December 2, 2024
  • December 2, 2024
Breaking News
February 11, 2024

லால் சலாம் திரைப்படம் விமர்சனம்

By 0 260 Views

ரஜினிக்கு காவி சாயம் பூசும் வேலைகள் கொஞ்ச காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஒரு காவி முகம் இருப்பதாகவும் பலரால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இப்படி ஒரு படம் வெளி வந்ததுதான் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. காவிக்கு பதில் அவர் இதில் ஏற்றிருப்பது பச்சை நிறம்.

இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதில் ரஜினிகாந்துக்கும், இப்படி ஒரு பாத்திரத்தை அமைத்ததில் இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கும் செம ‘ தில் ‘ இருப்பதைக் கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.

இந்தப் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்றாலும் அது மிகவும் சக்தி மிக்க வேடமாக அமைந்து போகிறது. அதிலும் மொய்தீன் பாய் என்று அவர் ஏற்றிருக்கும் இஸ்லாமிய வேடம் மத நல்லிணக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறது.

இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வரும் ஊர் முரார்பாத். அங்கே இஸ்லாமியராக இருக்கும் ரஜினியும் இந்துவாக இருக்கும் லிவிங்ஸ்டனும் இணைபிரியாத நண்பர்களாக இருக்க… அவர்களது மகன்களுக்குள் ஏற்படுகிறது பிணக்கு.

ஒரு கட்டத்தில் தொழில் நிமித்தமாக ரஜினி மும்பை சென்று பெரும் பணக்காரர் ஆகிறார். நண்பன் லிவிங்ஸ்டனுக்கு பலவகையிலும் பொருள் உதவி புரிந்து வந்த நிலையில் லிவிங்ஸ்டன் மரணம் அடைந்து விட… அவரது மகனான விஷ்ணு விஷாலுக்கும் ரஜினியின் மகனான விக்ராந்த்க்கும் இடையில் பால்ய காலத்தில் ஏற்பட்ட பிணக்கு இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் முரார்பாத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருப்பதைக் குலைத்தால் மட்டுமே அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்கிற நோக்கில் ஒரு கட்சித் தலைவர் கே எஸ் ரவிக்குமார், மூரார்பாத்தை சேர்ந்த போஸ்டர் நந்தகுமாரிடமும் அவரது மாப்பிள்ளை விவேக் பிரசன்னாவிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அந்த வகையில் விவேக் பிரசன்னா அந்த ஊரில் இந்துக்கள் ஒரு பிரிவாகவும் இஸ்லாமியர்கள் ஒரு பிரிவாகவும் கிரிக்கெட் குழுவை நடத்திக் கொண்டிருக்க அவர்களுக்குள் போட்டி வைத்துப் பகையை வளர்க்கிறார். இன்னொரு பக்கம் இந்த ஊர்  இந்துக்கள் வழிபடும் அம்மன் கோவிலுக்கு சொந்தத் தேர் இல்லாமல் இருக்க, தேர்த் திருவிழாவுக்கு பல காலமாக நந்தகுமார் பொறுப்பில் இருக்கும் தேரே தந்து உதவப்படுகிறது.

கதை நடக்கும் வருடத்திய தேர்த் திருவிழாவுக்கு அப்படித் தங்கள் பொறுப்பில் இருக்கும் தேரை நந்தகுமார் கொடுத்துவிட அவரது மருமகனான விவேக் பிரசன்னா திருவிழாவுக்கு முதல் நாள் அன்று தேரை இழுத்துக் கொண்டு போய் பூட்டி விடுகிறார்.

இப்படிப் பல வகையிலும் அந்த ஊரில் கலகத்தை ஏற்படுத்தி இஸ்லாமியர் கிரிக்கெட் அணியில் விளையாட ஏற்கனவே விஷ்ணு விஷாலுடன் பகைமையை வைத்து கனன்று கொண்டிருக்கும் விக்ராந்தை அழைத்துக் கொண்டு வந்து களம் இறக்க, அதில் வெடிக்கும் பிரச்சனையில் விக்ராந்த்தின் கையை விஷ்ணு விஷால் வெட்டி விடுகிறார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவே பார்த்து பாராட்டிய சிறந்த கிரிக்கெட் வீரரான விக்ராந்த், ரஞ்சிப் போட்டிக்கும் தேர்வாகி இருக்கும் நிலையில் தனது கையை இழந்து விட, அவரது தந்தையான ரஜினி பதை பதைத்துப் போகிறார்.

தனது மகன் வாழ்க்கையை சிதைத்ததற்காக விஷ்ணு விஷாலை, ரஜினி பழிவாங்க துடிப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் விஷ்ணு விஷால் பெரு முயற்சி செய்து தங்கள் ஊருக்கு ஒரு தேரை உருவாக்க முயற்சி செய்ய அந்தத் தேரையும் விவேக் பிரச்சனை கொளுத்தி விடுகிறார்.

இத்தனை பிரச்சனைகளும் எப்படி முடிவுக்கு வந்தன, இதில் ரஜினியின் ரோல் என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதிக் கதை.

சிறப்புத் தோற்றம் என்று அவர்கள் சொன்னாலும் கிட்டத்தட்ட முன் பாதியிலும் பின்பாதியிலும் கணிசமான காட்சிகளில் ரஜினி இடம் பெற, இதை ஒரு ரஜினி படமாகவே நம்மை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ரஜினியும் தன் கேரக்டர் புரிந்து அளவாக நடித்திருக்கிறார். மொய்தீன் பாயாகவே வரும் அவர் சமாதானத்தை விரும்பினாலும் பிரச்சனை என்று வந்துவிட்டால் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவும் தயங்காமல் களமிறங்குபவராக இருக்கிறார்.

படத்தின் நாயகன் என்று பார்த்தால் விஷ்ணு விஷால்தான். படம் தொடங்கியதிலிருந்து அவரை ஊருக்கு ஆகாதவராகவே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவரும் சீரியசான மோடிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார்.

விக்ராந்துக்கும் சொல்லிக்கொள்ளத்தக்க இரண்டாவது ஹீரோ வேடம். அவர் பாத்திரம் பகைமையை வளர்ப்பதாகவே இருக்கிறது என்றாலும் ஒரு கையை இழந்த நிலையில் தன் எதிர்காலம் பறிபோக பரிதவித்துப் போகும் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இயல்பில் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருப்பதால் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் நடிப்பது போலவே தெரியவில்லை – உண்மையிலேயே அடித்து ஆடியிருக்கிறார்கள்.

ரஜினியின் மனைவியாக நடித்திருக்கும் நிரோஷாவுக்கும் லிவிங்ஸ்டனின் மனைவியாக நடித்திருக்கும் ஜீவிதாவுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொருத்தமான வேடங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா.

இவர்களுடன் செந்தில், தம்பி ராமையா, தான்யா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று இருக்கிறார்கள்.

எந்த ஒரு படத்திலும் கதாநாயகர்களின் ஆற்றல் அதிகமாக வெளிப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு எதிரான வில்லன் பாத்திரம் பலமாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை விஷ்ணு விஷால் விக்ராந்துக்கு விவேக் பிரசன்னா தான் வில்லன் என்பது ரொம்பவும் பலமில்லாத அடித்தளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினியின் வில்லனாகக் கூட பவர்புல்லான ஆளாக இல்லாமல் ஆதித்யா மேனன் அவருக்கு வில்லன் ஆனதும் வீக்னஸ் ஆன விஷயம்.

லாஜிக்கிலும் அங்கங்கே ஓட்டைகள் தென்படுகின்றன. முக்கியமாக இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் ஊரில் எதற்காக மதத்திற்கு ஒரு கிரிக்கெட் அணி ஆரம்பித்து கொண்டு எதிரும் புதிதாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.

தன்னை அடிக்க வரும் ஒவ்வொருவரையும் இரு பக்கம் கூரிய ஆயுதத்தால் அடித்து நொங்கு எடுத்து விட்டு வில்லனிடம் ரஜினி வந்து சாந்தியும் சமாதானமும் ஏற்படட்டும் என்று சொல்லிவிட்டுப் போவது பொருத்தமாக இல்லை.

படத்தின் ஆகப்பெரிய பலம் விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவுதான். அவரே படத்தின் கதை வசனத்தையும் எழுதி இருப்பதும் அற்புதமான விஷயம்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இரண்டு பாடல்களில் அடையாளம் தெரிகிறார். மற்றபடி பின்னணி இசை வழக்கத்துடனே இருக்கிறது.

படத்தின் திரைக்கதையும் காட்சி அமைப்புகளும் கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு முந்தைய படமாகவே உணரச் செய்கிறது.

இருந்தாலும் ஊர் மக்களின் உழைப்பை ஒன்று திரட்டி உருவாக்கிய தேரை வில்லன் எரிக்கும் கணத்திலிருந்து படத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

படத்தின் கடைசி அரை மணி நேரம் விறுவிறுவென்று நகருகிறது.

தேர்த் திருவிழாவுக்கு ஏற்பாடுகளை செய்யுங்கள் நாளை தேர் ஓடு வருகிறேன் என்று ரஜினி சொல்லிவிட்டு போக ஒரே இரவில் எப்படி ஒரு தேரை தயார் செய்வார் என்று பார்த்தால் அங்கே இருக்கிறது ஒரு மெச்சத் தகுந்த விஷயம்.

காலத்துக்கு ஏற்ற கருத்தைப் பக்குவமாக சொல்லி இருக்கும் விஷயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு பல பரிசுகளும் விருதுகளும் கிடைக்கும்

லால் சலாம் – தேர்த் திருவிழா..!