வித்தியாசமான கதைக் களங்களுக்கு எப்போதும் மலையாளத் திரைப்படங்களே முன்னிலை வைக்கின்றன. அதற்கு ஆங்கிலப் படங்களை தழுவி எடுக்கும் உத்தியும் காரணமாக இருக்கலாம்.
ஆனால் அப்படித் தழுவி எடுத்தாலும் அதன் சுவையும் விறுவிறுப்பும் குறையாமல் எடுப்பதில் கேரளப் படவுலகினர் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள்.
அதன்படி, வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென்றால் எந்த தவறும் செய்யலாம் என்கிற சுயநல எண்ணம் கொண்ட ஒருவன் வாழ்வில் உயரும் கதை இது.
அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் வினித் ஸ்ரீனிவாசன் அந்தப் பாத்திரத்திற்கு என்றே பிறந்தவர் போன்று அத்தனைப் பொருத்தமாக இருக்கிறார். வினித்தை பார்க்கும் போது அவரது தந்தை ஸ்ரீனிவாசன் நினைவுக்கு வந்து போவது தவிர்க்க முடியாதது.
படத்தின் ஆரம்பத்திலேயே அவருடைய ஆதார் அட்டையில் வருடா வருடம் வயதை குறைத்துக் கொண்டே வருவதிலேயே அவரது பாத்திரத்தின் கிரிமினலான சுயநலம் புரிந்து போய்விடுகிறது.
தாயுடன் தனித்து வாழ்ந்து வரும் வழக்கறிஞரான அவர் வருமானம் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார். எதேச்சையாக ஒருநாள் அம்மா வீட்டில் விழுந்து காலை முறித்துக் கொள்ள அதன் சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிக்கிறார்.
இந்த நேரம் இப்படிப்பட்ட பல விபத்துகளை சாலை விபத்துகளாக மாற்றி இன்சூரன்ஸ் பணம் பெற்றுத்தரும் வழக்கறிஞரின் ஏஜென்ட் ஒருவரது நட்பு கிடைக்க அதை வைத்து அம்மாவின் சிகிச்சையை முடிக்கிறார்.
ஆனால் அதை வைத்து அவருக்கு புதிய யோசனை உதிக்கிறது. நாமும் இப்படி எல்லா விபத்துகளையும் சாலை விபத்துகளாக மாற்றி அதற்கு இன்ஷூரன்ஸ் பெற்று பணம் சம்பாதித்தால் என்ன என்கிற சிந்தனைதான் அது.
அதுபோன்ற சம்பாத்தியத்தில் புகழ்பெற்று விளங்கும் வழக்கறிஞர் சுராஜ் வெஞ்சரமூடுவுக்கு இவர் போட்டியாக களம் இறங்கி ஒரு கட்டத்தில் அவரை முந்துகிறார். இவரது வளர்ச்சி பொறுக்காத சுராஜ் தன்னுடைய கிரிமினல் மூளையை பயன்படுத்தி இவருக்கு கேஸ்கள் கிடைக்காமல் செய்ய, ஒரு கட்டத்தில் சுராஜையே தீர்த்து கட்டி தனக்கு போட்டி இல்லாமல் செய்யும் வினித் என்ன ஆகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
வினித்தின் பார்வையும் பேச்சும் தனக்குத்தானே அவர் மனதுக்குள் பேசி அங்கங்கே அவர் எடுக்கும் முடிவுகளை நமக்கு தெரிவிப்பதிலும் அந்தப் பாத்திரம் மிகவும் புதுமையாக இருக்கிறது.
எந்த குற்றம் செய்தாலும் அதில் எள்ளளவும் பயமோ தயக்கமோ பதட்டமோ இன்றி அவர் நடந்து கொள்வதும் ஒரு கட்டத்தில் தானே சிக்கிக் கொள்ள நேர்ந்தால் தன் உயிரையே மாய்த்துக் கொள்ள துணிவுடன் இருப்பதும் இதுவரை நாம் திரையில் பார்த்திராத பாத்திரப்படைப்பு.
அவர்தான் அப்படி என்றால் அவருக்கு ஜோடியாக அமையும் அர்ஷா பைஜூ அவரை விட கில்லாடியாக இருப்பது… தர்மப்படி தவறாகவே இருந்தாலும் அந்தப் பாத்திரப் படைப்பு நம்மை ரசிக்க வைத்து விடுகிறது.
சுராஜ் நடிப்பு பற்றி தனியே சொல்லத் தேவையில்லை. சின்ன சின்ன முக அசைவுகளிலேயே தன் வில்லத்தனத்தை காட்டும் அவர் இறந்த பின்னாலும் அவ்வப்போது வினீத்தின் நினைவுகளில் வந்து ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருப்பதும் சுவாரசியமாக இருக்கிறது.
படத்தின் ஆதார சக்தியே அதன் சுவாரசியமான திரைக்கதைதான். தன் முன்னே நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் புரிந்து கொண்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் வினித்தின் நகர்வுகள் நமக்கும் புரிந்து விடுவது சுவாரசியத்தை கூட்டுகிறது.
விமல் கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து இந்த படத்தின் திரைக்கதையை திறம்பட எழுதி இருக்கும் இயக்குனர் அபிநவ் சுந்தர் நாயக்கை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படத்தின் தலைப்பு போடும் ஃப்ரேமிலிருந்து சிகரெட் மதுவுக்குமான டிஸ்கிளைமர் வரை எல்லாவற்றிலும் நகைச்சுவையை புகுத்தி படம் தொடங்குவதற்கு முன்னாலேயே நம்மை சிரிக்கவும் ரசிக்கவும் தயார்படுத்தி விடுவது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
‘விசுவஜித் ஒடுக்கத்தில் ‘கையாண்டுள்ள ஒளிப்பதிவு இந்தப் படத்தை நம்மை நிஜ வாழ்க்கை போன்று உணரச் செய்கிறது. சிபி மேத்யூ அலெக்சின் இசையும் நம்மை படத்துடன் கட்டிப்போட்டு விடுகிறது.
படத்தின் எடிட்டிங், கலை அமைப்பு, சவுண்ட் மிக்சிங் உட்பட எல்லா அம்சங்களுமே மிக நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது.
2014 இல் வெளியான ‘ நைட் கிராலர் ‘ ஆங்கிலப்படத்தை அடி ஒற்றி எடுக்கப்பட்ட படமாக இது தெரிந்தாலும் அதன் கதையை இந்தியத் தன்மைக்கு ஏற்றவாறு மொத்தமாக மாற்றி சுவாரசியத்தை கூட்டி சொல்லி இருப்பதிலும் இந்த படம் தனிக்கவனம் பெறுகிறது.
இதுபோன்ற குற்றங்களை தாங்கிச் செல்லும் படங்களில் கடைசியில் ஒரு நீதியுடன் முடிப்பது வழக்கம். ஆனால் அதையும் இந்த படத்தில் முறியடித்து குற்றங்கள் செய்தவன் மேன்மை பெறுவதாகவே படம் முடிந்து விடுகிறது.
அதை நியாயப்படுத்தும் விதமாக நேர்மையாக நடந்து கொண்டிருக்கும் வினித்தின் தோழி தான்வி ராம் கேள்விக்கு அர்ஷா பைஜூ பதிலாக சொல்லும் வசனம் அமைகிறது.
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் – முறை தவறினாலும் முத்தான படம்..!
– வேணுஜி