விஷயம், ஒரு நடிகராக அல்லாமல் ஒரு பார்வையாளராக இந்தக் கதையை அனுக வேண்டும் என்பதுதான்.

எனக்கு இந்தக் கதையைப் படித்த போது, என் வாழ்க்கையில் நடந்த இதுபோன்ற சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. சிறு வயதில் பள்ளிக்கு சைக்கிளில்தான் செல்வேன். ஒரு நாள் என் இடத்தில் வேறு ஒரு சைக்கிள் இருந்ததால், என் சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்தினேன். அப்போது அங்கு வழக்கமாக சைக்கிள் விடும் ஒரு சீனியர் மாணவர் என்னிடம் சண்டை போட்டார். இப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கும்.

இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். அவரது நடிப்பைப் பார்த்து செட்டிலேயே வியந்து போனேன். இவருடன் போட்டி போட்டு நடிக்க முடியுமா என்று தோன்றியது..!” என்றார்.

நடிகை இந்துஜா படம் குறித்து கூறுகையில், “என் எல்லா படங்களிலும் ஒரு சவால் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்தப் படத்திலும் அப்படி ஒரு சவாலான கதாபாத்திரம்தான். அதாவது படம் முழுவதும் கர்ப்பிணியாக நடித்திருக்கிறேன்.

படத்தில் வரும் எங்கள் காருக்கும் என் கர்ப்பத்திற்கும் கூட தொடர்பு இருக்கும். அது படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.” என்றார்.

படத்தில் பார்க்கிங் பிரச்சினையைத் தாண்டி ஹரிஷ் கல்யானும், இந்துஜாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ஹைலைட்டாக இருக்குமாம்.

“படத்துக்கு யு/ஏ சர்டிபிகேட் கிடைத்திருப்பது இது போன்ற விஷயங்களுக்காக அல்ல – இது இயல்பான கதை என்பதால் பெரியோரின் துணையோடு குழந்தைகள் இந்தப் படத்தை பார்க்க முடியும்..!” என்றார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்

ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

டிசம்பர் 1ஆம் தேதி தியேட்டர்களில் வெடிக்கவிருக்கிறது இந்த பார்க்கிங் பிரச்சினை..!