March 22, 2025
  • March 22, 2025
Breaking News
March 25, 2020

யோகிபாபு திருமண வரவேற்பு எப்படி நடக்கும்..?

By 0 701 Views

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருமணம் நடந்தது. அது ரகசியமாக குலதெய்வம் கோவிலில் நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஆசைப்பட்டார். 

அதற்காக ஏப்ரல் 5-ம்தேதியை அவர் நிச்சயித்தார். பல பேருடன் கலந்து ஆலோசித்து சென்னையின் நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டலில் வைத்து திருமண வரவேற்பு நடத்துவதாக இருந்தது. 

அதனால், கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தன் திருமண வரவேற்பு அழைப்பிதழை விஐபிகளுக்கு நேரிலேயே சென்று வழங்கி வந்தார்.

யாரும் அவசியமின்றி பாதுகாப்பின்றி வெளியில் செல்லக் கூடாது என்பது போன்ற கொரோனா எச்சரிக்கைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் இவர் மட்டும் முதலமைச்சரிலிருந்து எல்லோருக்கும் சுற்றிச் சுழன்று முகக்கவசம் அணியாமலேயே போய் அழைப்பிதழ் கொடுத்து வந்தது உறுத்தலாகவே இருந்தது.

கொரோனாவுக்காக பொதுமக்கள் கூட விதிக்கப்பட்ட தடை மார்ச் 31 வரை இருக்க, அதற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் கணக்குப் போட்டு பணியாற்றினார். ஆனால், நிலைமை இப்போது மேலும் மோசமடைந்து ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15 வரை இருக்கும் என்று பிரதமரால் அறிவிக்கப்பட்டு விட்டது.

இதன் தீவிரம் பற்றி அவருக்கு யாராவது அப்போதே ஆலோசனை சொல்லி, வரவேற்பைத் தள்ளிவைக்க வலியுறுத்தி இருக்கலாம். ஆனால், திருமண வரவேற்பு விஷயமாக இருப்பதால் யாரும் அது குறித்து எதிர்மறை விமர்சனம் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் ஏப்ரல் 5ம் தேதி பிரபலங்கள் கூடி நிற்க இந்தத் திருமண வரவேற்பை நடத்த அனுமதி கிடைக்குமா..? அதற்கு பிரபலங்களும் வருவார்களா என்ற சதேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் சில நாள்களுக்கு முன் இறந்த விசுவின் இறுதி ஊர்வலத்துக்குக் கூட யாரும் கூடி நிற்பது தவிர்க்கப்பட்டு சினிமா பிரபலங்கள் செய்தி அனுப்பியதுடன் நிறுத்திக்கொண்டார்கள். 

அதற்கு ஒரு நீதி… இதற்கு ஒரு நீதி என்றாகுமா தெரியவில்லை. திருமணத்துக்கே ஏக கட்டுப்பாடுகள் இருக்கும் சூழலில் வரவேற்புக்கு அனுமதி எப்படி இருக்கும்..?

யோகிபாபு என்ன செய்யப் போகிறார்… பொறுத்திருந்து பார்க்கலாம்..!