இதுவும் ஒரு திரில்லர் ஹாரர் வகையறா படம்தான். இப்போதைய ட்ரெண்டின் படியே இந்த படத்துக்கும் ஒரு முன்னோட்டக் கதை சொல்லப்படுகிறது.
அரசர் காலத்தில் சமூகத்தில் நான்கு பிரிவுகள் இருந்ததாகவும், அந்தக் கடைசிப் பிரிவில் இருப்பவர்கள் பிற மூன்று சமூகத்தினருக்கு எடுபிடிகள் ஆகவும் ஏவலாட்களாகவும் அடிமைகளாகவும் நடத்தப்பட்டதாகவும் அவர்களே நாயாடி என்ற பிரிவைப் சேர்ந்தவர்களாகவும் சொல்லப்படுகிறது.
சமூகத்தில் தங்களுக்கு என்று எந்த பாதுகாப்பும் இல்லாத சூழலில் அவர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தைப் படைத்து அந்தத் தெய்வத்துக்கு பலிகள் கொடுத்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் அது நரபலி வரை போகிறது. இதற்காக மக்களில் இருந்து 12 பேரை கடத்திச் செல்லும் நாயாடிகள் அவர்களைப் பலி கொடுக்க ஆரம்பிக்க, விஷயம் தெரிந்த பொதுமக்கள் உள்ளே புகுந்து அதைத் தடுத்து நிறுத்தி எஞ்சிய இரண்டு பேரை காப்பாற்றுகின்றனர். இதுதான் முன் கதை.
புல்லரிக்கிறதா..?
இன்றைய காலகட்டத்திற்கு வரும் கதையில் youtube நடத்தும் ஐந்து இளைஞர்களிடம் ஒரு அசைன்மென்ட்டோடு வருகிறார் ஒரு நபர். காட்டுக்குள் இருக்கும் ஒரு பங்களாவை அவர் வாங்கியதாகவும் அதில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக அறிய, அதைப் படம் எடுத்து தரும்படியும் அவர்களிடம் கேட்கிறார்.
பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களும் அதற்கு ஒத்துக்கொள்ள இந்த டீம் காட்டை நோக்கி கிளம்புகிறது. காட்டுக்குள் நுழைவதில் இருந்தே ஏதோ அமானுஷ்ய ஆபத்து பின் தொடர, அந்த பங்களாவுக்குள் என்ன நடக்கிறது… அங்கே அரங்கேறும் அமானுஷ்யங்களிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை.
கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும் இந்தக் கதைக்கு இன்னும் கொஞ்சம் பட்ஜெட் ஒதுக்கி திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் மிரட்டலான வெற்றி பெற்றிருக்கும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆதர்ஷ் மணிகாந்தம் என்பவர் இந்தப் படத்தை இயக்கி அதில் நடித்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரும் அவரே.
இந்தக் கதையின் மீது எத்தனை நம்பிக்கை இருந்தால் அவர் இத்தனைப் பொறுப்புகளை ஏற்றிருப்பார் என்பது புரிகிறது.
சினிமாவுக்கு புதுமுகம் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார் ஆதர்ஷ். அவரது காதலியாக வரும் காதம்பரிக்கும் நல்ல முகவெட்டு. கடைசியில் வந்து காதம்பரி அவ்வளவு திகில் கிளப்புவார் என்பதை நம்ப முடியவில்லை.
இவர்களுடன் பேபியன், நிவாஸ் சரவணன், அரவிந்த்சாமி, ரவிச்சந்திரன் கே, கீதாலட்சுமி போன்றோரும் நடித்திருக்கிறார்கள்.
எல்லோருமே புது முகங்கள் என்பதால் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வது இயலாத காரியமாகி இருக்கிறது.
படத்தின் கிளைமாக்ஸ் இப்படி முடியும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. படத்தின் ஹீரோ ஹீரோயினான ஆதர்ஷ் மணிகாந்தமும் காதம்பரியும் இறந்து போனாலும், மீண்டும் எப்படி உயிர் பெறுகிறார்கள் என்பதில்தான் சஸ்பென்ஸ் அடங்கி இருக்கிறது.
இருக்கிற பட்ஜெட்டில் முடிந்தவரை காட்டுக்குள் அலைந்து படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மோசஸ் டேனியல். இருக்கிற எல்லா ஒலிகளையும் வைத்து நம்மை பயமுறுத்த முயற்சி செய்கிறார் இசையமைப்பாளர் அருண்.
நடந்த சம்பவங்களே மீண்டும் மீண்டும் நடப்பதும், பேசிய வசனங்களையே நடிகர்கள் பேசிக் கொண்டிருப்பதும் சற்று அலுப்பைத் தருகிற விஷயங்களாக இருக்கின்றன.
ஆனாலும் கதையும் கிளைமாக்ஸ்சும் நிச்சயம் வித்தியாசமானதுதான்.
நாயாடி – நாங்களும் பயமுறுத்துவோண்டி..!