தமிழ்நாட்டில் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும். அதுபோல் இந்த ஆண்டு வழங்கும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் ஒரு மாதத்துக்கு முன்பே பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அது முதல் தமிழ் நாடு முழுவதும் 2 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பொருள்களை பாக்கெட்டு போடும் பணி வேகமாக நடைபெற்று இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்த தொகுப்பில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை உள்ளன.
அத்துடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் ரூ.1000 இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்கப்பட இருக்கிறது. அதற்குத் தயாராக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பொங்கல் பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 5-ந் தேதி முதல் வழங்க அரசு உத்தரவிடலாம்.
ஒவ்வொரு ரேஷன் கடையிலும் எந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம் பொருள் வழங்கப்படும் என்ற பட்டியலை எழுதி ஒட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய குறுஞ்செய்தி பயனாளிகளின் செல்போனுக்கு வரும்.