October 9, 2025
  • October 9, 2025
Breaking News
September 21, 2025

படையாண்ட மாவீரா திரைப்பட விமர்சனம்

By 0 135 Views

மறைந்த அல்லது வாழும் தலைவர்களை பற்றிய சுய சரிதத்தை பயோபிக் படமாக எடுக்கும் வழக்கம் எப்போதும் உண்டு.

ஆனால் அதில் உண்மை சம்பவங்களே இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் முன்னாள் எம்எல்ஏவும், மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் மாநாடு காடுவெட்டி குருவின் வாழ்க்கையை கொஞ்சம் கமர்சியல் கற்பனையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குநர் வ. கௌதமன்.

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மறைந்த அவரைப் பற்றிய தவறான தகவல்களை நீக்கும் பொருட்டும். அவர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் எவ்வளவு உழைத்தவர் என்பதை சொல்லும் விதமாகவும் இந்த படைப்பை தந்திருக்கிறார் அவர்..’

காடுவெட்டி குரு பாத்திரத்திலும் இயக்குநர் வ.கெளதமனே நடித்திருக்கிறார். ஆனால் முன்னவருக்கு சற்றும் உருவப் பொருத்தம்  இல்லாமல் தெரிவதுடன் ஒரு ஹீரோவுக்கான அடையாளங்களுடன் தெரியும் கௌதமன் ஒரு கமர்சியல் படத்துக்கான நியாயங்களுடன் தெளிவாக நடித்திருக்கிறார்.

நடனம், சண்டை என்று எல்லா ஏரியாக்களிலும் கௌதமன் புகுந்து வெளிப்படும் போது இப்படி எல்லாம் காடுவெட்டி குரு செய்திருப்பாரா என்று நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

நாயகியாக வரும் பூஜிதா பொன்னாடா காட்சிக்கு அழகு சேர்த்தாலும் இந்த மண்ணின் அடையாளங்கள் இல்லாமல் போனது ஒரு குறைதான்

கௌதமனின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, பிளாஷ்பேக்கில் மட்டுமே வந்தாலும் தன் பாத்திரத்தை அழுத்தமாக  பதிவு செய்கிறார். 

அதே ஃப்ளாஷ் பேக்கில் இளம் பருவ காடுவெட்டி குரு பாத்திரத்தில் நடித்திருக்கும் கௌதமனின் மகன் தமிழ் கௌதமனும் அப்பாவுக்கு குறைவின்றி நடித்து பெருமை சேர்க்கிறார். அப்பாவும் மகனுமாகவே ஆனதால் உருவப் பொருத்தம் பக்காவாக இருக்கிறது.

இவர்களுடன் ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ் ஒரு நெட்வொர்க் தங்கள் பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள்

ஜி.வி.பிரகாஷ் இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை வழக்கம் போல் தியேட்டரில் இடி முழக்கம் ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனும் படத்தொகுப்பாளர் ராஜா முகமதுவும்  கைகோர்த்து படத்தை பரபரப்புடன் நகர்த்துகிறார்கள்.

காடுவெட்டி குருவின் வாழ்க்கையை  மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் வ.கெளதமன் அவரைப் பற்றி தெரியாத பல விஷயங்களை நமக்கு கடத்தி இருக்கிறார்.

ஆனால் அதை ஒரு பயோபிக் போல சொல்லாமல் கமர்ஷியல் படமாக கொடுத்து  இருப்பதில் படம் பார்த்த திருப்தி இருந்தாலும் நம்பகத்தன்மை குறைவாக இருக்கிறது.

ஆனால் படம் வெளி வருவதற்கு முன்பு இது ஒரு குறிப்பிட்ட இனத்தவரை பெருமைப்படுத்தும் படம் என்பது போன்ற எண்ணத்தை கொடுத்து இருந்தாலும் படத்தில் அப்படி எந்த இனத்தையும் தூக்கிப்பிடித்து சொல்லாமல் இருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.

தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும் பொதுவானவர் காடுவெட்டி குரு என்ற எண்ணத்தை தோற்றுவித்திருப்பதில் கௌதமன் வெற்றி அடைகிறார்.

படையாண்ட மாவீரா – உண்மையும் கற்பனையும்..!

– வேணுஜி