வாழ்க்கையில் நாம் ‘ரொம்ப அவசரம்’ என்று ஒரு விஷயத்துக்காகத்தான் அவசரப்படுவோம். அதுதான் படத்தின் ஒன்லைன்.
அப்படியான ஒரு அவசரத்தை ஒரு பெண்ணுக்குத் திட்டமிட்டு ஏற்படுத்தி அவளைப் பழிவாங்க ஏவும் ஆணின் அதிகார புத்திதான் படத்தின் வில்லன். இந்தச் சின்னக் கருவை வைத்து தன் முதல் படமாக இயக்கியிருக்கும் சுரேஷ் காமாட்சியைப் பாராட்டலாம்.
இதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டிருப்பது காவல் துறையை. டைட்டில் போடும்போதே ஒரு பெண் காவலரை தவறான நோக்கத்துடன் போனில் உரையாடி வசப்படுத்த நினைக்கும் உயர் போலீஸ அதிகாரியின் ஆடியோவைப் போட்டு நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.
நாம் சமூக வலைதளங்களில் ஏற்கனவே கேட்டிருக்கும் ஆடியோவை ஒத்த அந்த ஆடியோவைக் கேட்க நேரிடும்போது ‘ஆகா… அருமையான மேட்டரைப் பிடித்து விட்டார் இயக்குநர்…’ என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆனால், அந்த செயலையடுத்து என்ன நடந்தது என்பதுதான் படம் சொல்லும் செய்தியாக இருக்கிறது. காவல் துறை போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த துறையில் உயர் அதிகாரிகளுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் எப்படி அவருக்கு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டியிருக்கிறது என்பதை அதே வலியுடன் படம் எடுத்துக் காட்டுகிறது.
அதனூடே தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் துன்பியல் தந்த ஒரு நாட்டின் தலைவர் வருகைக்காக நம்மவர்களை வைத்தே நம் இனத்தின் மீது சந்தேகம் கொள்ள வைக்கும் ஒரு தேசிய அரசியலையும் தொட்டுப் போகிறார் இயக்குநர்.
படத்தின் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருக்கும் ஸ்ரீ பிரியங்காவின் அப்பாவித்தனமான முகமே அவரது இன்பத்தையும், துன்பத்தையும் நம்மால் புரிந்துகொள்ள வைத்துவிடுகிறது. நின்ற இடத்திலேயே ‘உட்கார’ வழியில்லாமல் அவர் தவித்து நடித்திருக்கும் திறனைப் பாராட்டலாம்.
கடமை என்று வந்துவிடும்போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை தூர ஒதுக்கிவிட்டுக் கடமையாற்றும் சிரத்தையிலும் கவர்கிறார் ஸ்ரீ பிரியங்கா. ‘பெண்ணுக்குப் பேயும் இரங்கும்’ என்பார்கள். கடைசியில் அவரது பிரச்சினையை ‘இறக்கி வைக்க’ இயற்கையே இரங்கிவருவது அல்லது இறங்கி வருவது ஆறுதல்.
அப்போது ஒரு அழுகை அழுகிறாரே ஸ்ரீ பிரியங்கா..? அது ஒட்டுமொத்த பெண்ணினத்துக்கான அழுகை… அதனை உணர வைத்திருக்கும் இசையமைப்பாளர் திறனையும் பாராட்டலாம்.
வில்லத்தனத்துக்கு அப்படியே உருவம் கொடுத்திருக்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் வழக்கு எண் முத்துராமன். அநியாயம் என்று தெரிந்தும் அவரை எதிர்க்க முடியாத வேடங்களில் இ.ராம்தாஸ் மற்றும் வி.கே.சுந்தர் இயல்பாகச் செய்திருக்கிறார்கள்.
பிரியங்காவின் தோழனாக வரும் அரீஷ் குமார் ஏதோ செய்யப்போகிறார் என்று நினைத்தால் அவர் ஒன்றுமே செய்யவில்லை. என்னதான் அவர் ஆம்புலன்ஸ் டிரைவர் – ஒரு விபத்தில் அடிபடவரை மீட்கப் போகிறார் என்றாலும் அட… ஒரு டிராபிக் ஜாமிலோ, இயற்கையான தடங்கல்களிலோ ஓரிரு நிமிடங்கள் லேட் ஆகாதா… அப்படி அவர் பிரியங்காவுக்கு உதவியிருக்கலாம் என்றே தோன்றுகிறது… அதுவும் அவர் செல்லும் வழியில்தான் பிரியங்காவும் நிற்கிறார்.
அதேபோல் முத்துராமனின் பழிவாங்குதலைக் கண்டுபிடித்துவிடும் உயர் அதிகாரி சீமான், அவர் அலுவலகத்துக்கு முத்துராமனை வரச்சொல்லி ‘டோஸ்’ விட்டு விட்டு அதன்பிறகு பிரியங்காவுக்கு உதவ கட்டளையிடுவதும் நம்பகமாக இல்லை. அதை முதலில் செய்து விட்டு பிறகு முத்துராமனைக் கண்டித்திருக்கலாமே..?
ஆக… படத்தில் வரும் நல்லவர்கள் கூட பிரியங்காவுக்கு உதவாததில் எல்லோர் மேலும் நமக்குக் கோபம் வருகிறது. படப்பிடிப்பும் நேர்த்தியும் கூட ஒரு குறும்பட அளவுக்கு மட்டுமே இருப்பதும் சின்ன உறுத்தல்.
இதையெல்லாம் இன்னும் நேர் செய்திருந்தால் இந்த நல்ல முயற்சி, ஒரு உலகப்பட முயற்சியாக அமைந்திருக்கும். இருப்பினும்…
மிக மிக அவசரம் – சமுதாயத்தை யோசிக்க வைக்கும் மிக மிக அவசியமான படமும் கூட…
– வேணுஜி