November 22, 2024
  • November 22, 2024
Breaking News
July 4, 2024

நானும் ஒரு அழகி திரைப்பட விமர்சனம்

By 0 267 Views

பெண்ணாகப் பிறந்து விட்டால் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் துன்பங்கள் வருமோ அவை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் ஏற்றி அந்தப் பாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் இந்தப் பட இயக்குனர் பொழிக்கரையான்.க.

அதுதான் இந்தப் பட கதாநாயகி மேக்னா ஏற்று இருக்கும் பாத்திரம். வாழ்வில் துன்பப் படும் எந்தப் பெண்ணும் இந்த பாத்திரத்தோடு ஏதோ ஒரு வகையில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும் என்கிற அளவிலான க(டி)னமான பாத்திரம் அது. 

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து சரிவர படிக்கவும் முடியாத… படிப்பில் அக்கறை செலுத்த முடியாத சூழலில் ஒரு பெண்ணின் துன்பத்தை மாணவ பருவத்தில் அனுபவித்து… அதிலிருந்து மீண்டு அடுத்து காதல் வாழ்க்கையில் காதலித்தவன் கை கூடாமல் போவதில் தொடங்கி, தவறான ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அதன் மூலம் மலடி என்ற பட்டத்தைச் சுமந்து மீண்டும் பெற்றவர்களிடமே வந்து சேரும் மேக்னாவின் வாழ்க்கை அடுத்து என்னவெல்லாம் நேர்கிறது என்பதை வலியும், வேதனையாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

நானும் ஒரு அழகி என்று மேக்னா சொல்லிக் கொள்ள தேவையில்லை. ஏனென்றால் படத்தில் வரும் ஒரே அழகி அவர்தான். பார்வைக்கு உயர்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் போல் இருப்பவரை மற்ற பாத்திரங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர் என்று கேலி பேசுவது கொஞ்சம் அந்நியமாகத்தான் இருக்கிறது. 

நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை மேக்னா. ஆனால் பெரும்பாலான காட்சிகள் அவர் அழுவதாகவே வருவதில் நமக்குத்தான் சங்கடமாக இருக்கிறது. 

கதாநாயகனுக்கு உரிய எந்த இலக்கணமும் இல்லாவிட்டாலும் வட்டார வழக்கில் நெல்லைத் தமிழ் பேசியே போகப்போக நம்மைக் கவர்ந்து விடுகிறார் நாயகன் அருண் 

முன்பாதியில் குணாதிசய அளவில் நேர்மையாக நடந்து கொள்பவர் பின் பாதியில் ஏனோ அந்த நேர்மையைத் தவற விட்டுவிடுகிறார். 

நாயகி, நாயகனின் அம்மாக்களாக வரும் நடிகையர் தங்கள் பங்கைச் சரியாக செய்திருக்கிறார்கள். ஆனால் பிற பாத்திரங்களில் வருபவர்களுக்கு அனுபவம் இல்லாததாலோ என்னவோ தங்களால் என்ன முடியுமோ அதை நடித்துச் சென்றிருக்கிறார்கள். 

தாழ்த்தப்பட்ட… அதிலும் ஒரு பெண் கல்வி பயில்வதில் எத்தனை சிக்கல்கள் இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, ஆணைப்போல் ஒரு பெண் தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லி விட முடியாத சூழலையும், கணவனாக வரப்போகும் நபர் குறித்து அறிந்து கொள்ளும் கட்டமைப்பு, வசதியற்றவர் குடும்பத்தில் இல்லை என்பதையும், குழந்தை பேறு இல்லாத நிலையில் அதைப் பொத்தாம் பொதுவாக ஒரு பெண்ணின் தலையிலேயே ஏற்றி வைக்கும் சமூக அவலத்தையும், இன்றைய நவீன நாகரிகம் ஆண்மையையே குறைக்கும் அளவுக்கு பயங்கரமாக போன நிலையையும் ஒரே கதைக்குள் கொண்டு வந்திருக்கும் இயக்குனரின் ஆதங்கம் புரிகிறது.

ஆனால் இப்படிப்பட்ட சமூக அவலங்களை எதார்த்த வழியில் சுட்டிக்காட்டும் போது அதை லாஜிக்குகளுடன் சொல்ல வேண்டும்.

தன்னுடைய காதலை மேக்னாவால்  சொல்லவே முடியவில்லை என்பதற்கான காட்சிகளின் அழுத்தம் இல்லை. அதேபோல் படிக்காத மாணவிக்கு அவள் எதையும் எழுதப்போவதில்லை என்று தேர்வுத்தாளைக் கூட ஒரு ஆசிரியை கொடுக்காமல் இருப்பார் என்பதை ஏற்பதற்கு இல்லை.

மலடி என்று பட்டம் கட்டியபின் அவள் கர்ப்பிணியாக… அதற்குக் காரணமானவன் சொந்தத்தாய் மாமனாகவும், காதலனாகவும் இருக்கும் நிலையில் அதை வெளியே சொல்ல சம்பந்தப்பட்ட இருவருக்கும் என்ன தயக்கம் என்பது புரியவில்லை.

மேக்னாவை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டு வேறு திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லும் அவளது கணவன் அத்தோடு விடாமல் ஏன் மேக்னாவை துரத்தித் துரத்தி துன்புறுத்த வருகிறார் என்பதும் புரியவில்லை. 

இந்த லாஜிக் விஷயங்களை கவனித்து திருத்தி இருந்தால் இந்த படம் பெண்கள் கொண்டாடும் படமாக இருந்திருக்கும்.

ஆனால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சமூக அவலங்களைச் சாடி விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கும் இந்தப் பட இயக்குனரை (அவரே தயாரிப்பாளரும்) கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். 

மகி பாலனின் ஒளிப்பதிவில் எந்தக் குறையும் இல்லை. அந்த ஒரு பொறுப்பைத் தவிர கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் என்று அத்தனை பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் பொழிக்கரையான்.க வின் திறமைக்குப் பத்துக்கு ஏழு மார்க் போடலாம்..!

‘நானும் ஒரு தாய்’ என்பதுவும் இந்தப் படத்துக்கு பொருத்தமான தலைப்பாக இருந்திருக்க முடியும். 

நானும் ஒரு அழகி – அறச் சீற்றம்..!