இரண்டு நாள்களுக்கு முன் கருத்துகளைப் பதிவு செய் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.பாக்யராஜ், “பெண்கள் இடம் கொடுக்காமல் ஆண்களால் தப்பு செய்ய முடியாது…” என்ற கருத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களுக்கும் குற்றத்தில் சம்பந்தம் என்று பேசினார்.
இதற்கு பல முனையிலிருந்தும் எதிர்ப்புகள் உருவாகி வரும் நிலையில் நடிகர் சங்க நாசர் அணி உறுப்பினரான பூச்சி முருகன் தன் வலைதள பக்கத்தில் கே.பாக்யராஜ் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அது வருமாறு…
“அகில இந்திய அளவில் திரைக்கதை அமைப்புக்கு பெயர் பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. நடிகர் சங்க தேர்தலில் கூட அவர் வியாபாரச்சதி வலைக்குள் சிக்கி கொண்டாரே… என்று எண்ணி வருத்தப்பட்டு இருக்கிறேன்.
ஆனால் பெண்கள் பற்றி அவர் பேசி இருக்கும் கருத்துகள் மிகவும் கண்டனத்துக்கு உரியது.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு பெண்களும் ஒரு காரணம் என்று பொத்தாம் பொதுவாக சொல்வதை எந்த ஒரு தந்தையும், கணவனும், சகோதரனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பிஞ்சு குழந்தைகள் பாலியல் வன்முறையால் சிதைக்கப்படும் செய்திகள்
பாக்யராஜ் கவனத்துக்கு வரவில்லையா? அதிலும் அவர் சொன்ன ஊசி – நூல் உதாரணம் மிகவும் அபத்தமானது. சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஒரு காட்சியில் இதை குறிப்பிட்டு வசனம் பேசுவார். அந்த வசனத்தை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். இங்கே எந்த ஊசியையும் அனுமதி கேட்டு நூல் நுழைவதில்லை. இந்த வசனத்தின் வலிமை அவருக்கு புரிய வேண்டும்.
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் கூக்குரல் இன்னும் நம் காதுகளில் ஒலித்து கலங்க வைக்கும் நிலையில் அந்த பெண்கள் மீதே பழி போடுவது எந்த வகையில் நியாயம்?
திரைத்துறையில் இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களது சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு, சுயகவுரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த சூழலில் ஒரு மூத்த நடிகர், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்,
அனுபவம் வாய்ந்த இயக்குனர் இப்படி பேசியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
பெண்கள் தான் பாக்யராஜின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அவர்களையே அவமானப்படுத்தும் வகையில் பாக்யராஜ் பேசி இருப்பது கூடா நட்பு கேடாய் விளையும் என்னும் வரியை நிரூபிக்கும வகையில் பாக்யராஜ் சில நச்சு கிருமிகளுடன் சேர்ந்ததால் மாறி விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படுகிறது..!”
– பூச்சி எஸ்.முருகன்
இந்நிலையில் பாக்யராஜின் பேச்சு விவகாரம் தொடர்பாக ‘தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம்’ சார்பாக கே.பாக்யராஜ் மீது சட்டபூர்வ நடவ்டிக்கை எடுக்கக் கோரி சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.