முன்னாள் நகைச்சுவை அரசன் கவுண்டமணியையும், இந்நாள் நகைச்சுவை இளவரசன் யோகி பாபுவையும் இணைத்து விட்டால் அது எத்தகைய வெற்றியை பெறும் என்ற கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைப் படம்.
அது நடந்ததா பார்க்கலாம்.
வீடு, வாசல், அன்பான மனைவி என்று வாழ்ந்து வரும் அரசியல்வாதி கவுண்டமணி ஒரு தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய காரணத்துக்காக ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கப்படுகிறார். அவரது கார் டிரைவராக யோகி பாபு இருக்கிறார்.
தன் வாழ்வில் நடந்த ஒரு சோகத்தின் காரணமாக மணமாகாத தன் மூன்று தங்கைகளுக்கும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த மூன்று சகோதரர்களுடன்தான் திருமணம் நடத்தி வைப்பேன் என்கிற பிடிவாதத்துடன் இருக்கிறார்.
இதனால் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக நினைக்கும் மூன்று தங்கைகளும் ஆளுக்கு ஒருவரைக் காதலிக்கிறார்கள். அண்ணனை வழிக்குக் கொண்டு வர அவர்கள் மூவரையும் சொந்த சகோதரர்கள் போல் நடிக்க வைத்து வீட்டில் குடி ஏற்றுகிறார்கள்.
அத்துடன் சிங்கமுத்து தலைமையிலான ஒரு திருட்டுக் குடும்பமும் அந்த மூன்று பெண்களுக்குக் குறிவைத்து தன் மூன்று மகன்களை கட்டி வைக்க நினைக்கிறது.
இந்நிலையில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வர தனக்கு சீட்டு கொடுக்காத கட்சியிலிருந்து விலகும் கவுண்டமணி சுயேட்சையாக நிற்க, கட்சி மேலிடமோ அவரிடம் டிரைவராக வேலை பார்த்த யோகி பாபுவுக்கு சீட் கொடுக்கிறது.
கட்சி ஆதரவுடன் இருந்தபோதே ஒரு ஓட்டு வாங்கிய கவுண்டமணி இப்போது சுயேட்சையாக வெல்ல முடிந்ததா, அவரை எதிர்த்த யோகி பாபு என்ன ஆனார், கவுண்டர் தங்கைகளுக்கு திட்டமிட்டபடி திருமணம் நடந்ததா என்பதெல்லாம் மீதிக் கதை.
கவுண்டமணியை மீண்டும் பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் விவேகம் இருக்கும் அளவுக்கு அவரிடம் பழைய வேகம் இல்லை. மிஸ் ஆகாத டைமிங்கில் கவுண்டர் கொடுத்தாலும், பழைய உற்சாகம் மிஸ் ஆகிறது.
அப்போதும் சளைக்காமல், “நான் தோற்றால் மொட்டை போட்டுக் கொள்கிறேன்…” என்று சவால் விடும் யோகி பாபுவைப் பார்த்து “இந்த முடியை வச்சுதான் உனக்கு பிழைப்பு ஓடுது… வேற ஏதாவது சவால் விடு…” என்பது மாஸ்(டர்) கவுண்டர்.
யோகி பாபுவுக்கு சிறிய பாத்திரம்தான். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்க முடியும்.
கவுண்டமணியுடன் உடன் பிறந்தவர்கள்தானா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு அவரது மூன்று தங்கைகளாக வரும் நடிகைகளும் பளிச்சென்று கவர்கிறார்கள்.
அவர்களின் ஜோடிகளாக, முறையே சிங்கமுத்து, மயில்சாமி, ஆனந்த் பாபுவின் வாரிசுகள் வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ் களம் இறங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.
இவர்களுடன் ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், செண்ட்ராயன், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார், மணவை பொன் மாணிக்கம் என ஒரு நகைச்சுவைக் கூட்டமே களம் கண்டிருக்கிறது.
சித்தார்த் விபின் இசை வழக்கம் போலவே குதூகலம் அளிக்கிறது.
எஸ்.ஏ.காத்தவராயனின் ஒளிப்பதிவில் குறையில்லை.
எழுதி இயக்கியிருக்கும் சாய் ராஜகோபால், இவ்வளவு பெரிய காமெடி கூட்டத்துக்குத் தீனி போடும் வகையில் ஸ்கிரிப்டில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த சீசனின் முழு நீள நகைச்சுவைப் படமாக இது இருந்திருக்கும்.
ஒத்த ஓட்டு முத்தையா – கவுண்டர் பாயிண்ட்..!
– வேணுஜி