April 29, 2024
  • April 29, 2024
Breaking News
February 10, 2024

லவ்வர் திரைப்பட விமர்சனம்

By 0 132 Views

வில்லன்களோ வில்லங்கமோ இல்லாத காதல் உலகில் இல்லை. காதலை மையமாகக் கொண்ட… குறிப்பாக காதலர்களின் எண்ண ஓட்டத்தை அலசி இருக்கும் இந்தப் படத்திலும் ஒரு காதலுக்கு வில்லங்கமான ஒரு வில்லன் இருக்கிறார்.

அந்த வில்லன் வேறு யாரும் இல்லை காதலனேதான். காதலனின் குணாதிசயமே ஒரு காதலுக்கு வில்லனாகும் வகையில் திரைக்கதையை அமைத்து இன்றைய நாகரீக உலகுக்கான ஒரு காதல் கதையைக்  கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு ராம் வயாஸ்.

மணிகண்டனும் கௌரிப்ரியாவும் பள்ளிப் பருவம் தொட்டு ஆறு வருடமாகக் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இப்போது கௌரிப்ரியா ஐடி வேலையில் இருக்க, மணிகண்டனோ சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கிறார். இந்த முரண்பாடு இருவருக்கும் நிறைய பிரச்சனைகளை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.

அத்துடன் சுயநல மற்றும் வைப்பாட்டி வைத்திருக்கும் தந்தையின் தவறான அணுகுமுறையும் மணிகண்டனை வெறுப்புக்கு உள்ளாக்க, அவர் குடியை நாடுவதுடன் மிகுந்த கோபக்காரராகவும் இருக்கிறார். இது அமைதியான போக்குள்ள கௌரிப்ரியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியைத் தருகிறது.

இதனால் காதலுக்கு பிரேக் அப் விட, அந்த நேரம் பார்த்து மூன்றாவது கோணமாக கௌரிப்ரியாவின் வாழ்வில் அவருக்குப் பிடித்தமான குணநலன் கொண்ட கண்ணா ரவி உள்ளே வருகிறார். அதற்குப் பின் இவர்கள் காதல் என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.

மணிகண்டனின் குணாதிசயம் மட்டுமே இந்தக் கதையை நகர்த்திச் செல்கிறது என்கிற அளவில் அவரது கேரக்டரை எழுதுவதில் இயக்குனரும் சரி, நடிப்பில் மணிகண்டனும் சரி நிறைய மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

ஒரு சில காட்சிகளுக்குள்ளேயே மணிகண்டனின் குணாதிசயத்தை நம் மனதில் ஆழமாகப் பதிய வைத்து விடுகிறார் இயக்குனர். அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் மணிகண்டனின் அர்ப்பணிப்பும் அபாரம்.

எந்த ஹீரோவாவது தன்னுடைய கிளாமரைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்வளவு இயல்பாக நடித்து விட முடியுமா என்று தெரியவில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு ஹீரோவாக வளர்ந்து வருகிறார் அவர். 

அதேபோல் கண்ணா ரவியின் நடிப்பும் அசத்தலாக இருக்கிறது. அவர் அறிமுகமாகும் போதே இவர்களின் காதலுக்கு வில்லனாவார் என்பதை நம்மால் கணித்து விட முடிகிறது என்றாலும் நடத்தையில் கூட ஒரு ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கும் அவர்தான் ஒரு கட்டத்தில் கௌரிப்ரியாவுக்கு பொருத்தமாக இருப்பாரோ என்று நம்மையே எண்ண வைத்து விடுகிறது.

இந்த இரண்டு எல்லைக்குள்ளும் சிக்கிக் கொண்டு நெருக்கடிக்குள்ளாகும் காதலியின் பாத்திரத்தில் கௌரிப்ரியா வாழ்ந்திருக்கிறார்.

படம் பார்க்கும் நமக்கே மணிகண்டன் மேல் கோபம் வரும் பட்சத்தில் கௌரிப்ரியாவுக்கு வரும் கோபங்கள் அத்தனையும் நியாயமானவையே இருந்தும் மணி மீதான காதலில் அவரை இழக்க முடியாமல் கௌரி படும் பாடு நம்மையும் பாடாய்ப் படுத்துகிறது.

ஏதேதோ சொல்லியும் அடங்காத மணிகண்டனை, “உன் அப்பாவை மன்னித்து உன் அம்மாவுடன் இணைந்து வாழ இன்னொரு சான்ஸ் கொடுக்கச் சொன்னால் அது முடியுமா..?” என்று கேட்டு மணிகண்டனை வாய் அடைக்க வைக்கும் கட்டம் அபாரம்.

இவர்கள் எவரது நடிப்புடனும் குறை சொல்ல இயலாத வகையில் நடித்திருக்கும் மணிகண்டனின் அம்மா கீதா கைலாசமும் பாராட்டுக்குரியவர். மணிகண்டனுக்கு புத்தி சொல்லும் போது அப்படி ஒரு அன்பு அவரிடத்தில் மிளிர்கிறது.

ஒரு சில காட்சிகள்தான் என்றாலும் மணிகண்டனின் அப்பாவாக வரும் சரவணன் நடிப்பும் சரவெடிதான்.

இவர்களுடன் ராஜா, கலா, சுகன், சுகில், ரம்யா, ஐஷு ,விஷ்வா உள்ளிட்டு வரும் தங்கள் பங்கினை அற்புதமாக கொடுத்திருக்கிறார்கள்.

பல படங்களில் ஷான் ரோல்டன் பின்னணி இசையை நாம் கேட்டிருக்கிறோம் ஆனால் இந்தப் படத்தில் உணர்வுகளை இசையாக்கி அவர் பின்னணியில் இசைத்திருப்பது புத்தம் புது முயற்சி.

அதேபோல் ஸ்ரேயாசின் ஒளிப்பதிவில் அப்படி ஒரு இளமை. பாடல்களும் பலே.

படமாக்க நேர்த்தியும் இந்த டீமுக்கு அற்புதமாக கை வரப் பெற்றிருக்கிறது.

படத்தின் குறை என்று சொல்ல வேண்டும் என்றால் மணிகண்டனின் கேரக்டர்தான். அதை ஒன்றிரண்டு காட்சிகளிலேயே நமக்கு கடத்திவிடும் இயக்குனர் கடைசி வரை அதை வைத்தே திரைக்கதையை நகர்த்தி இருப்பது நாம் மீண்டும் மீண்டும் பார்த்த காட்சியை பார்க்கும் பிரமையைத் தருகிறது.

மணிகண்டனின் குணாதிசயம் நமக்குப் புரிந்த அளவுக்குக் கூட கௌரிப்ரியாவுக்குப் புரியவில்லையோ என்று ஒரு கட்டத்தில் நம்மையே எண்ண வைக்கிறது. வேலியில் போகிற ஓணானை எடுத்து ஆடையில் விட்டுக் கொள்கிற கதையாக அமைகிறது கௌரியின் போக்கு.

காட்சிக்கு காட்சி மணிகண்டன் குடித்துக் கொண்டு அல்லது புதைத்து கொண்டுதான் இருக்கிறார் அந்த கேரக்டரே அவர் மீதான வெறுப்பை சம்பாதிக்க வைக்கிறது.

இன்றைய வழக்கப்படியே திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவு வைத்துக் கொள்வதெல்லாம் இதிலும் சகஜமான விஷயமாக இருக்கிறது.

மற்றபடி கண்முன் நடந்த ஒரு காதல் கதைக்கு சாட்சியாக நிற்கும் அனுபவம் நம்மைப் பற்றிக்கொள்வது படத்தின் வெற்றி.

லவ்வர் – காதலர் தின ஸ்பெஷல்..!