‘மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களில், 2018-ல் வெளிவந்த ‘மிஷன் இம்பாசிபிள் – ஃபால்அவுட்’ படத்தின் தொடர்ச்சியாகவும், மிஷன் இம்பாசிபிள் தொடர் வரிசைப் படங்களில் ஏழாவதாகவும் வந்துள்ள படம்.
இதன் கதை இதுதான்…
இரண்டு பாகமாக பிரித்து செய்யப்பட்டு, இரண்டையும் இணைத்தால் மட்டுமே குறிப்பிட்ட துவாரத்துக்கு பொருந்தும்படியான ஒரு சாவி இருக்கிறது.
அதன் ஒரு பகுதி மிலிட்டரி தரப்புக்கு கிடைக்க, அடுத்த பகுதியை மீட்டு வரவேண்டிய பொறுப்பு படத்தின் ஹீரோ டாம் குரூஸ் வசம் தரப்படுகிறது. அந்த பணியை அவர் முடிப்பதற்குள் சந்திக்கிற கஷ்ட, நஷ்டங்களே படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை.
இந்தப் படத்தின் சிறப்பு ஹீரோ டாம் குரூஸ் தன் வழக்கப்படியே டூப் எதுவும் போடாமல் சாகச காட்சியில் ஈடுபடுவது தான்.
இதற்காக இந்த படம் தொடங்கிய 2020இல் டாம் குரூஸ் நார்வேயின் ஹெல்செட்கோபன் மலையில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரமான ஒரு செங்குத்து பாறையில், ஒரு சரிவு மேடை அமைத்து, மாற்றியமைக்கப்பட்ட ஹோண்டா CRF 250 பைக்கை ஓட்டி, பின் 4000 அடி குறுகிய மலையிடுக்கில் பைக்குடன் குதித்து, தரையில் இருந்து 500 அடி தூரத்தில் பாராசூட்டைத் திறந்து தரையிறங்கினார்.
இதற்காக தயாரிப்பின் பொழுது, ஒரு வருடம் ஒத்திகை பார்த்துள்ளார். கேமரா வைத்து இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன், 500 ஸ்கை டைவ்(skydive)களையும், 13000 Motocross jumpsகளையும் பயிற்சிக்காகச் செய்து முடித்து, அதி பயங்கர ஸ்டன்ட் காட்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்தி நடித்தார்.
இந்தப் படம் வெளிவதற்கு முன்பாகவே இந்த காட்சி எல்லா சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகிவிட இந்த படத்தை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்களிடம் ஆவல் அதிகமாகவே இருந்தது.
இதன் காரணமாகவே இப்போது மீண்டும் ஒருமுறை இந்த படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் எகிறுகிறது.
இந்த காரணங்களால் மட்டுமல்லாமல் ஒரு அற்புதமான கார் சேஸிங் மற்றும் கிளைமாக்சில் இடம்பெறும் ரயில் சண்டை காட்சிகள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று இருக்கிறது.
MI6 அதிகாரியாக நடித்திருக்கும்ரெபேக்கா பெர்குசன், வில்லனாக நடித்துள்ள Esai Morales உள்ளிட்டோரின் பங்களிப்பும் அசத்துகிறது.
டாம் குரூஸுடன் இணைந்து ஒரு டஜன் படங்கள் உருவாக்கிய இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்வாரி இந்த படத்தின் உருவாக்கத்தின் மூலமும் தன்னை கவனிக்க வைத்துள்ளார்.
பிரேசர் டக்கார்த்தின் ஒளிப்பதிவு ஆச்சரியப்படுத்தி இருக்கிறது அதுவும் பாலைவன புயலில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி ஒளிப்பதிவின் ஹைலைட் எனலாம்.
லார்ன் பால்பே வின் இசையும் நம்மை வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.
எட்டி ஹாபில்டனின் படத்தொகுப்பு ஆக்ஷன் காட்சிகளில் நம்மை சீட்டின் நுனியிலேயே எப்போதும் வைத்து இருக்கிறது.
வசனப் பகுதிகள் இந்த படத்தின் நீளத்தை கொஞ்சம் அதிகரித்து இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் அடுத்து வரும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் காட்சிக்காக அந்த அமைதி நமக்கு தேவைப்படும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்
ஆனால் ஆளுக்கு ஒரு முகமூடி மாட்டிக் கொண்டு அவ்வப்போது அதை அவிழ்த்துக் கொண்டிருப்பது 60களில் படம் பார்த்த எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. முகமூடிய நாள் முகம் மாறலாம் ஆனால் ஒட்டுமொத்த உடல் மொழியுமா மாறிவிடும்..?
மிஷன் இம்பாசிபிள் – ‘ மெய் ‘ மறக்கச் செய்யும் ஆக்ஷன் பரவசம்..!