அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படம் குறித்து அசோக் செல்வன் பேசும் போது , ‘ஓ மை கடவுளே’ என் வாழ்வில் முக்கியமான படம். ரொம்ப வருஷமாக அஷ்வத்தை எனக்கு தெரியும். இரண்டுபேரும் சேர்ந்து ஷார்ட் பிலிம் செய்திருக்கிறோம். அவர் டைரக்டர் ஆன நிலையில் ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம். நம்ம தமிழில் ரொமான்ஸ் கதைகள் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால காதல் கதை பண்ணலாம்னு முடிவு செய்து இப்படத்தை உருவாக்கினோம். இதை என் அக்கா அபிநயா செல்வம் எனக்காக தயாரிக்க முன்வந்தாங்க.
இந்த படத்துலே ஹீரோயின் ரோல் முக்கியமானது. ரித்திகா சிங் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இரண்டு பேரும் நினைத்தோம். அவங்க தேர்ந்தெடுத்து படங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால ஒத்துக்குவாங்களானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் கதை கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சது. படமே அவங்கள சுத்திதான் நடக்கும்.
ரித்திகா மிக நட்பாக இருந்தார். அது நடிக்கும் போது எனக்கு உதவியாக இருந்தது. வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவங்களுக்கு இது தமிழ்ல முதல் படம். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடித்திருக்கிறார்..!” என்றார்.
விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் 25 நிமிடங்களுக்கு படத்தில் வருகிறதாம். அப்போது நமக்கு இயல்பாகவே தோன்றிய கேள்வி. “விஜய் சேதுபதி நட்புக்காக நடித்தாரா..? இல்லை சம்பளம் வாங்கிக் கொண்டாரா..?”
நெளிந்த அசோக் செல்வன், “கண்டிப்பாக நட்புக்காகத்தான் நடித்தார். ஆனால், சம்பள விஷயம் பற்றி இப்போது பேச வேணாமே..?” என்றார்.
அப்போ கடவுள் ‘வரம்’தான் தந்திருக்கிறார் என்பதை நாமாக புரிந்துகொள்ள வேண்டியது..!
விஜய் சேதுபதி கடவுளாக வந்த வீடியோ கீழே…