90களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான விக்னேஷை இப்போது இருக்கும் 2கே கிட்ஸ் அறிவார்களா என்பது தெரியாது. ஆனால் 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் அறிமுகமானவர்தான் விக்னேஷ்.
தமிழ் சினிமாவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிற பாலு மகேந்திராவின் கரங்களால் ஹீரோவாக அறிமுகமாக இருந்த விக்னேஷ் அப்போது அது முடியாமல் போக பின்னாளில் அதே பாலு மகேந்திராவின் ராமன் அப்துல்லா படத்தில் இரு நாயகர்களில் ஒருவரானார்.
அப்படிப்பட்டவரை இப்போது ஹீரோவாக்கி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விவேக பாரதி.
அழகிய கிராமத்து கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் காயத்ரி கதாநாயகி ஆகிறார். அவரை ஒருதலையாய் காதலிக்கிறார் புதுமுகம் பிரதாப். ஆனால் அவர் காதலை ஏற்க மறுக்கிறார் காயத்ரி.
அதற்கு அவர் சொல்லும் காரணம் சிறையில் இருக்கும் தன் மாமன் வெளியே வந்ததும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதுதான். சிறிய வயதிலேயே சிறைக்கு போன அவரது மாமன் பாத்திரத்தில் விக்னேஷ்.
அவர் ஏன் சிறைக்குப் போனார்- திரும்பி வந்ததும் காயத்ரியைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாரா – காயத்ரி மீதான பிரதாப்பின் காதல் என்ன ஆனது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது படம்.
அன்றைக்குப் பார்த்ததைப் போல் இருப்பதே விக்னேஷுக்கு பலம். அவருடன் அறிமுகமானவர்கள் எல்லாம் இப்போது சீனியர் நடிகர்களாக ஆகிவிட இவரை இன்னும் கதாநாயகனாகவே நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவது பெரும்பலம்.
அவரும் தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். கடைசி காட்சியில் வைத்து காயத்ரியை ஏன் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.
அதேபோல் கதையை முழுமையாக தாங்கும் மேடம் காயத்ரிக்கு. வலிய வந்த காதலை ஏற்கவும் முடியாமல் சிறுவயதில் இருந்து கோட்டை கட்டி வைத்திருந்த காதலை அடையவும் முடியாமல் அவர் படும் பாடு பரிதாபம்.
அழகான இந்த தமிழ் நடிகைக்கு திரைப்படங்களில் ஏன் வாய்ப்புகள் குவியவில்லை என்பது பெரிய கேள்வி.
இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் பிரதாப் பார்வைக்கு அழகாக இருக்கிறார். பெரிய இடத்து பையனானஅந்த கேரக்டருக்கு பொருத்தமானவராகவும் இருக்கிறார்.
படத்தின் அடிநாதம் சேரனின் பாண்டவர் பூமியை நினைவு படுத்தினால் அதுவும் இந்த படத்துக்கு பலம்தான்.
கடைசியில் இப்படித்தான் படம் முடியும் என்று நாம் நினைத்தால் அப்படி இல்லாமல் இன்னொரு இடத்தில் முடிகிறது. அதை இந்தப் படத்தின் புதுமை என்று கொள்ளலாம்.
காமெடிக்காக கஞ்சா கருப்புவை போட்டு இருக்கிறார்கள். அவர் இன்னும் கூட நம்மை சிரிக்க வைத்திருக்கலாம்.
காயத்ரியின் அப்பாவாக இயக்குனர் விவேக பாரதியே நடித்திருக்கிறார். இள வயதிலும் முதிய வேடத்திலும் இரண்டு கெட்டப்புகள் அவருக்கு. அந்த பாத்திரம் அவர் மனதுக்குள் இருந்து வந்ததால் அதை அவரால் இயல்பாக செய்ய முடிந்திருக்கிறது.