November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அமையவிருப்பது பசுமை வழிச்சாலை அல்ல பசுமை அழிப்புச் சாலை – கொதிக்கும் இயக்குநர்
August 1, 2018

அமையவிருப்பது பசுமை வழிச்சாலை அல்ல பசுமை அழிப்புச் சாலை – கொதிக்கும் இயக்குநர்

By 0 1062 Views
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். 
 
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜெயப்பிரகாஷ் இசையமைக்கிறார்.
 
இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது.
 
‘மரகதக்காடு’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது காடுகளின் வழியாக பசுமை வழிச்சாலை அமைக்க அரசாங்கம் முழு மூச்சுடன் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் மரகதக்காடு படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் பசுமை வழிச் சாலை மற்றும் இயற்கை அழிப்பு குறித்து தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் பகிர்ந்து கொண்டார்.
 
“வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது என்கின்ற கருத்தை மையமாக வைத்தே மரகதகாடு படத்தை இயக்கியுள்ளேன். பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுக்கிறோம் என்கிற பெயரில் நடந்து வரும் இயற்கை அழிவைப் பற்றிதான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். 
 
ஒரு காட்டை உருவாக்குவதுதான் கஷ்டம். காட்டை நாடாக்குவது ரொம்பவே சுலபம். காட்டை அழிப்பதற்கு ஆறு மாதங்கள் போதும். 
 
இதோ இப்போது பசுமை வழிச்சாலை அமைக்கிறோம் என்கின்ற பெயரில் அது தான் நடக்கிறது. அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும். பசுமை வழிச் சாலையின் அறுபது சதவீதம் சாலை காடுகளுக்குள்தான் அமைய இருக்கிறது.
 
காடுகளை ஒட்டி நகரங்களும் சாலைகளும் உருவாகும்போது யானைகளும் வன விலங்குகளும் ஊருக்குள் வருவது அதிகரிக்கத்தான் செய்யும். 
 
ஒன்றை அழித்து இன்னொன்று  வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல. இருப்பதை அழித்துவிட்டு அதன் மேல் புதிதாக ஒன்றை உருவாக்கி அதை நாட்டின் வளர்ச்சி என்றால்  எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இயற்கையை பாதுகாக்காமல் வருகின்ற எந்த வளர்ச்சியும் மனிதனைப் பாதுகாக்காது. அழிவுக்குத் தான் அழைத்துச் செல்லும்.  
 
Maragathakkadu

Maragathakkadu

சாலைகளோ தொழிற்சாலைகளோ வேண்டாம் எனக் கூறவில்லை. இயற்கையை அழிக்காமல் மாற்று வழிகளில் அதை அமைக்க வேண்டும். ஒரு அரசாங்கமே காடுகளை அழிக்கும் செயலை முன்னின்று செய்யக்கூடாது. ஆள்பவர்களும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கான நீண்ட காலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

 
தண்ணீர் வருகின்ற கிணற்றை மூடிவிட்டு உனக்கு வாட்டர் பாக்கட் தருகிறேன் என்று சொன்னால், அது எவ்வளவு அபத்தமோ அப்படிதான் இயற்கையை அழித்து உருவாக்கப்படும் வளர்ச்சியும். இதைவிட கொடுமை என்னவென்றால் காகிதமற்ற பரிவர்த்தனை செய்வோம், அதன் மூலம் மரங்களைக் அழிக்காமல் காப்போம் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் வளர்ச்சி என்கிற பெயரில் மரங்களை அழிப்பது அரசாங்கத்தின் இரு முகங்களை அப்பட்டமாக  காட்டுகிறது. 
 
இயற்கையைக் காக்க வேண்டும் என்றால் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை. அதற்காக சமூக விரோதிகள் என பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை.. பதிமூன்று உயிர்களை விலைகொடுத்து தானே ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட  முடிந்திருக்கிறது..
 
“என் பிணத்துமேல ஏறி உங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்… உலகத்திலேயே மலிவானது ஏழையின் உயிர் தான். மனித உயிருக்கு விலைவைக்க நீங்கள் யார்?”  என்கிற அழுத்தமான வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இயற்கை அழிப்புக்கு எதிரான குரலை “மரகதக்காடு” படத்தில் பதிவு செய்துளேன்.
 
நம் கண்களுக்கு முன்னால் தெரியும் ஒவ்வொரு மரமும் ஒரு மரகதம் தான். மரக்கத்தக்காடு படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தானும் ஒவ்வொரு மரமாவது வைக்கவேண்டும். வீடு என் சொத்து.. மரம் நாட்டுக்கு சொத்து என்கின்ற உணர்வை இந்த படம் நிச்சயம் ஏற்படுத்தும். 
 
தண்ணீரை விற்க ஆரம்பித்த போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தோம். இன்று வீடு தோறும் தண்ணீர் கேன்கள். அடுத்ததாக, 
சென்னையில காற்று விற்பனைக்கு வந்திருக்கு. 6 லிட்டர் ஆக்ஸிஜன் 645 ரூ. பிளிப்கார்டில் விற்கிறாங்க. இப்பவும் கோபம் வரலைன்னா வரும் தலைமுறை நம்மை மன்னிக்காது.
 
அதுமட்டுமல்ல இருக்கிற காட்டை, யார் அழித்தாலும் கோபம் வரணும்.. அந்த தார்மீகக்  கோபத்தை என் படம் உருவாக்கும்.
 
இதனால் படத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். காரணம் ‘மரகதக்காடு’ படத்தில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் உண்மை.
 
செப்டம்பரில் படம் வெளியாக இருக்கிறது… படம் பார்க்கும்போது அது சொல்லும் செய்தியும் அதன் வலியும் உங்களுக்குப் புரிய வரும்..!” என்கிறார் இயக்குநர் மங்களேஸ்வரன்.