ஒரு காலத்தில் பெரிய இயக்குநர்களிடம் பல வருடங்கள் பயிற்சி எடுத்தால்தான் ஒரு இயக்குநராக உருவாக முடிந்தது. பின்பு ஒன்றிரண்டு படப் பயிற்சி மட்டுமே ஒரு இயக்குநராவதற்கான தகுதியாக இருந்தது. பின்னர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த மாணவர்களுக்கு ஒரு மவுசு வந்தது.
கடைசியாக குறும்பட இயக்குநர்களுக்கான காலமாக இது இருக்கிறது. இந்த வரிசையில் இயக்குநராகக் களமிறங்கத் தயாராக நிற்கிறார் அபிஷேக் வெஸ்லி என்ற இளைஞர். அடிப்படையில் பொறியாளரான இவர் சினிமாவின் மீதான ஈர்ப்பால் இரண்டு டாகுமென்டரிப் படங்கள் எடுத்து பரவலான பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்று இப்போது பெரிய திரையைக் குறிவைத்திருக்கிறார்.
அதற்கும் அவர் வெறும் கையை வீசிக் கொண்டு வரவில்லை. ஒரு பெரிய படத்துக்கான திரைகதையில் முதல் ஒன்றிரண்டு காட்சிகளை மட்டும் பைலட் வெர்ஷனில் குறும்படமாகத் திரையிட்டார். அதற்கு ‘மறைபொருள்’ என்று தலைப்பிட்டிருந்தார்.
பி2.0 புரொடக்ஷன் ஹட்சன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், ஹரிஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘மறை பொருள்’ என்பது படத் தலைப்பு.
ஒரு கற்பழிப்பு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி, பேனா மூலம் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கை இன்ஸ்பெக்டர் ஹரிஷ் விசாரிக்க, பத்திரிகையாளரான சந்தோஷ் பிரதாப் புலன் விசாரணைக்கு உறுதுணையாக இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு அனுப்பப்படுகிறது. அதன் பின்னும் அதே போன்றதொரு மற்றுமொரு கொடூரமான கொலை நடக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நம் பதைபதைப்பை உருவாக்கிவிட்டு படம் முடிகிறது.
ஒரு ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் இதை அப்படியே பெரும்படமாக நீட்டிக்கலாம். விரைவில் இயக்குனராகவிருக்கும் அபிஷேக் லெஸ்லிக்கு வாழ்த்துகள்.