96 படம் வெளிவந்து வெற்றி அடைந்தாலும் அடைந்தது, அதற்குப்பின் பல ரி-யூனியன் கதைகள் வந்துவிட்டன. ஆனாலும் அவை அலுக்கவில்லை என்பதன் காரணம் எல்லோருக்குள்ளும் இருக்கும் பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறி விடுவதே ஆகும்.
இங்கே அப்படி ஒரு ரி – யூனியனை தந்திருக்கிறார் இயக்குனர் ராக்கோ யோகேந்திரன். ஆனால், இது வழக்கமான ரி-யூனியனாக இல்லாமல் அதற்கு ஒரு ஆச்சரியமான களத்தையும் கண்டுபிடித்து இருப்பதுதான் இந்த படத்தின் தனிச் சிறப்பு.
இதுவும் 90ஸ் கிட்ஸ் சம்பந்தப்பட்ட கதைதான். 2008 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடிக்கும் ரக்சன், தீனா, பிராங்க் ஸ்டார் ராகுல், மெலினா உள்ளிட்டவர்கள் பிறகு கல்லூரி முடித்து வேறு வேறு வேலைக்குப் போய் விடுகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் படித்து வந்த தனியார் பள்ளிக்குப் போட்டி பள்ளியாக இருந்தவர்கள் அந்த 2008 ஆம் ஆண்டில் இவர்கள் படித்த பள்ளித் தேர்வில் முறைகேடு செய்ததாக சொல்லி வழக்கு தொடுத்ததன் தீர்ப்பு இப்போது வர, இவர்களை மீண்டும் தேர்வு எழுதச் சொல்கிறது நீதிமன்றம்.
எனவே இவர்கள் அத்தனை பேரும் மீண்டும் பள்ளிக்கு வந்து மூன்று மாத காலம் படித்து தேர்வு எழுதுவதாக போகிறது கதை. இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்கனவே பள்ளி இறுதியை முடித்த போது மெலினா மீது காதல் கொண்டதை சொல்லாமலேயே முரளி’யாகப் போன ரக்சன் இப்போதாவது அதைச் சொன்னாரா என்பதுதான் கதையின் உயிர் நாடி.
தனுஷ், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து ரக்சனுக்கும் மாணவப் பருவமும், வாலிபப் பருவமும் எளிதாகப் பொருந்தி இருக்கிறது. ஆனால் முன்னவர்கள் அளவுக்கு முன்னேற, அவர் நடிப்பில் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டும்.
அவரது நண்பராக நகைச்சுவை வேடத்தில் வந்து படம் முழுவதும் கலக்குகிறார் தீனா.
பிராங்க் ஸ்டார் ராகுல் முதல் பாதியில் காமெடியாகவும், பின் பாதியில் சீரியசாகவும் வந்து கலக்கி இருக்கிறார். அந்த உடம்பை வைத்துக் கொண்டு அவர் ஆடும் அந்த ஆட்டம் அசத்தல்.
மெலினா தவிர்த்து அவருடன் மாணவிகளாக நடித்த ஆஷிகா, நட்டாலியா, ஸ்வேதா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை தந்திருக்கின்றனர்.
பி.டி மாஸ்டராக வரும் முனீஸ்காந்த், ஆரம்பத்தில் காமெடிக்கும் பின்னர் குணசித்திர நடிப்பிற்கும் தோதாக இருக்கிறார். கணக்கு டீச்சர் அகிலாவை அவர் கணக்கு பண்ணுவதும் அதன் பிறகு நடக்கும் காட்சிகளும் உருக்கம்.
ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி காட்சிகளை இயல்பாக காட்ட மெனக்கெட்டு இருக்கிறார். சச்சின் வாரியர் இசையில் பாடல்களும், பின்னணி இசை இளமையாக இருக்கின்றன.
மொத்தமாக ஒரு இளமை ததும்பும் படமாக இது அமர்ந்திருந்தாலும் இது வரையில் வெளிவந்த மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது நெகிழ்ச்சி குறைவாக இருக்கிறது. பள்ளிப்பருவத்து நிகழ்வுகளை இன்னும் கூட பொருத்தமாகப் பின்னி திரைக்கதையில் அசத்தி இருக்க முடியும்.
இருந்தாலும் ஒருமுறை பார்த்து ரசிக்க உருப்படியான படைப்பாக வந்திருப்பது நல்ல விஷயம்.
மறக்குமா நெஞ்சம் – முயன்றிருக்கலாம் இன்னும் கொஞ்சம்..!
– வேணுஜி