மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் நிறைய மர்மங்களையும் அபாயங்களையும் அதே நேரத்தில் இயற்கை வளங்களையும் கொண்டிருக்கின்றன. அங்கு மாவோயிஸ்டுகள், நக்சல்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதாகவும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பிந்து மாதவி கிருஷ்ணாவுக்கு நாயகியாக, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி ஒன்றும் இடம் பெறுகிறது.
தனியாருக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தாலும் அதைச் சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த அடர் வனப்பகுதியில் செந்நாய்களைக் குறி தவறாமல் கிருஷ்ணா சுடுவதாகக் காட்சி.
இதற்காக அந்தக் காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டிருக்க, தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியானார்களாம் அந்தப் பகுதி மக்கள்.
மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக அவர்கள் தந்த தகவலை அடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர் துப்பாக்கி முனையில் நடிகர் கிருஷ்ணாவையும், அவரது பயிற்சியாளர்களையும் சுற்றி வளைத்தனர்.
விசாரித்ததில் அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தாலும் கிருஷ்ணா பயன்படுத்தியது உண்மையான துபாக்கியாக இருக்கவே அதைக் கைப்பற்றி அதன் லைசென்சைக் காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறு கூறியுள்ளனர்.
இந்த துப்பாக்கிகள் சென்னையைச் சார்ந்த GUN ராஜ் என்பவருக்கு சொந்தமானது. துப்பாக்கிகளுக்கான லைசென்சுடன் கேரளா விரைந்துள்ளார் GUN ராஜ்.
பாத்து கிருஷ்ணா… ‘சஞ்சய் தத்’ கதை தெரியுமில்லையா..? தெரியாட்டி ‘சஞ்சு’ படம் ஓடிக்கிட்டிருக்கு… போய்ப்பாருங்க..!