ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பதால் இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். மலையாளம் வழியாக தமிழ் பேசி வந்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்தான் இது.
வேறு வேறு துறையில் இருக்கும் நால்வர் பகுதி நேர தொழிலாக அசைன்மென்ட் பெற்று பெரிய வீடுகளில் டாகுமெண்ட்களைக் கொள்ளையடிக்கும் வேலையும் செய்து வருகிறார்கள்.. அப்படி ஒரு பெரிய வீட்டில் ஒரு பொருளைத் தேட போன இடத்தில் அசந்தர்ப்பமாக அந்த வீட்டில் படித்துக் கொண்டிருந்த சிறுமியை பாதுகாப்பு கருதி கொல்ல நேர்கிறது.
அடுத்து இதே கோஷ்டி வளைகுடா நாட்டிலும் கைவரிசையை காட்டுகிறது. இப்போது அந்த கோஷ்டியில் ஒரு பெண்ணும் சேர்ந்து கொண்டிருக்கிறாள். நால்வரில் ஒருவனை அவள் காதலிக்க, இருவரும் இணைபிரியாமல் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள்.
இருந்தாலும் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே. அதனால் கடைசியாக பெரிய அசைன்மென்ட் ஒன்றை முடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகலாம் என்று அவர்கள் நினைக்கும் நேரத்தில் அவர்கள் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது.
பார்வைத்திறன் இல்லாதவராக வரும் பரத், புலன்களின் வழியாகவே நடித்திருப்பது அவருக்கு மட்டும் இல்லாமல் நமக்கும் புதுமையாக இருக்கிறது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பரத்துக்கு இந்தப் படம் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் அடையாளம் காட்டுகிறது.
ஃப்ளாஷ் பேக்கில் கேப்டனாக தூய வெள்ளை ஆடையில் பளிச்சென்று வரும் பரத்தை பார்ப்பதற்கு மிடுக்காக இருக்கிறது. தன் தங்கைக்கு ஒரு கொடுமை நேர்ந்த போது அந்த அதிர்ச்சியையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பது அவரது திறமையான நடிப்புக்குச் சான்று.
படத்துக்கு அடுத்து நமது கவனத்தை கவர்பவர் கொள்ளையர்களில் ஒருவனின் காதலியாக வரும் விவியா சாந்த். அவரே படத்தின் நாயகியாகவும் இருக்கிறார். செதுக்கிய சிற்பம் போல் இருக்கும் விவியாவின் கேரக்டருக்குப் பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ் நாம் எதிர்பாராதது.
பார்வையற்ற பரத், தன் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் ஒவ்வொருவராக தீர்த்துகட்டும் காட்சிகள் பரபரப்பானவை. அதிலும் இருள் சூழ்ந்த ஒரு காட்சியில் பரத்தின் அருகிலேயே அவர் தேடிக் கொண்டிருக்கும் இருவரும் இருக்க அவர்களுக்கு பரத்தையோ பரத்துக்கு அவர்களையோ தெரியாமல் இருப்பது திரில்லாக இருக்கிறது.
ஏன், எதற்கு, எப்படி என்கிற புதிர்களை எல்லாம் கடைசியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கும் போது நமக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இந்தப் படத்தின் மூலம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுனிஷ்குமார் என்று சொல்ல முடியும்.
இருந்தும் ஆரம்பகட்ட காட்சிகளில் கொஞ்சம் குழப்பம் நேராமல் திரைக்கதையை செதுக்கியிருந்தால் இன்னும் படத்தை ரசித்திருக்க முடியும்.
கொள்ளையர்களாக வரும் நால்வரின் முகங்களும் பாத்திரப்படைப்பும், நோக்கமும் புரிவதற்கே நமக்கு பாதிப்படம் கடந்து விடுகிறது. அந்த அன்னியத் தன்மையை அவர்களின் உரையாடல் வாயிலாக கொஞ்சம் இயக்குனர் குறைத்திருக்க முடியும்.
பார்வைத் திறன் பறிபோகும் பரத்துக்கு அவரது ஆற்றலை பெருக்க மேற்கொள்ளும் முயற்சிகளும் பயிற்சிகளும் பரபரப்பாக இருக்கின்றன.
சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவுத் திறனை அவரது இருள் காட்சிகளின் மூலமே புரிந்து கொள்ள முடிகிறது. கைலாஷ் மேனன் இசையும் இந்த சஸ்பென்ஸ் படத்துக்கு பரபரப்பை கூட்டி இருக்கிறது.
அருண் ராமவர்மாவின் சவுண்ட் மிக்சிங்கும் ரசிக்கும் விதத்தில் கவனம் பெறுகிறது.
லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் – பாக்கெட் நாவல் படித்த உணர்வு..!