April 28, 2024
  • April 28, 2024
Breaking News
February 10, 2022

மகான் திரைப்பட விமர்சனம்

By 0 795 Views

வழக்கமாக சீயான் விக்ரம் நடிக்கும் படங்கள் சினிமா ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும். இந்தப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் அவருடன் நடித்திருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இரு மடங்காகி இருக்கிறது.

கொள்கையில்லாமல் இஷ்டப்படி வாழ்வது எப்படி குற்றமோ அதேபோல் கொள்கையுடன் நடக்கிறேன் என்ற பெயரில் அடுத்தவர் நலன் கெட நடப்பதும் குற்றம் என்ற கருத்தை இதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

காந்தியவாதியான ஆடுகளம் நரேன் தன் மகன் விக்ரமுக்கு ‘காந்தி மகான்’ என்று பெயரிட்டு வளர்க்க அவரோ சிறு வயதிலேயே தவறான பழக்கங்களுக்கு அடிமையாக, அவரை அடித்துத் திருத்தி நல்வழிப் படுததுகிறார். அத்துடன் அவருக்கு இன்னொரு காந்தியவாதியான நடிகர் சுப்புராஜின் மகள் சிம்ரனை மணமுடித்துக் கொடுத்து ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வைக்கிறார்.

அதனால் தன் ஆசைகளைக் கனவில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் விக்ரமுக்கு ஒரு சந்தர்ப்பம் அவர் ஆசைப்படி தவறான வாழ்க்கை வாழ வாய்ப்புக் கொடுக்க விக்ரமின் வாழ்க்கை எப்படித் திசை மாறுகிறது – தந்தையின் பெயரை கெடுத்த அவருக்கு மகனால் விளைந்தது என்ன என்பதை சற்றே விவரமாகச் சொல்லும் கதை.

சீயான் விக்ரமுக்கு நடிப்பும், கெட்டப்புகள் போடுவதும் ‘தண்ணி ‘ பட்ட பாடு என்றிருக்க, இதில் இரண்டுக்கும் வாய்ப்பும் இருக்க, ‘ தண்ணி’ சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்டு, அதில் ‘பத்தாது பத்தாது ‘ என்று மேலே மேலே போவதில் பிய்த்து உதறி இருக்கிறார். 

அவர் வரும் காட்சிகளில் அவருக்கான கெட்டப்புகளில் ஒரு ஆங்கில அல்லது பிரெஞ்சு நடிகர் போல் மிளிர்கிறார். முதல் பாதியில் ஆட்டமாய் ஆட்டம் போட்டு இரண்டாம் பாதியில் தான் செய்த பாவம் பிள்ளை வடிவில் தலைக்கு மீதான கத்தியாய் தொங்க, பரிதவிப்பில் அவர் தவிப்பது அற்புதம்.

தன்னை தன் மகன் கொல்ல மாட்டான் என்று அறிந்தாலும் அவனைக் கொல்லத் துடிக்கும் தன் கூட்டாளிகளின் வன்மத்திலிருந்து அவனைக் காக்கப் போராடுவதில் அவரது தந்தைப் பாசம் கொப்புளிக்கிறது.

அப்பா இரண்டு ஸ்டெப் போட்டால் நான்கு ஸ்டெப்பாகப் போடும் சிங்கக் குட்டியாக துருவ் விக்ரமும் துருவ நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

“பையன் மாதிரி ஒருத்தனுக்காக பையனையே கொல்ல விடுவியா நீ..? ” என்று தந்தையிடம் எகிறும் இடத்தில் சிங்கக் குட்டியாக கர்ஜிக்கிறார் துருவ். தன் மகனாலேயே மகன் போன்று வளர்க்கப்படும் சனந்த் கொல்லப்படும் கட்டத்தில் அப்பாவும், மகனுமாக மோதிக் கொள்ளும் இடம் தீப்பிடிக்கும் கட்டம்..!

அப்பாவும் மகனுமாக நிஜ அப்பாவும் மகனுமே மோதிக்கொள்ளும் இப்படி ஒரு காட்சியை தமிழ் சினிமா இப்போதுதான் பார்க்கிறது. அந்த அரை மணிநேரக் காட்சி ரசிகர்களை மந்திரம் போட்டது போல் கட்டிப்போட்டு வைக்கிறது.

விக்ரமைப் போலவே ஆனால், ஆற்றலில் ‘பத்தாது பத்தாது ‘ என்று அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பயணப்படும் துருவ்வின் ஆர்வமும், வேகமும் அப்பாவை விட அதிகம் என்றே சொல்லலாம்.

கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகள் போல் வந்து விடும் அவரது அப்பா சுப்பராஜ், பாபி சிம்ஹா, முத்துக்குமார் ( சமீப காலமாக) சிம்ரன் ஆகியோர் இதிலும் தவறாமல் ஆஜர் ஆகி இருக்கிறார்கள். ஆனால், பாபி சிம்ஹாவுக்கும், முத்துக்குமாருக்கும் இதில் ‘ஃலைப் டைம் கேரக்டர்’ கொடுத்திருக்கிறார் கார்த்திக்.

சாராய வியாபாரிக்கு மகனாகப் பிறந்து சாராய வியாபாரி ஆகவே வளர்ந்து ஒருகட்டத்தில் அதிலிருந்து பிரிந்து ஆன்மிக வாழ்க்கை வாழ நினைக்கும் பாபி சிம்ஹா விக்ரமின் பேராசையால் அதை விட முடியாமல் மக்னையே இழக்கும் கட்டம் பரிதாபமானது.

அதைப்போல் விக்ரமின் சாதுரியத்தால் துணை முதலமைச்சர் பதவி வரை வளர்ந்த முத்துக்குமார் எல்லோருக்கும் வில்லனாக மாறுவதும் எதிர்பாராத திருப்பம். குட்டி வில்லனாக வந்து கொண்டிருந்த முத்துக்குமாருக்கு விக்ரமின் நேரடி வில்லனாக இதில் பிரமோஷன் கிடைத்திருக்கிறது.

கொள்கையால் முறுக்கிக்கொண்டு தெரியும் சிம்ரனுக்கு இதில் சிறிய ஆனால் வலிமையான வேடம்.

பாபி சிம்ஹாவின் மகனாக வரும் சனந்த், மற்றும் தீபக் பரமேஷ் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

காந்தியத்தைப் பல பரிமாணங்களில் பார்த்து தனக்கு என்ன புரிகிறதோ, தன் ஸ்கிரிப்டுக்கு என்ன தேவையோ அதை ஆதரவாகப் பயன் படுததிக் கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

நட்பு பாசம், குரோதம், துரோகம் என்று அத்தனை மனித குணங்களையும் வெளிக்கொண்டு வரும் இந்தக் கதை கார்த்திக் சுப்பராஜின் முழுத் திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கதைகள் காணாமல் போன தமிழ் சினிமாவில் மீண்டும் கதையைத் தழைக்க வைத்திருக்கிறார் கார்த்திக்.

ஆனால், நீள நீளமான வசனங்களையும், கிளைமாக்ஸ் நீளத்தையும் குறைத்திருந்தால் இறுக்கமும் உருக்கமுமாக துல்லியமாக இருந்திருக்கும். 

மற்றபடி படத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை நடிகர்களுக்கும் அவர்கள் நடிப்பில் மைல் கல்லாக அமைந்திருக்கும் படம் இது.

அத்தனை பேரிலும் மேலாக ஜொலிப்பதுதான் விக்ரமின் ஆகச் சிறந்த வேலையாகி இருக்கிறது.

“உன்னை விட்டு விடுவேன்… ஆனால் உன்னுடன் இருக்கும் ஒவ்வொருவரையும் அழிப்பேன்…” என்று துருவ் ஒருபக்கம் கர்ஜிக்க, ” உன்னை மன்னிப்பேன். உன் மகனை மன்னிக்க மாட்டேன்…” என்று பாபி சிம்ஹா இன்னொரு பக்கம் சூளுரைக்க, “என்னைக் கொன்னுடு என் பிள்ளையை விட்டுடு…” என்று தவிக்கும் இடத்தில் நடிகர்களில், தான் என்றுமே சீயான் என்று நிரூபிக்கிறார் விக்ரம்.

பழிவாங்கிய எல்லா திட்டமும் தன்னுடையது என்று மகன் சொல்லச் சொல்ல தான் பகடைக் காயாக்கப் பட்டதை உணர்ந்து பதிலுக்கு அவர் போடும் திட்டம் மகனுக்குத் தெரியவில்லை என்றாலும் ரசிகர்களுக்குத் தெரிந்து விடும்.

தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் சீயான் ரசிகர்கள் மட்டுமல்லாமல் எல்லா ரசிகர்களும் கொண்டாடும் படமாக இது இருந்திருக்கும்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் மிரட்டலாக இருக்கிறது. பாடல்கள் வேற லெவல்.

“பத்தாது பாத்தாது…” என்று அப்பாவும் மகனுமாக போட்டு போட்டு நடித்திருப்பதில்…

மகான் – விக்ரமுக்கு வாய்த்த இன்னொரு ‘பிதா – மகன்’ கதை..!

– வேணுஜி