ஐந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை சுவாரஸ்யம் தட்டாமல் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வினோ.
நாயகனாக ஸ்ரீ. தண்ணீர் கேன் தொழிற்சாலையில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பவருக்கு அவரை ஒருதலையாக காதலித்த பெண்ணால் வேலை போகிறது.
வாழ்க்கை வெறுத்து தற்கொலை வரை போகும் அவருக்கு அடுத்து உடல்நிலை சரியில்லாத ஒரு விஞ்ஞானியை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்கிறது. அவர் கண்டுபிடித்த ஒரு பார்முலா மருந்தை வைத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்.
இந்த விஷயம் தெரிந்து ஸ்ரீயிடம் இருக்கும் பணத்தை அபகரிக்க, அதே வீட்டில் வீட்டு வேலை செய்யும் வசுதா கிருஷ்ணமூர்த்தி திட்டமிட, அதே விஞ்ஞானியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்ஸ் திட்டமிடுகிறார்.
அது முடிந்ததா, அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2வின் மீதிக் கதை சொல்கிறது.
படத்தில் நமக்கு நன்றாக தெரிந்த முகம் டாக்டராக வரும் சாம்ஸ்தான். வழக்கமான டைமிங் ஜோக் மூலம் சிரிக்க வைக்கும் சாம்ஸ், அதன் பிறகு சீரியஸ் வில்லனாகிறார். தன்னால் காமெடி வேடத்தைத் தாண்டி பிற வேடங்களையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார் சாம்ஸ்.
கிட்டத்தட்ட நாயகனாக வரும் ஸ்ரீ, ஆரம்ப காட்சியில் விரக்தியான தனது வாழ்க்கையை நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் வசதியான வாழ்க்கை வந்ததும் உடல் மொழி உட்பட அனைத்து விஷயங்களிலும் மாறுதலை காட்டி நடித்திருப்பது சிறப்பு.
அந்த வீட்டில் பணிப் பெண்ணாக நடித்திருக்கும் வசுதா கிருஷ்ணமூர்த்தி, அடேங்கப்பா வில்லியாக வந்து அசத்தியிருக்கிறார்.
ஸ்ரீயுடன் நெருக்கமாக பழகும்போதும் திரையரங்கையே சூடேற்றுகிறார். இறுதியில் பணம் இருந்தால் பெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பே தேவையில்லை என்பதை சுத்தியலால் அடித்து சொல்லும் காட்சி நம்மை பதற வைக்கிறது.
படுத்த படுக்கையாக இருக்கும் விஞ்ஞானி ராம்ஜி, படம் முழுவதும் படுத்தபடி வசனம் பேசாமல் இருந்தாலும் க்ளைமாக்ஸில் எதிர்பாரத ட்விஸ்ட் கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
பாலாஜி வெங்கட்ராமனின் கதாபாத்திரமும் அதில் அவர் வெளிப்படுத்திய அளவான நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இசையமைப்பாளர் சிபு சுகுமாரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது.
சதிஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒரே வீட்டில் கதை நகர்ந்தாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தால் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதற்கு சான்றாக இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வினோ.
புரொஜக்ட் சி சாப்டர் 2 – சிறிய பட்ஜெட்… சீரியஸ் முயற்சி..!