பெண்கள் மீதான வன்முறை என்பது அன்றாடம் நாம் கேட்கின்ற, பார்க்கிற, படிக்கின்ற விசயங்களாக மாறி வருகின்றது. அதில் பாதிக்கப்படும் பெண் ஒருவேளை நம் வீட்டு பெண்களாக இருந்தால்…
எண்ணும்போதே, சிலருக்கு பகீரென்றிருக்கும். அத்தகைய பெண்கள் மீதான வன்முறைகளை கையாள்பவர்களின் மீது சவுக்கு எடுத்து விளாசும் விதமாக ஒரு திரைப்படம் உருவாகி வருகின்றது.
மாரிச்செல்வன் கதை எழுத, அதற்கு திரைக்கதை அமைத்து, இயக்கியிருப்பதோடு, நடிகராகவும் அறிமுகம் ஆகிறார் ஈஷான். ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ, எடிட்டிங் மா தியாகராஜன் மேற்கொள்ள, எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்குகிறது.
ஈஷான் மேலும் குறிப்பிடும்போது, ஒரு படைப்பாளியின் சமூக பொறுப்பு என்பது திரைப்படம் வெற்றி என்பது மட்டும் அன்று. அத்திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள், அதனால் உண்டான மாற்றங்கள் என்னென்ன என்பதிலேயே அடங்கியிருக்கிறது. இத்திரைப்படம் பெண்களின் மீதான வன்முறைகளை தோலுரித்து காட்டுவதோடு, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.
முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.
விரைவில் டைட்டில், ட்ரெய்லர் என வெளிவர இருக்கும் இத்திரைப்படம் சமூகத்தில் விவாத அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.