August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • காவேரி மருத்துவமனை- வடபழனியில், அதிநவீன விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையம் (Kauvery-SAC) தொடக்கம்..!
August 28, 2025

காவேரி மருத்துவமனை- வடபழனியில், அதிநவீன விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையம் (Kauvery-SAC) தொடக்கம்..!

By 0 29 Views

சென்னை மாநகரில் மூட்டுப் பராமரிப்பு சிகிச்சையில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பம்..!

சென்னை: ஆகஸ்ட் 28, 2025: காவேரி மருத்துவமனை வடபழனி, “காவேரி-SAC” என்ற பிரத்யேக விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையத்தை தொடங்கியிருக்கிறது. இம்மாநகரில் மேம்பட்ட எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய தரநிலையை நிர்ணயிப்பது இம்மையத்தின் குறிக்கோளாகும். இளம் வயதினருக்கும் மற்றும் சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கும் உடல் மூட்டுகளின் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே பாதுகாப்பதற்கும் மற்றும் முந்தைய இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், குருத்தெலும்பு புத்துருவாக்க சிகிச்சை (cartilage regenerative therapy) போன்ற அதிநவீன தீர்வுகளையும் இம்மையம் வழங்கும். இந்த சிகிச்சை மையத்தை தொடங்கியிருப்பதன் மூலம், மிகக்குறைந்த ஊடுருவல் / துளை வழியாக செய்யப்படும் மூட்டு சிகிச்சையான ஆர்த்ரோஸ்கோபிக்கான சென்னையின் பிரத்யேக மையமாக வடபழனி – காவேரி தன்னை நிலைநாட்டியிருக்கிறது. .

ஆர்த்ரோஸ்கோபி என்பது, உயர்-தெளிவுத்திறன் கொண்ட 3D கேமராக்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களின் உதவியுடன், சிறிய துளைகள் வழியாகச் செய்யப்படும் ஒரு சிகிச்சை செயல்முறையாகும். இது, உலகெங்கிலும் எலும்பியல் சிகிச்சைத் துறையை புரட்சிகரமாக மாற்றியிருக்கிறது. உலகளவில் ஆண்டுதோறும் 5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திறந்த அறுவை சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில், ஆர்த்ரோஸ்கோபி முறையிலான சிகிச்சை நோயாளிகளை 50% வரை வேகமாக குணமடையச் செய்வதுடன், பக்கவிளைவுகளின் விகிதத்தையும் கணிசமாகக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தனை நன்மைகள் இருந்தபோதிலும், இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது; இது பிரபலமான விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமேயான சிகிச்சை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த தவறான மனப்போக்கை மாற்றும் நோக்கத்துடன், இளம் விளையாட்டு வீரர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை, தொடர்ச்சியான மூட்டு வலி, மூட்டுகளின் நிலையற்ற தன்மை அல்லது காயங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை செயல்முறையை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதே வடபழனி – காவேரி மருத்துவமனையின் நோக்கமாகும்.

இந்த சிகிச்சை மைய தொடக்கவிழாவில் பேசிய, வடபழனி – காவேரி மருத்துவமனையின் முதுநிலை எலும்பியல் சிகிச்சை நிபுணர் மருத்துவர். ரவி சங்கர் கிருபானந்தன், “இம்மருத்துவமனையில் நாங்கள் வெறுமனே சிகிச்சையை மட்டும் வழங்குவதில்லை; குணமடைதலுக்கு உகந்த ஒரு முழுமையான சூழலை உருவாக்குகிறோம். ACL தசைநார் கிழிவு, சுழற்சிப் பட்டை காயங்கள் மற்றும் மூட்டுப்பகுதி தசை குருத்தெலும்பு பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு, மிகக் குறைந்த ஊடுருவலுடனும், விரைவான மீட்சியுடனும் சிகிச்சையளிக்க ஆர்த்ரோஸ்கோபி உதவுகிறது. நோயாளிகள், 6 மணி நேரத்திற்குள் நடக்கத் தொடங்கி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். இது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, மூட்டுத் தேய்மானப் பாதிப்புகள் உள்ள முதியவர்கள் அல்லது தோள்பட்டை விறைப்பு மற்றும் வலியால் அவதிப்படும் இல்லத்தரசிகள் என அனைவருக்கும் வலியில்லாத வாழ்க்கையை தரக்கூடிய ஒரு சிகிச்சை முறையாகும். துல்லியமான அறுவை சிகிச்சை, திட்டமிடப்பட்ட மறுவாழ்வு மற்றும் தங்கள் பணிகளுக்கு விரைவில் திரும்புவது என்பதோடு நின்றுவிடாமல், நம்பிக்கையுடன் நோயாளிகள் மீண்டும் தரமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வதே எங்கள் முழுமையான நோக்கவும், செயல்திட்டமாகவும் இருக்கிறது,” என்றார்.

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், பேசுகையில் “வடபழனியில் காவேரி-SAC மையம் தொடங்கப்பட்டிருப்பது, உயர் சிறப்பு மையங்களை உருவாக்கும் எங்கள் பரந்த தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாகும். மூட்டுப் பிரச்சனைகள் ஒருவரின் இயக்கத்தையும், நடமாட்டத்தையும் மட்டும் கட்டுப்படுத்துவதில்லை; அவை அவர்களின் சுயாதீன செயல்பாடுகள், மனநலம் மற்றும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன என்பதை ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக நான் நன்கு அறிவேன். இந்த சிகிச்சை மையம், மேம்பட்ட தொழில்நுட்பம், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனித்துவமான மற்றும் சிறப்பான மறுவாழ்வு செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்திருக்கிறது. இதன் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை செயல்முறைக்கான ஒரு உலகத் தரம் வாய்ந்த மையம் இயங்குவதை உறுதி செய்கிறது. உலகத் தரம் வாய்ந்த மூட்டுப் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை வசதிகள் வடபழனியிலேயே இப்போது கிடைக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் திரு. சாய் கிஷோர், விளையாட்டு மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில், “விளையாட்டில் காயங்கள் ஏற்படுவது இயல்பானது; ஆனால் அதிலிருந்து மீண்டு வருவதுதான் ஒருவரின் வாழ்க்கையை வரையறுக்கிறது. காவேரி-SAC போன்ற ஒரு மையம், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி, அதே தரமான சிகிச்சைக்குத் தகுதியான ஒவ்வொரு தனிநபரையும் மையமாகக் கொண்டிருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் ஆர்த்ரோஸ்கோபி செயல்முறையும், விளையாட்டு மருத்துவமும் இணைந்து எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த மையம், சென்னையின் விளையாட்டு மற்றும் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

இந்த சிகிச்சை மையத்தை தொடங்கியிருப்பதன் வழியாக, காவேரி மருத்துவமனை வடபழனி, ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை மற்றும் மூட்டுப் பராமரிப்புக்கான மாநகரின் நம்பிக்கைக்குரிய மையமாகத் தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. இதன்வழியாக, உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை உள்ளூர் மக்களுக்கு வழங்குவதோடு, விரைவான குணமடைதல், பாதுகாப்பான மருத்துவ செயல்முறைகள் மற்றும் அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை காவேரி மருத்துவமனை உறுதி செய்கிறது.