கடந்த சில மாதங்களாகவே மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான படமாக இருந்தது இந்தப் படம். வெளியான படத்தின் டிரைலரும் பாடலும் அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாகவே இருக்க, இப்போது படம் வெளியான நிலையில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
சிம்புவின் இமேஜை அடுத்த கட்டத்துக்கு தூக்கிச் செல்லும் விதத்தில் இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஒபேலி என்.கிருஷ்ணா.
ஏஜிஆர் என்கிற சர்வ வல்லமை பொருந்திய தாதாவாக வருகிறார் சிம்பு. மணல் கடத்தல், பொறியியல் கல்லூரி என்று பெரிய பெரிய வேலைகளாக செய்து கொண்டிருக்கும் அவர் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு கிங்மேக்கராக இருக்கிறார். அவர் ஆதரவு தருபவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகலாம்.
அப்படி பிரதமராக இருக்கும் சந்தோஷ் பிரதாப் புக்கும், துணை முதல்வராக இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அடிக்கடி உரசல் ஏற்பட, இந்தப் பதவிக்கு ஆசைப்படும் மூன்றாவது நபராக வரிசையில் இருக்கிறார் ஒபேலி கிருஷ்ணா.
இந்நிலையில் முதல்வர் சந்தோஷ் பிரதாப் கடத்தப்பட மூன்றாவது இடத்தில் இருக்கும் ஓபிலி கிருஷ்ணா ஏஜிஆர் சிம்பு ஆதரவால் முதல்வராக்கப்படுகிறார். இதில் மேலும் கடுப்படைகிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
இன்னொரு பக்கம் ஏஜிஆரின் சட்டத்துக்கு புறம்பான செயல்களை ஆதாரத்துடன் நிரூபித்து அவரைப் பிடிக்க நினைக்கிறது மத்திய புலனாய்வுத்துறை. அதனால் அந்த துறையைச் சேர்ந்த உளவாளியான கௌதம் கார்த்திக்கை ஒரு ரவுடியாக ஏஜிஆரிடம் பணி செய்ய (வேவு பார்க்க) அனுப்பி வைக்கிறார்கள்.
கௌதம் கார்த்திக் ஒரு பக்கம் சிம்புவை வேவு பார்த்துக் கொண்டிருக்க, சிம்பு மீது கடும் கோபத்தில் இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க முடிவு என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.
ஒரு ரஜினி படத்தில் அவருக்கு என்ன விதமான பில்டப் கொடுக்கப்படுமோ, அதே அளவில் இந்தப் படத்தில் சிம்புவுக்கு பில்டப் வைத்திருக்கிறார் இயக்குனர். அத்துடன் ஏஜிஆர் என்ற பெயரும் எம்ஜிஆர் நினைவை நமக்குக் கொண்டு வருகிறது.
கை, கால், பின்னந்தலை என்று முதல் பாதி முழுவதும் சின்ன சின்ன ‘கட் ‘களாகவே சிம்புவை காட்டி, எப்போதுதான் சிம்புவை முழுதாக காட்டப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்து இடைவேளையில் அவரை முழுதாகக் காட்டுகிறார்கள்.
பின்பாதி முழுக்க சிம்புவின் ஆக்ஷன்தான். அவருடைய கெட்டப் இதுவரை பார்க்காத விதத்தில் மிகவும் புதுமையாக இருக்கிறது. இதுவரை அவர் நடித்த வேடங்களிலேயே இதில் மெச்சூரிட்டியான பாத்திரத்தை தந்து இருக்கிறார் இயக்குனர்.
காதல் ஐகானான சிம்புவை இந்தப் படத்தில் ஒரு துளி கூட காதல் பக்கமே வரவிடாமல் படத்தை முடித்த இயக்குனரை என்னவென்று சொல்வது. அவருக்கென்று ஒரு ஜோடி கூட படத்தில் இல்லை. மட்டுமில்லாமல் தங்கை சென்டிமென்ட், தங்கையின் குழந்தை சென்டிமென்ட் என்று அவரை ஒரு குடும்பப் பாசம் மிகுந்த நபராகவே காட்டி பெண் குலத்தைக் கவர முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
ஆரம்பத்தில் சிம்புவை கொடூரமானவராக சித்தரித்து… போகப் போக ஒரு குடும்பப் பற்றுள்ளவராக ஆக்கி இருக்கிறார் இயக்குனர்.
“என்னால எத்தனை பேர் வாழ்ந்தாங்க எத்தனை பேர் அழிஞ்சாங்கன்னெல்லாம் எனக்கு தெரியாது..!” என்று சிம்பு பேசும் பஞ்ச் அவரது நிஜ கேரக்டரை முன்னிறுத்தியே எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.
பட ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை முழுதும் நிறைந்திருக்கிறார் கௌதம் கார்த்திக். அவர் நடித்த படங்களிலேயே இதில்தான் அவரது ஆற்றல் பெரிதாக பயன்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் ஒரு ரவுடியாக அறிமுகமாகி பின்னர் அவர் ஒரு இரட்டை வேட ஏஜென்ட் என்று அறியப்பட்டதிலிருந்து சிம்புவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரைப் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரித்து அவரை சிக்க விட முயலும் வரை கௌதம் கார்த்திக் தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை அற்புதமாக தாங்கி நடித்திருக்கிறார்.
அத்துடன் கதாநாயகி பிரியா பவானி சங்கரைக் காதலிப்பதுவும் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் நம்பர் டான்ஸ் போட்ட சாயிஷா ஆர்யாவுடன் குத்தாட்டம் போடுவதும் இவருக்கு கிடைத்த டபுள் டமாக்கா ஹைலைட்ஸ்.
கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இதில் மெயின் வில்லனாக ப்ரமோஷன். ஏஜிஆர் என்கிற சிம்பு எத்தனை பெரிய வல்லமை வாய்ந்தவர் என்று தெரிந்தும் கூட அவருடன் மோத முடிவெடுக்கும் போது கௌதம் மேனனின் தைரியம் பாராட்ட வைத்தாலும் அவரது ஆற்றல் அதற்கு ஏற்றதாக இல்லை.
நம்பர் 3 ஆக இருந்து முதல்வர் ஆவது வரை இந்த படத்தின் இயக்குனரான ஒபிலி கிருஷ்ணா ஏற்றிருக்கும் பாத்திரம் சிறப்பாக இருக்கிறது. கிருஷ்ணாவே அந்த பாத்திரத்தை படைத்தும் இருப்பதால் அதில் அற்புதமாக பொருந்தி போகிறார். கௌதம் மேனனுக்கு கீழே இருந்தவர் முதல்வரானதும் மேனன் முன்னால் கால் மேல் கால் போட்டு சவடாலுடன் பேசும்போது பளிச்செடுக்கிறார் கிருஷ்ணா.
தமிழக முதல்வராக ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகி திடீரென்று கடத்தப்பட்டு காணாமல் போகிறார் சந்தோஷ் பிரதாப்.
சிம்புவின் தங்கை வேடத்தில் வருகிறார் அழகான அனு சித்தாரா …. அவர் வீட்டில் சிம்புவின் தலை தென்பட நல்ல வேலையாக அவர் சிம்புவின் தங்கை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். இல்லாவிட்டால் நாம் ஏதேதோ கற்பனை செய்து கொள்ள நேரிட்டிருக்கும்.
அது என்னவோ பிரியா பவானி சங்கருக்கு அவர் வரும் படங்களில் எல்லாம் அதிகாரி வேடமே வாய்க்கிறது. இதில் தாசில்தாராக வரும் அவர் பாத்திரம் முழுமை பெறாமல் முடிகிறது.
சமூக சேவகர் வேடத்தில் பிரபல கவிஞர் மனுஷ்ய புத்திரன் நடித்திருக்கிறார். கடைசி வரை நல்லவராகவே இருப்பதால் அவரும் கவருகிறார்.
பெரிய காமெடியன் யாரும் தேவைப்படாத படத்தில் ரெடின் கிங்ஸ்லி அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
பிரம்மாண்ட குவாரியும் படா பட லாரிகளுமாக படம் முழுவதும் பிரம்மாண்டமாக நகர்கிறது. அதிலும் அந்த கிளைமாக்சில் கேட்கும் வேட்டுச்சத்தம் ஹாலிவுட் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
தென் மாவட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த மாடுலேஷனில் பேசும் பாத்திரங்கள் அங்கங்கே தடம் மாறி இயல்பான தமிழிலும் பேசிக் கொண்டிருப்பது இடறல்.
பரூக் ஜே. பாஷாவின் ஒளிப்பதிவும் ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையும் இணைந்து பிரம்மாண்டமாக மிரட்டுகிறது. அமீன் பாடிய பாடல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
திரைக்கதையில் இடம்பெறும் அரசியல் நாடகங்கள் கடந்த 10 வருடங்களில் நாம் தமிழகத்தில் பார்த்த நடப்புகளை ஒட்டியே அமைந்திருப்பதால் ஒரு வித சுவாரசியத்துடன் படத்தில் ஒன்று முடிகிறது.
முறைகேடாக சம்பாதித்த பணத்தை வைத்து நல்ல காரியங்கள் செய்வதால் மட்டும் ஹீரோ செய்யும் சட்டத்துக்கு எதிரான செயல்களை நியாயப்படுத்த முடியாது. லாஜிக்காக இந்த விஷயம் மட்டும்தான் படத்தில் இடிக்கிறது.
அதேபோல் கம்பராமாயணம் புத்த்கததைக் கையில் வைத்திருக்கும் ராவணனையும் இந்தப்படத்தில் பார்க்க நேர்வதும் முரண். அந்த புத்தகத்துக்குள் என்னதான் ஒரு ரகசியம் ஒளிந்து கிடந்தாலும் ஒரு வீட்டில் அத்தனை கம்பராமாயண புத்தகங்கள் இருப்பதைப் பார்க்கும் யாருக்கும் சந்தேகம் வரவே செய்யும்.
மற்றபடி தொய்வில்லாத திரைக்கதை அமைப்பும், பரபரப்பான காட்சிகளும் படத்தை அனுப்பில்லாமல் கொண்டு செல்கிறது.
பத்து தல – சிம்புவுக்கு அடுத்தக் கட்ட புரமோஷன்..!