தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டனர்.
இந்த சூழலில் கட்சிகளுக்கிடையே கட்சி தாவல் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று தான்.
ஆனால் இன்று அதிரடி செய்தியாக அதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி அதிமுக கட்சியிலிருந்து விலகி தினகரனின் அ.ம.மு.க வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை மர்மத்தையும் ஏற்படுத்தி உள்ளதாம் .
இந்த முனுசாமி அதிமுக-வின் ஸ்போக் மேனாக வலம் வரும் ஜெயகுமார் வகித்து வந்த மீனவரணி பொறுப்பாளர் என்பதால் அதிகார வர்க்கமே அவசர ஆலோசனையில் ஈடுபடப் போகிறது என்கிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் இருக்க வேண்டிய இடம் என்பதை அம்மாவின் நிஜமான தொண்டர்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறார்கள் .
அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி அக்கட்சியில் இருந்து விலகி கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையை ஏற்று இன்று அமமுகவில் இணைந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இது குறித்து விசாரித்த போது எம்.சி.முனுசாமி -யைத் தொடர்ந்து அமமுகவை எதிர்நோக்கி பலரின் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.