2005-ன் காதல் கதை என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எல்லா காலத்திலும் காதலில் தவறான புரிந்து கொள்ளல்கள் இப்படித்தான் வந்து முடியும்.
படத்தில் ஆரம்பத்தில் இருந்து நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிற ஒரு விஷயம் எல்லோரும் புது முகங்கள் என்பதுதான்.
காதல் பற்றிய மெச்சூரிட்டி இல்லாத நான்கு இளைஞர்கள். அதில் ஒருவன் கிட்டத்தட்ட காமக்கொடூரன். ஆளில்லாத வீடுகளில் புகுந்து ‘ ஆன்ட்டி’ களை கரெக்ட் பண்ணும் குணம் உள்ள அவனது லீலைகளை கேட்டு உடனிருக்கும் நண்பர்களும் அப்படிப்பட்ட எண்ணத்துடனேயே அப்படிப்பட்ட வாய்ப்புக்காகத் திரிகிறார்கள்.
ஆகாஷ் பிரபு, ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகிய நால்வரில் சந்தர்ப்ப வசமாக நாயகி ஜானகியின் நட்பு ஆகாஷ் பிரபுவுக்கு கிடைக்கிறது. ஜானகியின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி என்று இருக்க.. ஜானகி அவரைச் சுற்றி வருவதும் செக்ஸுக்காகதான் என்று நண்பன் உசுப்பேற்றுவதில் அதற்கான முயற்சியை ஆகாஷ் பிரபு மேற்கொள்கிறார்.
அதன் முடிவு என்ன ஆனது என்பதுதான் உருக்கமான கிளைமேக்ஸ்.
படத்தில் நம்மை அதிகம் கவர்வது ஜானகி தான். அந்த அப்பாவித்தனமான அப்பழுக்கற்ற அழகில் காதலைக் காண முடியாத ஆகாஷின் செயல்கள் ஜானகியைப் போலவே நம்மையும் கவலை கொள்ள வைக்கிறது.
இருவரும் பிரியும் ஒரு கட்டத்தில் வசனம் எதுவும் பேசாமல் “நீயும் இப்படிப்பட்டவன்தானா..? என்று ஜானகி ஒரு பார்வையில் சொல்லிவிட்டு போவதை ரசிக்க முடிகிறது.
ஆரம்பத்தில் நண்பனின் சொல்கேட்டு தவறாக நடக்க முயற்சித்தாலும் ஜானகியின் மனதைப் புரிந்து மருகும் ஆகாஷ் பிரபுவின் நடிப்பும் நன்று.
ஆகாஷ் பிரபுவின் குடும்பமும் நம்மை ரசிக்க வைக்கிறது. அவரை உசுப்பேற்ற அத்தனை பேரும் “ஒரு பெண்ணுடன் சுற்றினாயா..?” என்று போலியாக நடிக்க அந்த உண்மை தெரிந்து விட்டதோ என்று நினைத்து ஆகாஷ் பிரபு அப்பாவின் காலில் விழுந்து மருகும் காட்சி நெகிழ வைக்கிறது.
மற்ற மூன்று நண்பர்களில் அந்த பலான நண்பன் கவனிக்க வைக்கிறார்.
தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து படத்தை இயக்கியிருப்பதுடன், தயாரித்தும் இருக்கும் கே.ஜே.சுரேந்தரின் நம்பிக்கை பாராட்டத்தக்கது.
ஆனாலும் நல்ல லைனை எடுத்துக் கொண்டிருக்கும் அவர் சில விஷயங்களை நம்பகமாக சொல்லத் தவறி இருக்கிறார்.
ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஆகாஷ் பிரபுவை நல்லவன் என்று கண்டு கொள்வதும் அதேபோன்ற ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் அவரை தவறானவராகவும் ஜானகி நினைத்துக் கொள்வது திரைக்கதையில் பலவீனம்.
கண்ணைத் திறந்து கொண்டு நடந்து போனாலே அந்த ஒற்றை அடி பாலம் கீழே தள்ளிவிடும் என்று இருக்க அதில் கண்ணை மூடிக்கொண்டு நடப்பதெல்லாம் முட்டாள்தனமான செயல்.
அதேபோல் ஜானகியின் தாய் ஒரு பாலியல் தொழிலாளியாக இருக்க அதைப் பற்றியோ அவளது மகளின் நிலை பற்றியோ அக்கம் பக்கத்தில் யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பதும் நம்பகமற்ற செயல்.
ஒற்றைப் படுக்கையறை கொண்ட அந்த வீட்டில் ஒரு வயதுக்கு வந்த பெண் வாழ முடியுமா..? என்றைக்கு சொந்தக்காலில் நிற்க முடிந்ததோ அன்றைக்கே ஜானகி தனியாக போய் வாழ ஆரம்பித்து இருக்க முடியும்.
இதையெல்லாம் மாற்றி இன்னும் நம்பகம் சேர்த்து இருந்தால் இந்த வருடத்தின் கொண்டாடப்படக்கூடிய காதல் கதையாக இது இருந்திருக்கும்.
மற்றபடி இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகங்களே என்பதும் இயக்குனரின் தன்னம்பிக்கையை பறைசாற்றுகிறது.
ரொம்பவும் லாஜிக் பார்க்காமல் பார்த்தால் நம்பிக்கையூட்டும் புதிய முயற்சி.
மாய பிம்பம் – மாறாத காதல்..!
– வேணுஜி