கரோனா வைரஸ் பரவலைக் குறைக்க நாடு முழுவதும் 144 தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நகரங்கள் யாவும் வெறிச்சோடி கிடக்கின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மனிதர்கள் வீட்டில் அடைப்பட்டு இருப்பதையும் பல்வேறு விலங்குகள் உயிரியல் பூங்காக்களில் அடைப்படு கிடப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா வேதனைப்பட்டுள்ளார்.
இது குறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
”புரிஞ்சுக்கோங்க… நான் எப்போதும் இந்த உயிரியல் பூங்காக்களை ஆதரிச்சது கிடையாது. அங்கே போவதற்கும் யாரையும் ஊக்குவிச்சதும் கிடையாது. சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்குத் தொய்வாகவும், வெளியே செல்ல ஆசையாக இருக்கிறது. நமது மகிழ்ச்சிக்காக விலங்குகளை அடைத்து வைக்கும்போது அவற்றுக்கும் இப்படித்தானே இருக்கும்?
உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளைக் காட்ட விரும்பினால் உங்கள் கணினியிலோ அல்லது சரணாலயத்துக்கோ அழைச்சுப் போய் காட்டுங்க. ஆனால் தயவுசெஞ்சு அவற்றை அடைச்சு வைப்பதை நிறுத்துங்கள். மன அழுத்தம் மற்றும் சோகத்தால் அவை இறக்கின்றன.
நினைவிருக்கட்டும். நாம் அங்கே சென்று டிக்கெட் வாங்குவதால்தான் உயிரியல் பூங்காக்கள் நிரம்பி வழிகின்றன. அதே சமயம் நாம் அங்கு செல்வதை நிறுத்தி விட்டால் காட்டுக்குச் சொந்தமான இயற்கையின் படைப்புகளை அடைத்துவைப்பதை அவர்கள் நிறுத்தி விடுவார்கள். கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன், விலங்குகள் நம்மோடு வாழ்பவைதான். ஆனால் நமக்காக வாழ்பவை அல்ல”.
நமீதா சிந்தனை நல்ல சிந்தனைதான்..!