எந்த நேரத்தில் இப்படித் தலைப்பு வைத்தார்களோ பல வித பிளான்களுக்கு பிறகு இந்தப்படம் வெளியாகி இருக்கிறது.
ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோவும் பால சரவணனும் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் விழாவிற்கு நடனமாட ஒரு நடிகையை அழைத்து வருவதாக ஒரு பெரும் தொகையை வாங்குகிறார்கள்.
நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து தொலைந்து போக, பால சரவணனின் தங்கையும் காணாமல் போகிறாள்.
நிறுவனத்தில் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்காததில் வேலை சிக்கலுக்கு உள்ளாக ரியோவும், பால சரவணனும், தொலைந்த பணத்தையும், தங்கையையும் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தேடல் என்ன ஆனது என்பது மீதிக் கதை.
தன் ஸ்பெஷாலிட்டியான நகைச்சுவையை அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் ரியோ ராஜ். பாலசரவணனும் இவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளும், காணாமல் போன பணத்தை கண்டுபிடிக்க இவர்கள் போடும் திட்டமும் லக லக… படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக இவர்களது காமெடி பெருமளவில் உதவி இருக்கிறது.
அடுத்த வீட்டு பெண் போலவே தெரியும் ரம்யா நம்பீசன் அந்த அழகினாலேயே கவர்கிறார்.
ரோபோ சங்கர், ராம்தாஸ், நரேன் உள்ளிட்டு இந்தப் படத்தில் வரும் ஏனைய பாத்திரங்கள் கூட அந்தந்த வேடங்களை கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்.
நகைச்சுவை விஷயங்களையே பிரதானமாக வைத்து இந்த படத்தை நகர்த்தி இருக்கும் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் அதில் வெற்றி பெற்று இருப்பதாகவே சொல்லலாம். ஆனால் சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருந்தால் இன்னும் கூட படத்தை ரசித்து இருக்க முடியும்.
நகைச்சுவையை தாண்டி படத்தின் முக்கிய பலமாக இருப்பது யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும்.
படத்தில் லாஜிக் என்பது இல்லையே என்ற கவலை உள்பட எல்லா கவலைகளையும் மறந்து சிரிக்க வைக்கும் படம்.