தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அட்லீ எடுத்த படங்கள் இன்னொரு வெற்றிப்படத்துடன் இணைத்துப் பேசப்பட்டன. இப்போது கதைத் திருட்டுப் புகாரிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார் அவர்.
தமிழில் மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து அவர் இயக்கி முடித்து இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘பிகில்’ படக்கதை தன்னுடையது என்று கே.பி.செல்வா வழக்குத் தொடர்ந்தார். அது காப்புரிமை வழக்காக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்க, மீரான் என்பவரும் பிகில் படக்கதை தன்னுடையது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.
ஆனால், அவையெல்லாம் பிகில் பட வெளியீட்டை எதுவும் செய்ய முடியாமல் படமும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஹைதராபாதில் இயக்குநர் நந்தி சின்னி குமார் என்பவர் கச்சிபவுலி காவல் நிலையத்தில் பிகில் வெளியாவதற்கு முன்பே டிரைலரைப் பார்த்துவிட்டு அந்தக்கதை தான் படமாக்கத் தயாராக வைத்திருந்த கதையை ஒத்திருந்தது என புகார் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அது மராட்டிய கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் அகிலேஷ் பால் வாழ்க்கைக் கதை எனவும் அதற்காக அவருக்கு 12 லட்சம் கொடுப்பதாக முடிவாகி அதில் 5.5 லட்சத்தைக் கொடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இப்போது ‘பிகில்’ படம் அப்படியே அந்தக் கதையுடன் இருப்பதில் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கச்சிபவுலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளதாம்.
மேற்படி புகார்களிலிருந்து மாறுபட்டு இந்தக்கதை வாழ்க்கைக் கதையாக இருக்க, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..!