படத்தின் இந்த கம்பீரமான தலைப்பும் இதில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகி ஆகிறார் என்கிற முன்னறிவிப்பும் இந்தப் படம் மீது மிகப்பெரிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது நிஜம்.
அதன்படியே ஆரம்ப காட்சிகளில் கிராமத்து பெண்களுக்கு சிலம்பம் கற்றுத்தரும் வேடத்தில் வருகிறார் வழக்கறிஞராக வரும் விஜயலட்சுமி. அவரைச் சுற்றித்தான் கதை நடக்கும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு பக்கம் பாய்கிறது கதை.
தர்மபுரி பகுதியில் இருக்கும் வறட்சியான கிராமம் என்கிறார்கள். அங்கே வசிக்கும் கூத்துக் கலைஞரான ராதாரவி தன் இரண்டு மகன்களுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். சட்டம் படித்தும் நீதிமன்றங்களில் அநீதி வெல்வது கண்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடிகாரன் என்ற பட்டத்துடன் சுற்றித் திரிகிறார் ராதாரவியின் மணமான மூத்த மகன்.
கூத்துக் கலைஞரான ராதாரவி பாரம்பரியமாக விவசாயத்தையும் கவனித்துக் கொண்டிருக்க அவரது இரு விதமான வேலைகளுக்கும் இளைய மகன் கே.என்.ஆர்.ராஜா உதவி செய்து வருகிறார். படத்தின் இயக்குனரான அவரே அந்த வேடத்தை ஏற்று நடித்திருப்பது சிறப்பு.
கூத்து என்பது இரவில் நடக்கும் கலைதான் என்று இருக்க, ஆபாச நடனங்களை 10 மணிக்கு மேல் நடக்கக்கூடாது என்று தடை விதிக்கும் அரசின் சட்டத்தின் கீழ் கூத்துக் கலையும் நசுக்கப்பட, வறட்சி மேலீட்டால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது.
அத்துடன் மதுக்கடைகளை அரசாங்கமே ஏற்று நடத்த, குடியின் பக்கம் சாய்ந்து போகும் மக்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கிராமமே களை இழந்து போகிறது.
வயல்களுக்கு மட்டுமல்லாமல் மாடுகளின் தேவைக்கும் டிராக்டரில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் கொடூர நிலையில் விவசாயத்துக்காக அடகு வைத்த நகைகளை பணம் கட்டியும் திருப்ப முடியாத சோகமும் ராதாரவியை அப்பிக் கொள்கிறது.
இத்தனை சுமைகளுடன் நீர் இன்றி அவர் வளர்க்கும் மாடுகளில் ஒன்று செத்துப் போக பிற மாடுகளை பணக்காரர் ஒருவர் வசம் ஒப்படைக்க அவர் அதை அடி மாட்டுக்கு விற்று விடுகிறார்.
இந்நிலையில் குடிகாரனாக இருந்த மூத்த மகனும் மனைவியை அனாதையாக விட்டுவிட்டு செத்துப் போக, ராதாரவி என்ன முடிவெடுத்தார் – இளைய மகன் ராஜா அடுத்து என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக் கதை.
அனுபவ நடிகரான ராதாரவியின் நடிப்பை மட்டுமே முன்னிறுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் காட்சிக்கு காட்சி கதையை உணர்ந்து நடித்து நம்மை நெகிழ வைக்கிறார்.
இளைய மகனாக வரும் இயக்குனர் கே.என்.ஆர்.ராஜாவும் முதல் பாதியில் ஒரு பெண்ணைக் காதலித்து பாட்டெல்லாம் பாடி விட்டு, அவர்கள் வீட்டில் பெண் தர மாட்டேன் என்று சொல்லியதும் மனம் உடைந்து காதலுக்கு முழுக்குப் போடுகிறார்.
பின்னர் அப்பாவின் சொல்படி மதுவை ஒழிக்க அஹிம்சை வழியில் போராடும் போராளியாகிறார்.
மற்றபடி படத்தில் வரும் அனைவரும் ஒரு வித செயற்கைத் தன்மையுடன் நடித்திருக்கிறார்கள. குறிப்பாக இந்த படத்தின் பிரதான விளம்பரப் புள்ளியான வீரப்பன் மகள் விஜயலட்சுமிக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை. அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கலாம்.
விஜயலட்சுமி ஆரம்பிக்கும் படம் விஜயலட்சுமியாலேயே வந்து முடிகிறது. அவருக்கு வரும் போன் காலில், “ஆமாம் அப்பா… மதுவை ஒழிக்கும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது..!” என்று தன் அப்பாவுக்கு தகவல் சொல்கிறார்.
அந்த அப்பா யார் என்பது எல்லோருக்கும் புரிந்து கைதட்டுவார்கள் என்பது இயக்குனரின் எண்ணம்.
சிறிய முயற்சியாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கவனமாக திரைக் கதையை கோர்த்து நடிகர்களிடம் சரியான வேலையை வாங்கி இருந்தால் கவனிக்கத்தக்க படமாக மாறி இருக்கும்.
ஒரு பக்கம் கிராமத்தில் வறட்சி தாண்டவம் ஆட இன்னொரு பக்கம் காதலர்கள் சந்திக்கும் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நாமாக அது ஒரு பருவம், இது ஒரு பருவம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
இருப்பினும் இன்றைய சமுதாயத்தின் முக்கிய தேவையான மது ஒழிப்பை முன்நிறுத்தி இருக்கும் இந்த படத்தை நாம் வரவேற்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களின் கோடிக்கணக்கான ரூபாய்களை தள்ளுபடி செய்யும் அரசு விவசாயத்திற்காக கடன் பட்டவர்களை வஞ்சிப்பதையும், தண்ணீர் இன்றி விவசாயிகள் படும் அவஸ்தையையும், கூத்து கலைஞர்களுக்கு நேரும் கொடுமையையும் பற்றி உரக்கப் பேசியதற்காக இந்த பட இயக்குனரை நாம் பாராட்டலாம்.
காதல் காட்சிகளில் மட்டும் குளிர்ச்சியையும் மற்ற காட்சிகளில் வறட்சியையும் பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மஞ்சுநாத்.
ரவி வர்மாவின் எளிமையான இசையில், ஆலயமணி எழுதிய பாடல்கள் வரவேற்கத்தக்கதாக இருக்கின்றன. பிரேமின் பின்னணி இசை படத்தின் தன்மைக்கு தோதாக இருக்கிறது.
வரும் 97 சதவீத படங்கள் பொழுதுபோக்குக்காகவே எடுக்கப்படும் நிலையில் இப்படி கொள்கைக்காக எடுக்கப்பட்ட விதத்தில்…
மாவீரன் பிள்ளை – வரவேற்க வேண்டிய முயற்சி..!