யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது… விமர்சனங்களில் கூட யாராலும் கண்டுகொள்ளப்படாமலிருக்கும் ஒலிக்கலவையாளர் ஒருவர் ஒரு படத்தின் கதாநாயகனாக முடியுமென்பது.
இதில் அப்படி ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியை நாயகனாக்கி அவருக்காகவே ஒரு கதையைத் தேர்வு செய்து படைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் ராஜீவ் பனக்கலும், இயக்குநர் பிரசாத் பிரபாகரும்.
படத்தின் தலைப்பைப் போலவே ரசூல் பூக்குட்டியே இந்தப்படக் கதையை ஒரு நேர்காணலில் சொல்வதைப் போல் படம் தொடங்குகிறது.
அமெரிக்க நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரது கேரள நண்பர் அஜய் மேத்யூவுக்கு திருச்சூரில் வருடா வருடம் நடக்கும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவைப் படமெடுத்துத் தர ஒத்துக்கொள்கிறார் ரசூல். அவருக்கும் அதில் ஆத்மதிருப்தி கிடைக்கும் என்ற காரணத்தால்.
ஆனால், அஜய் மாத்யூவின் முதலாளித்துவ தோரணைகளும், ஈகோவும் ரசூல் பூக்குட்டியை மிகவும் காயப்படுத்துகின்றன. அதனால், அதிலிருந்து விலக நினைக்கிறார் ரசூல். ஆனால். போட்ட ஒப்பந்தப்படி அவரால் வெளியேற முடியவில்லை. அத்துடன் ரசூலின் மனத்தை நெகிழச்செய்யும் நிகழ்வொன்று எதிர்பாராமல் நடக்க, அதற்காக மீண்டும் பூரம் திருவிழாவைப் படமாக்கவும், அதன் ஒலியைப் பதிவு செய்யவும் ஒத்துக்கொள்கிறார்.
இதனிடையே அஜய் மேத்யூவுக்கும், அவரது பார்ட்னருக்கும் ஏற்படும் மோதலில் அவர் இந்தத் திட்டத்தைக் கெடுக்க நினைக்கிறார். இத்தனை இடர்பாடுகளுடன் ரசூல் ஏற்றுக்கொண்ட பணியை முடிக்க முடிந்ததா என்பது கதை.
இது முழுநீளத் திரைப்படமாகத் தெரியவில்லை. ரசூல் பூக்குட்டி அவராகவே வருவதும் மேற்படி அசைன்மென்ட்தான் மொத்தப் படமென்பதாலும் ஒரு ‘டாகு டிராமா’வைப் போல் நகர்கிறது படம்.
ரசூல் பூக்குட்டி இயல்பாக நடித்திருக்கிறார். அஜய் மேத்யூதான் கொஞ்சம் சினிமாத்தனமாக நடித்திருப்பதாகத் தோன்றுகிறது. இப்படி ஒரு சுயநலக்காரருக்கு அந்த அமெரிக்க நண்பர் ஏன் பரிந்துரை செய்து ரசூலின் நேரத்தை வீணடிக்கிறார் தெரியவில்லை.
பின்பாதியில் வரும் சிறப்புத் திறனாளிகளின் எபிசோட் மனதை நெகிழ வைக்கிறது. அசைன்மென்ட்டை முடிப்பதைவிட அந்த சிறப்புத் திறனாளிகளை பூரம் நிகழ்வை உணரவைத்து மகிழவைப்பதே வெற்றி என்று ரசூல் உணர்வது நல்ல முடிவு.
பூரம் திருவிழாவை நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியமைக்காக ஒட்டுமொத்தக் குழுவுக்கும் நன்றி சொல்லலாம்.
ஒரு கதை சொல்லட்டுமா – கண்ணை மூடிக்கொண்டு(ம்) பாராட்டலாம்..!