November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 27, 2022

போத்தனூர் தபால் நிலையம் திரைப்பட விமர்சனம்

By 0 717 Views

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிறிய பட்ஜெட்டில் ரசிக்கத்தக்க படங்கள் வந்து போகும். அந்த வகையில் இந்தப் படத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் என்ற ஊரில் இருந்த தபால் நிலையத்தை கதைக்களமாக வைத்து ஒரு கதையை சொல்லி அதில் தானே ஹீரோவாக நடித்து இருக்கிறார் பிரவீண். 

படத்தில் அவருக்கான ‘டாஸ்க்’ ஆக இருப்பவை இவை மட்டுமல்ல. 90களில் நடந்ததாக இந்த படத்தை நம்மை நம்ப வைப்பதில்தான் அவரது முக்கிய பொறுப்பு அமைந்திருக்கிறது.

கம்ப்யூட்டர் பற்றித் தெரிந்து வைத்திருந்தாலும் அது புழக்கத்தில் இல்லாத காலகட்டத்தில் செல்போன்களும் இல்லாத சூழலில் ஒரு பெருத்த பணம் களவாடப்பட்டால் அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது சிக்கலான பிரச்சனை.

அப்படி தொண்ணூறுகளில் போத்தனூர் தபால் நிலையத்தில் டெபாசிட் பெறப்பட்டு அதை வங்கியில் கட்ட வாய்ப்பு இல்லாத சூழலில், தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்று நம்பிய போஸ்ட் மாஸ்டர் அந்த பணத்தை தன்னுடன் எடுத்துக் கொண்டு வருகையில் களவாடப்படுகிறது.

அது ஒரு வார இறுதி என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறையாக இருக்க திங்கட்கிழமை காலையில் அந்தப் பணத்தை திரும்ப வைக்க வேண்டும். அல்லது பணத்தைக் கையாடல் செய்த குற்றம் சுமத்தப்பட்டு போஸ்ட் மாஸ்டர் சிறைக்குப் போக வேண்டும் என்ற சூழலில் அவரது மகனாக வரும் பிரவீண் தலையிட்டு அந்தப் பணத்தை கண்டுபிடிக்கக் கிளம்ப இரண்டே நாள் அவகாசத்தில் அது முடிந்ததா என்பதுதான் கதை.

90களில் அதிலும் போத்தனூர் போன்ற இடத்தில் ஒரு தபால் நிலையம் இருந்தால் அது எவ்வளவு பாதுகாப்புக் குறைபாடுகளுடன் இருக்கும் என்பதையும் அப்போதைக்கு அதை எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதையும் இயக்குனராக சரியாகச் சொல்லியிருக்கிறார் பிரவீண்.

படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கும் அவர் அப்போதே கம்ப்யூட்டர் தொழில்நட்பம்தான் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும் என்று சரியாக கணித்து கம்ப்யூட்டர் தொழில் ஆரம்பிப்பதற்காக வங்கியில் கடன் கேட்க அது கிடைக்காமல் போகும் நிலையில் அப்பா கொண்டுவந்த பணமும் களவாடப்பட, அந்த சூழலை அற்புதமாகக் கையாண்டு பிரச்சினைகளை  அவர் முடிவுக்கு கொண்டு வருவது “சபாஷ்…” போட வைக்கிறது.

முதல் பாதி சற்று குறும்படம் போல் நகர்ந்தாலும் இரண்டாவது பாதியில் ஒரு துப்பறியும் கதைக்கு ஈடான த்ரில்லுடன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் பிரவீண். அதிலும் கிளைமாக்ஸ் இடம்பெறும் அந்த அனாமதேய வீடுகள் கொண்ட லொகேஷனை அவர் எங்கே பிடித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அவரே ஹீரோவாக நடிக்க முடிவெடுத்து அதில் தப்பில்லை அதில் சரியாகவும் செய்திருக்கிறார் என்றாலும் ஒரு இயக்குனராக அந்த பாத்திரத்தில் நமக்கு அறிமுகமான ஒரு நடிகரை நடிக்க வைத்திருந்தால் இந்தப் படத்தின் வெற்றியை எளிதாகப் பிடித்திருக்க முடியும்.

அவரது அப்பாவாக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ், நடிப்பில் சற்றே மேடை நாடக பாணி தெரிந்தாலும் அந்த காலகட்டத்திற்கு அந்த நடிப்பு பொருத்தமாக இருக்கிறது. கேஷியர் சீதாராமன், பிரவீணின் அம்மாவாக வருபவர் மற்றும் காதலியாக வரும் அஞ்சலி ராவ் அனைவரும் தங்கள் பங்கைச் சரியாகவே அளித்திருக்கிறார்கள்.

இது போன்ற ‘டார்க் ஹியூமர்’ படங்களில் நகைச்சுவை பெரிதும் கைகொடுக்கும். இந்தப் படத்திலும் நகைச்சுவை இருக்கிறது – ஆனால் அது நினைத்துச் சிரிக்கும் அளவில் இல்லை.

படத்தில் காமெடிக்காக பயன்பட்டிருக்கும் பிரவீணின் நண்பர் வெங்கட் சுந்தர் கிளைமாக்ஸ் காட்சிகளில் எங்கே எப்படி சொதப்புவாரோ என்று நமக்குத்தான் பதற்றமாக இருக்கிறது. 

சுகுமாரன் சுந்தரின் ஒளிப்பதிவு, கலை இயக்கம் எல்லாமே நேர்த்தியாக இருக்கிறது. தென்மாவின் இசையும் பொருத்தம். ஆனால், நமக்கு அறிமுகமான ஒரு ஹீரோவும், படத்தில் இன்னும் கொஞ்சம் நகைச்சுவையும் விறுவிறுப்பும் கூட்டி இருந்தால் தியேட்டரில் வெளியிட்டாலும் பெரிய வெற்றியைத் தந்திருக்கும் படமாக இது இருக்கும்.

ஆனால் ஓடிடிக்கு மெத்தப் பொருத்தமான படமாக அமைந்திருக்கிறது. வீடுகளில் குடும்பத்துடன் கண்டு ரசிக்கத் தோதான படம்.