January 23, 2026
  • January 23, 2026
Breaking News
December 31, 2021

லேபர் திரைப்பட விமர்சனம்

By 0 791 Views

‘இருந்தால் வேலை… இல்லாவிட்டால் சாலை’ என்று வாழும் அன்றாடக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி நம்பிக்கையால் மட்டுமே கட்டப்படுகிறது என்பதை கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வியலாகவே சொல்லி ஒளிப்பதிவும் செய்து இயக்கி இருக்கிறார்  சத்யபதி.

அதனாலேயே பல சர்வதேச விழாக்களில் தேர்வாகவும், தேர்வாகி விருதுகளையும் வென்றுள்ளது படம். மக்கள் மனங்களை வெல்லுமா பார்க்கலாம்.

கட்டிட மேஸ்திரியாக வேலை செய்யும் முத்து தன் மகன் தன்னைப்போல் கஷ்டப்படாமல் பட்டம் பெற்று இன்ஜினீயராக ஆக வேண்டும் என்று விரும்புவது ஒரு பக்கம் காட்சிப்படுத்தப்படுகிறது. அதே இடத்தில் முத்துவின் கீழ் சித்தாளாக சரண்யா, முருகன், திருநங்கை ஜீவா ஆகியோர் வேலை செய்கிறார்கள்.

சரண்யாவும் முருகனும் தம்பதியராக இருக்க, அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. போராட்டமான வாழ்வில் முருகன் எப்பொழுதுமே இரவு நேரத்தில் குடித்துவிட்டு வருவதால்  சரண்யாவுக்கு அவரிடத்தில் மனத்தாங்கல் ஏற்படுகிறது. அவர்களுடன் பணியாற்றும் திருநங்கை ஜீவா பாலின ரீதியாகவும் பல அவமானங்களை தாங்கிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

இவர்கள் அத்தனை பேரும் தங்கள் வாழ்வில் நினைத்ததை ஓரளவுக்கேனும் சாதிக்கவும், சேமிப்பு கருதியும் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு தம்பதியிடம் சீட்டு கட்டுகின்றனர். நன்றாகப் பழகிக்கொண்டிருக்கும் தனியார் சீட்டு  தம்பதி ஒரு கட்டத்தில் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று தெரிய வர, போலீஸ் கைது செய்கிறது.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் ஒரு அடி பட்டால் அடுத்தடுத்து அடி விழும் என்பதாக முருகன் வேலை செய்யும் போது அடிபட்டு மருத்துவமனையில் இறந்து விட, சரண்யாவின் வாழ்க்கைஎன்ன ஆகிறது..? மேஸ்திரியின் கனவு நிறைவேறியதா? திருநங்கை என்ன ஆனார்..? போன்ற கேள்விகளைப் போட்டு யதார்த்தமன வாழ்வில் எந்த அதிசயமும் நிகழ்ந்து விடாது என்பதாக அவர்கள் வாழ்க்கையை அவர்களின் மனம் போல் வாழ்கிறார்கள் என்று முடிகிற படம்.

மேக்கப் முகங்களையே பார்த்துப் பழக்கப்பட்ட சினிமாவில் முத்து, சரண்யா ரவிச்சந்திரன், முருகன், திருநங்கை ஜீவா சுப்ரமணியம்  ஆகியோரின் பவுடர் பூச்சில்லாத முகங்கள் வாழ்க்கையைக் கண்முன் பார்ப்பதாக அமைகிறது. 

அதிலும் ஒரு காட்சியில் சரண்யா தரை தளத்திலிருந்து செங்கற்களைத் தலையில் தாங்கி ஒரே ஷாட்டில் மூன்றாவது மாடிக்கு ஏற்றுவதில் நிஜமான சித்தாளாகவே உணர வைத்திருக்கிறார். அந்தக் காட்சியில் கண்ணுக்குத் தெரியாத ஒளிப்பதிவாளரின் திறமையும் சிறப்பு. கணவன் இறந்த நிலையில் சரண்யா எடுக்கும் முடிவும் புரட்சிகரம்.

ஒளிப்பதிவும் இயல்பான நிறம், கோணங்களில் படம் பிடித்து நேரில் பார்ப்பதாக உணர வைக்கிறது. அதற்கு நிஜில் தினகரன் இசையும், சி.கணேஷ்குமாரின் படத்தொகுப்பும் உதவி செய்கிறது.

பட்ஜெட் மிக மிக சிறியதாக இருந்தாலும் தொழிலாளர்களின் வாழ்வியல், பெண்ணியம், மூன்றாம் பாலின மேன்மை என்று பெரிய விஷயங்களை உள்ளடக்கமாகக் கொண்டிருப்பதால் பாராட்டலாம். அதனாலேயே மேலும் விருதுகளைப் பெறும்.

லேபர் – உள்ளது உள்ளபடி..!