May 4, 2024
  • May 4, 2024
Breaking News
January 13, 2024

கேப்டன் மில்லர் திரைப்பட விமர்சனம்

By 0 113 Views

நாட்டுக்கு ராஜாவாக இருக்க முடியாதவர்கள் தன் பெயரை ராஜா என்று வைத்துக் கொண்டு திருப்திப்படுவது போல இந்தப் படத்தில் நாயகனாக வரும் தனுஷ், ராணுவத்தில் சேர்ந்த அன்றே தன்னை கேப்டனாக நிறுவிக் கொள்கிறார்.

சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் நடக்கிறது கதை. அப்போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் எதிரிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. உள்நாட்டில் ராஜாக்களாக செயல்படும் ஜமீன்தார்கள்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் எதிரி என்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

அப்படி சாதி ஏற்றத்தாழ்வால் உள்நாட்டிலேயே அடிமைப்பட்டு கிடப்பதை விட வெள்ளைக்காரர்களிடம் ராணுவத்தில் சேர்த்து சமுதாயத்தில் மரியாதை பெற்றுக் கொள்ள முடியும் என்று திட்டமிடுகிறார் தனுஷ். அதற்காக ஆங்கிலேய ராணுவத்தில் சேர்கிறார்.

அங்கே அனலீசன் என்கிற அவரது இயற்பெயரை அனலைஸ் செய்வது கடினம் என்று கருதி அவருக்கு மில்லர் என்கிற பெயர் வழங்கப்படுகிறது அதை சும்மானாச்சும்  சொல்வதை விட ஒரு அடைமொழி சேர்த்து கேப்டன் மில்லர் என்று தன்னைத்தானே கேப்டனாக அறிவித்துக் கொள்கிறார் தனுஷ்.

ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் ராணுவ வேலை அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் இந்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்த அவர் நிர்பந்திக்கப்பட அந்த நிமிடமே படைத்தலைவனைக் கொன்று விட்டு தப்பி ஓடுகிறார்.

வெள்ளைக்காரர்களிடம் இருந்து தப்பித்து, ஒரு கொள்ளைக்காரக் குழுவிடம் சேர்ந்து கொஞ்ச நாள்… அதன் பிறகு வெள்ளையர்களுக்கு எதிரான இயக்கத்திலும் அர்ப்பணித்துக் கொண்டு தன் சமூகத்து மக்களின் உரிமைக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் போராட ஆரம்பிக்கிறார் தனுஷ். அதன் விளைவு என்ன என்பதுதான் மீதிக் கதை.

ரஜினி படம் விஜய் படம் அஜித் படம் என்பது போல் இது தனுஷ் படம். இந்த ஒரு படத்துக்காக பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார் தனுஷ். ஒரே வேடம்தான். .ஆனால், பல்வேறு காலக் கட்டங்களில் அவரது பருவத்துக்கேற்றவாறு கெட்டப்புகளில் மாறி அசத்தி இருக்கிறார் அவர்.

700 வீரர்கள் சகிதம் தங்கள் பகுதியை சுற்றி வளைத்துக் கொண்ட இராணுவத்தின் முன்னால் நிராயுதபாணியாக அவர் வந்து நிற்கையில் என்ன செய்யப் போகிறார் இவர் என்று பதைபதைக்கிறோம். ஆனால் தரமான செய்கை ஒன்றை செய்துவிட்டு நெஞ்சில் அடித்துக் கொண்டு தன் கோபத்தைக் காட்டும் நடிப்பில் அசுரனாகத் தெரிகிறார் தனுஷ்.

தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்து ராணுவம் ஒட்டும் போஸ்டர்களில் வெறும் மில்லர் என்று இருப்பதை இரத்தத்தினால் கேப்டன் மில்லர் என்று அவர் திருத்துவது ஆர்ப்பாட்டம்.

பிரியங்கா மோகன் படத்தின் நாயகியாக வந்தாலும் தனுஷுக்கு காதலியாகவே வந்தாலும் கூட… அவருக்கு ஜோடியாக வரவில்லை என்பது ஒரு குறைதான். நடிப்பில் பெரிதாக அசத்தவில்லை என்றாலும் எந்த குறையும் வைக்கவில்லை பிரியங்கா.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை ஒரு காட்சியில் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்களே என்ற முன்பாதி ஆதங்கத்தை பின் பாதி சமன் செய்து விடுகிறது. தன் பாத்திரத்தில் இமேஜை தூக்கி வைத்துவிட்டு நடித்திருக்கும் சிவாண்ணாவை பாராட்டலாம். ஆனால் அவரது ஹேர் கட்டிங் மட்டும் மிகவும் நவீனமாக இருக்கிறது.

வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டவர்கள் சாதிய மற்றும் வர்க்க அடிப்படையில் அதற்கு முன்னரே அடிமைப்பட்டுதான் கிடந்தார்கள் என்ற அரசியலை முன்னிறுத்தி இருப்பதற்கு அருண் மாதேஸ்வரனை பாராட்டலாம்.

ஆனால் வன்முறையை மட்டும் அவர் மூன்றாவது படமாக கைவிடவே இல்லை. ஒரு சில முறை கத்தியால் குத்தினாலே இறந்து விடுவார்கள் என்கிற சூழலில் 50 குத்து என்பதெல்லாம் அதிகபட்சம். மூன்று பேரைக் கொல்ல 150 குண்டுகள் என்பதும்… ஒரு கவர்னரைக் கொல்ல கிட்டத்தட்ட நூறு குண்டுகளுக்கு சுட்டுத் தள்ளுவதெல்லாம் ஆனாலும் ரொம்ப ஓவர்.

ஆயுதங்களின் சக்தி தெரியாமல் அவற்றை பயன்படுத்துவது போல் இருக்கிறது. இந்திய சுதந்திர போராட்டத்துக்கு எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டனவோ அதைவிட அதிகமாக இந்த படத்தில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

சில வகை பெரிய ரகத்துப்பாகிகளை லோகேஷ் கனகராஜ் வடிவமைத்திருப்பாரோ என்று சந்தேகமாக இருக்கிறது.

உலக தரமான காட்சிகளை நம் கண் முன்னால் கொண்டு வந்திருப்பதில் இயக்குநருடன் ஒளிப்பதிவாளர் கைகோர்த்து மிரட்டி இருக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் வரும் அரை மணி நேரத் துரத்தல் காட்சி அற்புதம்.

சக்தி மிக்க கிளைமாக்ஸ் மிரள வைக்கிறது. ஆனால் சற்று நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்

ஜிவி பிரகாஷுக்கு சம்பளம் கொடுத்தார்களா இல்லை சொத்தை எழுதிக் கொடுத்தார்களா தெரியவில்லை… என்ன அடி..? பிரித்து மேய்ந்து இருக்கிறார் ஜிவி.

ஒரு ஊரை தத்துரூபமாக உருவாக்கி இருக்கும் கலை இயக்குனருக்கும் பாராட்டுக்கள் படத்தின் பிரதானமாக வரும் அந்த கோவில் உட்புறம் பரவசப்படுத்தும் அளவுக்கு வெளிப்புறம் இல்லை என்பது சற்று குறை.

படத்தின் மையப் பொருளாக வரும் கொரனார் சிலை அப்படியே தனுஷை ஒத்திருக்கிறது. அதை வைத்து அடுத்த பாகத்தை அறிவிப்பார்கள் என்று நம்பலாம்.

கேப்டன் மில்லர் – பொங்கல் வின்னர்..!

– வேணுஜி