கருத்தளவில் ஆகச்சிறந்த படங்கள் கன்னடத்தில் தயாரானதுண்டு. ஆனால், அதிக பொருட்செலவில் மிரட்டும் தொழில்நுட்பத்தில் ஒரு படத்தைக் கன்னடத்தில் கேள்விப்பட்டதில்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படவுலகின் பிரமாண்டத்துக்குப் போட்டியாக ‘இதோ நாங்களும் இருக்கிறோம்’ என்று களம் இறங்கியிருக்கிறது கேஜிஎஃப் படக்குழு.
16 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோலார் தங்க வயல் பற்றிய கற்பனைக் காவியம்தான் இந்தப்படத்தின் கதை. இதை உண்மைக்கதை என்று சொல்வதற்கு அவர்களுக்கே கொஞ்சம் தைரியம் குறைவாகத்தான் இருக்கிறது என்பது ஆரம்பக்கட்ட காட்சிகளில் தெரிகிறது. இந்தக் கதையை உண்மைக்கதை என்று எழுதிய எழுத்தாளராக வரும் ‘ஆனந்த் நாக்’ அது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழ, உண்மைக்கதை என்பதை அழித்துவிட்டு அந்தக் கதை பற்றிச் சொல்வதுதான் திரைக்கதையாக விரிகிறது.
ஏற்கனவே கன்னடப் படவுலகில் முறையாக வளர்ச்சி பெற்று இன்று உச்சத்தில் இருக்கும் நட்சத்திரமான யாஷ், ‘பான் இன்டியன்’ படமான இந்தப்படத்தின் மூலம் இந்திய நட்சத்திரமாக உயர்கிறார். அதற்குத் தகுதியானவராக அவர் இருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
கோலார் தங்க வயல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கான ஆரம்பக் காட்சிகளே படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. அதை ஒரு சுயநலவாதி தன் கட்டுப்பாட்டில் எப்படிக் கொண்டுவருகிறான் என்பதைக்காட்டி, அந்தச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்ட அதே நாளில் ‘யாஷ்’ பிறப்பதாகவும் காட்டுவது அவரே ஆளப்பிறந்தவர் என்பதைச் சொல்லிவிடுகிறது.
தந்தை யாரென்று தெரியாமல் பதினைந்து வயதுத் தாய்க்கு மகனாகப் பிறக்கும் அவர், தாயையும் தன் பத்து வயதில் பறிகொடுத்து, தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் விளைவாக செல்வந்தனாக முடிவெடுக்கிறார். அதற்கு தைரியம் மட்டுமே மந்திரச் சாவி என்று புரிந்துகொண்டு பத்துவயதிலேயே மும்பை சென்று அங்கு இன்ஸ்பெக்டரை அடித்து தன் பெயரையும் பதிவு செய்து தாதாக்கள் கூட்டத்துக்குள் பிரவேசிப்பது அற்புதம்.
அப்படியே அவர் மும்பையில் தவிர்க்க இயலாத தாதாவாக உருவெடுப்பது முன்பாதிக்கதை என்றால் பின்பாதியில் கோலார் தங்கவயல் சென்று அசைன்மென்ட்படி அதன் உரிமையாளரைக் கொல்ல முடிந்ததா என்பது பின்பாதி. முன்பாதிக்கதை மும்பை நிழல் உலகத்தை ஒரு நிறத்தில் காட்டி மிரட்டுகிறது என்றால் பின்பாதிக்கதை கோலார் தங்க வயல் பின்னணி காட்டும் பிரமாண்டத்தில் கொள்ளை கொள்கிறது.
யாஷின் உடல்மொழியும், நடிப்பும் அவர் ஏற்றிருக்கும் யாருக்கும் அஞ்சாத பாத்திரத்துக்குப்பொருத்தமாக இருக்கின்றன. இயற்கைக்கு முரணான பராக்கிரமம் என்றாலும் அதை நம்பவைப்பது அவரது பாத்திரப்படைப்பும், நடிப்பும்தான். வசனங்களும் கொஞ்சம் மிகைதான் எனினும் இப்படி ஒரு கற்பனைப் படைப்புக்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.
யாஷ், அவரை ஆரம்பத்தில் வெறுத்து பின் காதலிக்க ஆரம்பிக்கும் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மூத்த நடிகர் ஆனந்த் நாக், மாளவிகா, மற்றும் சிறப்புத் தோற்றத்தில் வரும் தமன்னாவை தவிர நமக்கு யாரையும் அடையாளம் தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு கேரக்டர்களில் வருபவர்களும் மிரட்டுகிறார்கள்.
வழக்கமாக கோடிகளைக் கொட்டும் உள்ளூர் படங்களை ஹாலிவுட் படங்களுக்கு நிகராகப் பறைசாற்றிக் கொள்வார்கள். ஆனால், நூறு கோடிக்குள்ளாகவே எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் சத்தியமாக ஹாலிவுட்டுக்கு நிகரான கலை, தொழில்நுட்ப மிரட்டலாக இருக்கிறது. ‘ஹாலிவுட்டுக்கு நிகராக’ என்ற பதத்துக்கு மிகசரியான காட்சிகள் படத்தில் இருக்கின்றன. ஒளிப்பதிவாளருக்கு தனி ‘பொக்கே’ கொடுக்கலாம்..!
அதனைக் கற்பனை செய்து காட்சிகளாகக் கொடுத்திருக்கும் இயக்குநர் ‘பிரஷாந்த் நீல்’ இந்த வருட சிறந்த தேசிய இயக்குநருக்கான விருதை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருக்குத் தோள் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா, இசையமைப்பாளர்கள் ரவி பஸ்ரூர், தனிஷ்க் பக்ஷி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்து படத்தைத் தூக்கி இந்திய சினிமா வான் உயரத்துக்கு நிறுவியிருக்கிறார்கள்.
இது முதல் பகுதிதான் என்ற அளவில் அடுத்த பகுதியைப் பார்க்க இப்போதே ஆவல் பிறக்கிறது.
கேஜிஎஃப் – தங்க வயல் சிங்கம்..!
– வேணுஜி