எந்தப் பகுதியும் வீணாகாமல் முழுவதும் பயன்படும் மரம் என்று வாழையைச் சொல்வார்கள். ஆனால் வாழையை விட உயர்ந்த மரம் ஒன்று இருக்கிறது அதுதான் பனைமரம்.
ஏனென்றால் வாழைக்குக் கூட தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் தன்னை வளர்த்தவனுக்கு அந்த வேலையையும் வைக்காமல் வாழும் காலம் முழுவதும் அள்ளித் தருகிற தாவரமாக இருக்கும் பனை மரத்தின் பெருமையைச் சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது.
அத்துடன் பலன் எதிர்பார்க்காமல் அள்ளித்தரும் பனையை வைத்து ஆதிக்க மனம் கொண்டோர் பனையின் சொந்தக்காரர்களையே எப்படி அடிமைகளாக நடத்தி பணம் பண்ணுகிறார்கள் என்பதையும் சமூகத்து ஏற்றத்தாழ்வுகளையும் வைத்து அற்புதமாகக் கதை பின்னி இருக்கிறார் எம். ராஜேந்திரன்.
படத்தின் தயாரிப்பாளரும் ஆன அவரே படத்தின் பிரதான வில்லனாகவும் பாத்திரம் ஏற்றிருப்பது சிறப்பு.
நாயகனாக புதுமுகம் ஹரிஷ் பிரபாகரன் பாத்திரத்துடன் ஒன்றி இருக்கிறார். படித்தவராக இருந்தாலும் பட்டணத்துக்கு வந்தால் பழைய பேப்பர் வியாபாரம் – கிராமத்துக்கு வந்தால் பனைப் பொருள் வியாபாரம் என்று இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.
நாயகி மேக்னா, ஐயர் ஆத்துப் பெண்ணாக வந்து அசர அடிக்கிறார். இப்படி ஒரு பெண் விரும்பி வந்து காதலித்தும் விலகி விலகிப் போகும் ஹரிஷை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
பனை மர அளவு உயரத்துடன் வரும் வில்லன் எம்.ராஜேந்திரன் கதைக்குள் மட்டுமல்லாமல் படத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறார். பத்து வரி வசனம் கூட பேசாமல் பார்வையிலேயே மிரட்டும் அவர் மட்டும் பெரிய இயக்குனர்களின் கண்ணில் பட்டால் பெரிய நடிகராகவே வலம் வருவார்.
நாயகனின் பாசமுள்ள பாட்டியாக வரும் வடிவுக்கரசியின் முடிவு நெகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜேந்திரனின் மனைவியாக வரும் அனுபமா குமார் ஒரே வீட்டுக்குள் கணவனுடன் பிரிந்து இருந்தாலும் கிளைமாக்சில் மட்டும்தான் கணவனுடன் பேசுகிறார்.
ஆனால் அந்தப் பேச்சுதான் கதையின் மூச்சு.
கஞ்சா கருப்பும், இமான் அண்ணாச்சியும் அங்கயே சிரிக்க வைக்கிறார்கள்.
ரிஷா போடும் ஒரு குத்தாட்டம் மஜா.
பனைக்காவியமாக பாடல்களை எழுதித் தள்ளியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
அவற்றுக்கு வாகான இசையமைத்திருக்கிறார் மீரா லால்.
சிவக்குமார் ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதை நடக்கும் களத்தை கவனமாகப் பதிவு செய்திருக்கிறது.
உலகே போற்றும் உடன்குடி கருப்பட்டியிலும் கலப்படம் கலந்துவிட்ட கவலையையும் படம் கலந்து பேசுகிறது.
பனை – கலப்படம் இல்லா கருப்பட்டி..!
– வேணுஜி