முட்டைகளை அடைகாத்தாலும் சிறகு விரித்த தன் குஞ்சுகளை ‘ பறந்து போ… உன் பாதையை நீயே தேடு..!’ என்றுதான் விட்டு விடுகிறது பறவை. மனிதன் மட்டுமே எப்போதும் தன் வாரிசுகள் மீது ஆளுமையை செலுத்தி வாழ்நாள் முழுதும் அடைகாத்துக் கொண்டே இருக்கிறான்.
இந்த தத்துவார்த்தமான விஷயத்தை இது ஒரு தத்துவம் என்று தெரியாமலேயே போகிற போக்கில் ஜாலியாக ஜோக் அடித்து, பாட்டு பாடிக் கொண்டே சொல்லிவிடுகிறார் இயக்குனர் ராம்.
சொல்லப்போனால் அவரது படங்களிலேயே இந்தப் படம்தான் எளிதாகக் கைக்கொள்ளக் கூடிய ஆங்கில வைத்தியம் ஆகியிருக்கிறது. இதுவரை அவர் தந்த ஆரோக்கியமான துவர்ப்பு கஷாயங்களை விடுத்து, இது கொஞ்சம் இனிப்பான சிரப் ஆகி இருக்கிறது. அதுவே ‘ சிறப்’பாகவும் இருக்கிறது..!
காசைக் கரியாக்காமல் குழந்தைகளைக் கண்டிப்புடன் வளர்த்தது ஒரு காலம். அது தவறு என்று (புரிந்து?) கணக்கின்றி செலவழித்து பிள்ளைகளை சந்தோஷமாக வளர்த்துக் கொண்டிருப்பதாக பெற்றோர் நினைப்பது இந்தக் காலம்.
எனினும், அவர்களது சந்தோஷம் அதுவல்ல என்று புரிந்து கொள்வதுதான் படத்தின் அடிநாதம்.
பிள்ளையுடன் நேரத்தை செலவழிக்க முடியாத அப்பாவும், தனிமையையே பெரும்பாலும் துணையாக வைத்திருக்கும் மகனும் அசந்தர்ப்பமான ஒரு பொழுதில் ஒரு ‘ரோடு ட்ரிப்’ போக அந்த அனுபவங்கள் திரையில் விரிகின்றன.
வழக்கமாக நாயகன் சிவாவைப் பார்த்தாலே சிரித்துக் கொண்டிருந்தோம். ஆனால் கடந்த சில படங்களில் அவர் என்ன செய்தும் நம்மைச் சிரிக்க வைக்க முடியவில்லை – என்ற நிலையில் இந்தப் படம் அவர் மெனக்கெடாமலேயே சிரிக்க வைத்திருக்கிறது.
மகனுக்குத் தன் தகுதிக்கு மீறி ‘ ஸ்கேட்டிங் போர்ட்’ வாங்கிக் கொடுத்திருக்கும் சிவாவிடம் அவரது அப்பா பாலாஜி சக்திவேல் பொருமலுடன், “இது அஞ்சாயிரம் ரூபாய் இருக்குமா..?” என்கிறார். “இல்லை… தள்ளுபடியில் வாங்கியது – 4800 ரூபாய்..!” என்கிறார் சிவா.
இரண்டு விலைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் அப்பா நினைக்கிற அளவுக்கு தான் ஊதாரி இல்லை என்று மகன் அவர் நினைப்பில் விடும் ‘ பஞ்ச் ‘ இது. அதேபோல், “இதுதான் பிரச்சினையே.. நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கிறதே இல்லை..!” என்கிற பாலாஜி சக்திவேலுக்கு பதிலாக “இதுதான் பிரச்சினையே… எனக்கு புரியற மாதிரி நீங்க சொல்றதே இல்லை..!” என்கிறார் சிவா.
இப்படி வெளிப்படும் தலைமுறை இடைவெளிகளில் நகைச்சுவை ஆப்புகளை செருகிக் கொண்டே போயிருக்கும் ராமின் உத்தி, சிவாவும் கை கோக்க, அது நன்றாகவே கை கொடுத்திருக்கிறது.
அப்படியே இந்தத் தலைமுறைக்கு வந்தால் சிவாவின் மகன் மிதுல் ரயான், 4800 ரூபாய் கொடுத்து வாங்கிய ஸ்கேட்டிங் போர்டையோ, 4000 ரூபாய் கொடுத்து வாங்கிய செருப்பையோ பெரிதாக நினைக்காமல் வெறும் காலுடன் காடு மேடு எல்லாம் அலைவதையும், கல் வைத்து கக்கா போய் அதை இலையில் துடைத்துக்கொள்ள விரும்புவதுதான் எதார்த்தம்.
அதில் செயற்கைத்தனம் கலந்து விடாத மிதுலின் இயல்பான நடிப்பு கவர்ந்து இழுக்கிறது. சிவாவாலேயே விவரிக்க முடியாத அஞ்சலியுடனான உறவை, ‘ கிரஷ்” தான் என்று பார்த்த நேரத்தில் கண்டுபிடித்து விடும் மிதுல் , தன்னுடைய கிரஷ்ஷையும் பார்க்க, அவரிடம் அனுமதி கேட்கும் அழகே அழகு..!
சிவாவின் (காதல்) மனைவியாக வரும் கிரேஸ் ஆண்டனி நிஜத்திலேயே அடுத்த வீட்டுப் பெண் போல மனதை அள்ளுகிறார். கணவனின் கடன் சுமையைக் குறைக்க, ஊர் தாண்டிச் சென்று எக்சிபிஷனில் சேலை விற்று 40 ஆயிரம் ரூபாய் வசூலித்து கொண்டு வருவதில் அந்தக் காதல் நன்றாகவே வெளிப்படுகிறது.
அது மட்டும்தான் காதலா..? என்றால் இல்லை… கணவனை “கோகுல்..!” என்று அழைக்க, “புருஷனை பேர் சொல்லி கூப்பிடுறியேம்மா..!” என்று கேட்பவர் முடிப்பதற்குள், ” டேய்… கோகுல்..!!” என்று அழைப்பதுவும் காதலுக்கு மரியாதைதான்.
அதையும் தாண்டி தன் காதல் கணவனை ‘ சாத்தான்’ என்று சகோதரி திட்டியதை நினைவில் வைத்து, சிவாவைத் திட்டும்போது, “சாத்தானே..!” என்று அழைப்பதும் காதல் டூ தி கோர்..!
கொஞ்ச நேரமே வந்தாலும், அஜு வர்கீஸ் – அஞ்சலி தம்பதி மனதைக் கவர்கிறார்கள். கடந்து போன தன் கிரஷ்ஷை திடீரென்று நேரில் பார்க்கும்போது சிவாவுக்கு ஏற்படும் அதே உணர்வுதான் திரையில் திடீரென்று அஞ்சலியைப் பார்க்கும் போது நமக்கும் ஏற்படுகிறது.
அதேபோல் சிவா – அஞ்சலிக்குள் இருக்கும் உறவைக் கொச்சைப்படுத்தி விடாமல் அவர்களைத் தனிமையில் விட்டு விலகிச் செல்லும் அஜு வர்கீஸ்… ஜென்டில்மேனுக்கும் சற்று மேல்.
‘ அப்பா தன் கிரஷ் – உடன் பேசிக் கொண்டிருக்கிறார்…’ என்று மகன் சொன்னதைக் கேட்டு பெரிதாக திடுக்கிடாமல், கணவனையும் சந்தேகிக்கத் தோன்றாமல்… அதே நேரத்தில் கணவனை வீடியோ காலில் வரச் சொல்லி அஞ்சலி முகத்தை கிரேஸ் பார்த்து விடுவதில் இயல்பான மனைவிக்கு உள்ளிருக்கும் பெண்மை வெளியே வந்து இலக்கியச் சுவை பெறுகிறது..!.
அஞ்சலி தம்பதிக்கு நேர் மாறாக அடுத்த சந்திப்பில் வரும் விஜய் யேசுதாஸ் தம்பதி வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தை சிவாவுக்கும், மிதுலுக்கும் புரிய வைக்கிறார்கள்.
‘ நான் சொல்வதை நீ கேட்டுதான் ஆக வேண்டும்…’ என்கிற கண்டிப்புடன் வரும் மிதுலின் கிரஷ் பாப்பாவின் ஆதிக்க எண்ணமும், அந்த செருக்கே கவர, அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் மிதுலின் ரசனையும் ‘ ஹைக்கூ..!’
இன்னொன்று… இந்தப் படம் மூலம் உலகோர் தெரிந்துகொள்ள வேண்டியது கிரஷ் களுக்கான குறியீடு ‘சூரியகாந்திப் பூ..!’
நட்சத்திர ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் இதில் கட்டுச் சோற்று மூட்டையை கட்டவிழித்தது போல் காடு மேடு எல்லாம் பயணித்து, பாத்திரங்களின் களைப்பை உணரச் செய்து பசியாற்றுகிறார்.
விரித்து விரித்துப் பார்த்தால் கூகுள் மேப்பில் விவரங்கள் கூடுவது போல நுணுக்கி நுணுக்கிப் பார்த்தால் இப்படி ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் படத்துக்குள் இருக்கின்றன.
ஆனால் ஒட்டுமொத்தப் படமாகப் பார்க்கும் போது உள்ளே அனுபவப்படும் வாழ்க்கை இயல்புக்கு நெருக்கமாக இல்லாதது, எல்லா பாத்திரங்களுக்குள்ளும் இருக்கும் பொறுப்பற்ற தன்மை, தடுக்கி விழ வைக்கும் பாடல்கள் தரும் சலிப்பு என்று குறுக்குவாட்டில் குறைகளும் இல்லாமல் இல்லை.
10 நிமிடத்திற்கு ஒரு பாடல் படத்தில் ஒலித்துக் கொண்டே இருப்பது புதுமையான கலை அனுபவம்தான். ஆனால், அதுவே ஒரு கட்டத்தில் இடையூறாகவும் இருக்கிறது. அதனால் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் பாடல்களை எழுதிய மதன் கார்க்கியின் உழைப்பு எடுபடாமல் போயிருக்கிறது.
மிதுல் தன் கிரஷ்ஷை ஏமாற்றுவது போல் வாத்து முட்டையில் இருந்து டைனோசர் வராது என்று தெரிந்தாலும் அப்படி எதிர்பார்ப்பதில் இருக்கும் சுவாரஸ்யம்தான் வாழ்க்கை என்பதுதான் ராம் சொல்ல வரும் செய்தியாக இருக்கிறது.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை வரும் ஒட்டுமொத்த நேர்மறை விமர்சனங்களும் அப்படிப்பட்டதுதான்.
டைனோசரை எதிர்பார்க்காமல் வாத்து முட்டை கிடைக்கும் என்று நினைத்துப் போனால் நிச்சயம் அது ஏமாற்றாது…
அவரவரின் உணர்வுக்கும் ரசனைக்கும் ஏற்ற விதத்தில் வாத்து முட்டைக்குள் இருந்து சிலருக்கு டைனோசரும் வெளிவரக் கூடும்..!
– வேணுஜி