கஜா புயல் கரை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை (18-11-2018) புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
19, 20-ம் தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி 21-ந்தேதி தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இதன் விளைவாக வரும் 19-ந்தேதி முதல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழையும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் குறிப்பாக 21-ந்தேதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.