April 29, 2024
  • April 29, 2024
Breaking News
February 11, 2024

இ மெயில் திரைப்பட விமர்சனம்

By 0 116 Views
இப்போதெல்லாம் ஆன்லைன் மோசடிக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அதனால் வங்கிகளும், “உங்கள் சுய விவரங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்..!” என்று அவ்வப்போது எச்சரிக்கை விடுகிறார்கள்.
 
இப்படி ஒரு படமாக இது இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றியது படத்தின் முதல் பாதி.
 
படத்தின் நாயகி ராகினி திவிவேதி, ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கே ஒன்றும் போனியாகாத நிலையில் அவர் வேலை இழக்க நேர்கிறது.
 
வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் அவரது போனில் ஒரு புதிய விளையாட்டு மெயில் மூலம் வந்து சேர்கிறது. அந்த எளிய விளையாட்டில் அவர் ஈடுபட அடுத்த நாள் கூரியரில் ஒரு லட்ச ரூபாய் பணம் வந்து சேர்கிறது. இப்படியே பணம் வர ஒரு கட்டத்தில் ஒரு கொலைக் கேசில் அவரை சிக்க வைக்க சதி நடக்கிறது.
 
இதற்கிடையில் தோழிகளுடன் அவர் வசிக்கும் அதே குடியிருப்பில் எதிர் பிளாட்டில் இருக்கும் அசோக் பாலகிருஷ்ணனை ஒரு தலையாகக் காதலித்து பின்னர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தனக்கு ஒரு வேலை பார்த்து தரச் சொல்கிறார். அது காதலாக மாறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
 
ஒரு பெரிய பிரச்சனையில் ராகினி சிக்கி கொண்ட விஷயம் தெரியும் கணவர் அசோக்,  அது தொடர்பாக இனி நடவடிக்கை எடுப்பார் என்று நாம் நினைத்தால் அங்கே ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.ராஜன்.
 
தான் சிக்கிய பிரச்சனையிலிருந்து ராகினி மீண்டும் வந்தாரா, அதில் அசோக்கின் உதவி இருந்ததா என்பதெல்லாம் மீதிக் கதை.
 
வழக்கமாக ஒரு படத்தில் ஹீரோவின் அறிமுகம் இருக்கும். அவர் யார், அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவருக்கு என்ன பிரச்சனை என்பதெல்லாம் கதையாக வளர்ந்து அதற்கிடையே ஹீரோயினுடன்  தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு சில காதல் காட்சிகள் – பாடல்கள் என்று படம் நகரும்.
 
அதே விஷயத்தை இதில் உல்டாவாக சொல்லி, ஹீரோயினை முதலில் அறிமுகப்படுத்தி அவருடைய வாழ்க்கையைப் பற்றி விவரித்து இடையே ஹீரோவை உள்ளே கொண்டு வந்து காதலிக்க வைத்து ஒரு பாடலைப் பாட வைத்துவிட்டு அவரைக் காணாமல் அடித்து விடுகிறார் இயக்குனர். 
 
தன் பிரச்சினைக்குத் தானே உள்ளே போய் அடிதடி ஆக்ஷன் எல்லாம் போடுகிறார் ராகினி.
 
அப்படியானால் படத்தில் ஹீரோவுக்கு வேலையே இல்லையா என்று கேட்காதீர்கள் அது ஒரு சஸ்பென்ஸ். படத்தைப் பார்த்தீர்களானால் அந்த சஸ்பென்ஸ் தெரிய வரும்.
 
சாதாரணமாக அறிமுகமாகும் ராகினி, போகப்போக படத்தின் கதை நாயகியாகவே மாறிப் போகிறார். தன்னை சிக்க வைக்க நினைப்பவர்களை அவர் துவம்சம் செய்வது சரிதான். ஆனால், அது போலவே தன் அம்மா எழுதி வைத்த சொத்துகளை அபகரித்து, தன்னைக் குழந்தையிலேயே அனாதை ஆக்கிய அந்த நயவஞ்சகர்களை எப்படி பழி தீர்க்காமல் விட்டார்..?
 
அசோக்குக்கு படத்தில் கொஞ்சம் வேலைதான். ஆனால் பின்பாதிக் கதையை மனதில் வைத்து இதில் நடிக்க ஒத்துக் கொண்டார் போலிருக்கிறது.
 
படம் முழுவதும் இளசு இளசான யுவதிகள் அரைகுறையாக வந்து கொண்டே இருக்கிறார்கள். படத்தின் இயக்குனரே தயாரிப்பாளராகவும் இருப்பதால் போட்ட பணத்தை பிடிக்க இந்த இளமை அஸ்திரத்தை பயன்படுத்தி இருப்பார் போலிருக்கிறது.
 
ஆனால் படத்தின் லாஜிக்குகளில் அதே போல கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
 
ஆரம்பத்தில் ஏதோ வீடியோ கேம், ஆன்லைன் சூதாட்டம் போல் ஆரம்பிக்கும் பிரச்சினை போகப் போக ஒரு தனி நபர் செய்கிற மிரட்டல் வேலைதான் என்று தெரிகிறது. இதை ஆன்லைன் வழியாகத்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியமும் எதுவும் இல்லை.
 
அதேபோல் கூரியரில் ஒரு லட்சம் ரூபாய் வருகிறது என்கிறார்கள். கூரியரில் பணம் அனுப்ப முடியாது – அப்படி அனுப்பினால் ஸ்கேன் செய்து அதை எடுத்து விடுவார்கள் என்ற அடிப்படை உண்மை கூடவா இயக்குனருக்கோ அல்லது படத்தில் வரும் ராகினி கேரக்டருக்கோ தெரியாது?
 
ராகினியின் ரியல் எஸ்டேட் முதலாளியாகவும் படத்தின் காமெடித் தேவைக்காகவும் மனோபாலா பயன்பட்டிருக்கிறார். ஆனால் அவர் அந்தத் தேவையை பூர்த்தி பண்ண நகைச்சுவை போதவில்லை.
 
செல்வத்தின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கிறது. பாடல்கள், பின்னணி இசை என்று இரண்டு இசையமைப்பாளர்கள் இந்த பட்ஜெட் படத்துக்கு எப்படி தேவைப்பட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த இருவரில் பின்னணி இசைத்திருக்கும் இசையமைப்பாளர் ஜூபின் மேத்தா, திறம் பட செயல்பட்டு இருக்கிறார்.
 
கவாஸ்கர் அவினாசின் இசையில் பாடல்களும் கேட்கலாம் என்ற அளவில் இருக்கின்றன.
 
இமெயில் – ஒன்லி பிளாக் மெயில்..!