June 20, 2024
  • June 20, 2024
Breaking News
January 12, 2024

மெரி கிறிஸ்துமஸ் திரைப்பட விமர்சனம்

By 0 234 Views

ஒரு கிறிஸ்துமஸ் இரவுக்குள் நடந்து முடிகிற கதை. ஒரு லவ் கம் மர்டர் மிஸ்டரியான இந்தக் கதையை ஒரு துளி கூட நாம் யூகிக்க முடியாத அளவில் நகர்த்திச் சென்று ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

‘இன்றைக்கு மும்பை என்று அழைக்கப்படும் ஊர், பழைய பம்பாய் என்று அழைக்கப்பட்ட காலகட்டம்’ என்று தொடங்கும் போதே நமக்குள் சுவாரஸ்யம் பற்றிக் கொள்கிறது.

இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை இந்திக்கு ஒரு மாதிரியும் தமிழுக்கு ஒரு மாதிரியும் இயக்கியிருக்கிறார் ஸ்ரீராம் ராகவன். இரண்டிலும் நாயகன் விஜய் சேதுபதியும், நாயகி கத்ரீனா கைஃபும் மட்டும் பொதுவாக இருக்கிறார்கள்.

ஒரு கிறிஸ்துமஸ் இரவில் நகரம் களை கட்டத் தொடங்கி இருக்கிறது. கையில் குழந்தையுடன் விஜய் சேதுபதி நடக்க உடன் நடக்கும் கத்ரீனா, “எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்… நாமும் அப்படித்தான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்…” என்கிறார்.

அந்த இடத்திலிருந்து பின்னோக்கி சற்றுமுன் என்ன நடந்தது என்பதற்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் போய் வரும் இயக்குனர் அவர்கள் இருவரும் அன்னியப் பட்டவர்கள் என்பதைப் புரிய வைத்து விடுகிறார். சில மணி நேரங்களுக்குள் ஏற்படும் அந்த நெருக்கம் இருவரையும் மனதைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குக் கொண்டு போகிறது.

கிட்டத்தட்ட 96 படத்தை போல் முதலில் கத்ரீனா வீட்டுக்கு விஜய் சேதுபதியும் பின்னர் விஜய் சேதுபதி வீட்டுக்கு கத்ரீனாவும் பயணப்பட்டு முத்தமிட்டுக் கொள்ளும் வேளையில் சுதாரிக்கிறார்கள். 

கத்ரீனா இன்னொருவர் மனைவியாக இருந்தாலும் விஜய் சேதுபதியால் அப்போதைக்கு அவரைக் காதலிக்காமல் இருக்க முடியவில்லை. பின்பு இருவரும் கத்ரீனா வீட்டுக்கு வருகையில் ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்க பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக் கதை.

ஊருக்குத் திரும்பி வரும் ஒருவனுக்கு ஒரே இரவில் ஒரு பெண்ணின் நட்பு கிடைப்பதும் அது படுக்கை அறை வரை கொண்டு செல்வதும், நினைக்காததெல்லாம் நடப்பதுவுமாக இருந்தால் அந்த இளைஞனின் மனம் எவ்வளவு மகிழும் என்பதைக் கிட்டத்தட்ட முன் பாதிப் படம் வரை கடத்தி இருக்கிறார் இயக்குனர்.

பின்பாதி, படத்தை இன்னும் வேகமாக்குகிறது. படம் முழுவதும் இரண்டு மூன்று லொகேஷன்களில் மட்டுமே நடைபெற்றாலும் நமக்கு எந்த இடத்திலும் ஒரு தொய்வோ அயர்ச்சியோ ஏற்படவில்லை என்பது இந்த ஸ்கிரிப்டின் பலம்.

விஜய் சேதுபதி வழக்கம் போல் அண்டர் பிளே செய்து நடித்திருக்கிறார். அவர் யார், எதற்கு சொந்த ஊருக்கு வருகிறார் என்பதெல்லாம் கூட நம்மை ஆச்சரியப்பட வைக்கும் இடங்கள்.

கத்ரீனாவைக் கண்டதும் காதல் கொள்வதும் அடுத்தடுத்த கணங்களில் அது முதிர்ச்சியுறுவதும்… ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே கத்ரீனாவின் செய்கை அவரைக் கலவரப்படுத்துவதும் அதை அவர் எதிர்கொள்ளும் விதமுமாக… சேதுபதி நடிப்புக்கு நிறைய வேலை இருக்கிறது.

அவரை விட ஒரு படி மேலே போய் நடித்திருக்கிறார் கத்ரீனா என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் சேதுபதிக்கு அவர் மீது ஏற்படும் காதல் பார்வையாளர்களான நமக்கும் ஏற்பட்டு விடுவது இயல்புதான் ஆனால் அடுத்தடுத்த கணங்களில் அவரது கேரக்டர் என்ன என்பதை நமக்கு புரியாத அளவில் செல்லும்போது அதனை தன் நடிப்பின் மூலம் அழகாக கடத்தியிருக்கிறார் கைஃப்.

தன் குழந்தையின் நலனுக்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்து முடிக்கும் அவர் கடைசியில் அந்த நன்மை விஜய் சேதுபதியால் ஏற்படும் என்று தெரியும்போது நன்றியுடன் ஒரு புன்னகை பூக்கிறாரே அதற்கு ஒரு தேசிய விருதே தரலாம்.

கைஃபை ஒய்ஃப் ஆகப் பெற்றவர் எவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறோம். ஆனால் அது அப்படி இல்லை என்பதுதான் கதையின் அழுத்தம்.

ராதிகா ஆப்தே விஜய் சேதுபதியின் காதலியாக சில காட்சிகளில் வருகிறார். சம்பந்தமே இல்லாமல் விஜய் சேதுபதியின் பேவரைட் காயத்ரியும் ஒரு காட்சியில் வருகிறார்.

இவர்களுடன் நம்ம ஊர் ராதிகா சரத்குமார், சண்முகராஜன் மற்றும் ராஜேஷும் முக்கிய பாத்திரங்கள் ஏற்று இருக்கிறார்கள். காவல் அதிகாரிகள் சண்முகராஜனும், ராதிகாவும் வரும் இடங்கள் மட்டும் ஒரிஜினல் தமிழ்ப்படம் போல் நம்மை நினைக்க வைக்கிறது.

அடுத்த காட்சி இப்படித்தான் நகரும் என்று நாம் எப்படி எல்லாம் எதிர்பார்க்கிறோமோ அப்படி எல்லாம் நகர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் பிரதீப் குமார். எஸ், அப்துல் ஜபார், பிரசன்னா பாலா, நடராஜன், லதா கார்த்திகேயன். இத்தனை பேர் எழுத்தில் இணைந்திருப்பது நேர்த்தியாகத்தான் இருக்கிறது.

உரையாடலும் பெரிய பலம். கத்ரீனாவின் அருகாமை கிடைத்ததில் விஜய் சேதுபதி சிலுவை போட்டுக் கொள்ள, அதைப் பார்க்கும் கத்ரீனா, “உங்களுக்கு பக்தி அதிகமா..?” என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் விஜய் சேதுபதி, “இந்த மாதிரி நேரங்களில் வருவதுதான்..!” என்கிறார் குறும்புடன்.

கடைசியில் எப்படி முடிப்பார்கள் என்று நினைத்தால் அருமையான நீதியுடன் முடிக்கிறார்கள். 

சாத்தியமில்லாத முடிவாக இருந்தாலும் லாஜிக் பார்க்காமல் அதிசயிக்க முடிகிறது.

மது நீலகண்டனின் ஒளிப்பதிவு, ப்ரீத்தமின் இசையில் அமைந்த பாடல்கள், டேனியல் பி. ஜார்ஜின் பின்னணி இசை அனைத்திலும் அத்தனை துல்லியம்.

முக்கியமாக ஒலிப்பதிவை சொல்ல வேண்டும். ஹாலிவுட் படத்துக்கு நிகராக ஒலி அமைப்பை கையாண்டு இருக்கிறார்கள். ஆஸ்கருக்கே அனுப்பலாம்..

மும்பையில் நடக்கும் ஒரு ஹிந்தி தமிழ் டப்பிங் படமோ என்று நினைக்க வைக்கும் பிரமை மட்டும் இந்த படத்தில் இருந்து நம்மை அந்நியப்படுத்துகிறது.

மற்றபடி பொங்கல் படங்களில் முதலிடம் இதற்குதான் கொடுக்கலாம்.

மெரி கிறிஸ்துமஸ் – வெரி இன்ட்ரஸ்டிங்..!

– வேணுஜி