January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • அதிக சிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை..!
January 22, 2026

அதிக சிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை..!

By 0 20 Views

78 வயது முதியவருக்கு உலகின் மிக அரிதான ‘TAVR-in-TAVR-in-SAVR’ சிகிச்சை:

சென்னை, 22 ஜனவரி 2026: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, 78 வயதான ஒரு முதிய நோயாளிக்கு உலகின் மிக அரிதான மற்றும் சிக்கலான இதய சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை மாற்றப்பட்ட இதய வால்வுக்குள், மீண்டும் ஒருமுறை வால்வு மாற்றும் (TAVR-in-TAVR-in-SAVR) இச்சிகிச்சை, அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பான பலனை தந்திருக்கிறது.

இந்த நோயாளிக்குத் தீவிரமான ‘அயார்டிக் ஸ்டெனோசிஸ்’ எனும் இதய வால்வு சுருக்கப் பிரச்சனை இருந்தது. இதற்காக 2005 ஆம் ஆண்டில் அவருக்குத் திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை (SAVR) செய்யப்பட்டு, ஒரு செயற்கை வால்வும் பொருத்தப்பட்டது. காலப்போக்கில் அந்த வால்வு பழுதடைந்ததால், 2019 ஆம் ஆண்டில் மார்பறையைத் திறக்காமலேயே ‘TAVR’ முறையில் பழைய வால்வுக்குள்ளேயே மற்றொரு புதிய வால்வு பொருத்தப்பட்டது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகள் உருவாகின. பரிசோதனையில், முன்பு பொருத்தப்பட்ட வால்வில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதும், அந்த வால்வு முழுமையாக விரியாததால் ரத்த ஓட்டம் தடைபடுவதும் தெரியவந்தது. இரத்த உறைவு எதிர்ப்பி மருந்துகள் வால்வின் இயக்கத்தை தற்காலிகமாக மேம்படுத்தினாலும், அச்சிகிச்சை நிறுத்தப்பட்ட போதெல்லாம் பிரச்சனை திரும்பவும் ஏற்பட்டு டிரான்ஸ்கதீட்டர் இதயவால்வு முன்கூட்டியே சிதைவடைவதற்கு வழிவகுத்தது.

நோயாளியின் முதிர்ந்த வயது மற்றும் வால்வுகளை பொருத்துவது பலமுறை முன்பே நடந்திருப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மீண்டும் ஒரு திறந்த இதய அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதினர்.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் ‘டிரான்ஸ்கேதிட்டர் ஹார்ட் வால்வ்’ சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் மற்றும் டாக்டர் சி. சுந்தர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 3D எக்கோ மற்றும் CT ஸ்கேன் மூலம் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதனையடுத்து, ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த இரண்டு வால்வுகளுக்குள் மூன்றாவதாக ஒரு புதிய வால்வைப் பொருத்தும் TAVR-in-TAVR-in-SAVR செயல்முறையை மேற்கொள்ள முடிவு செய்த நிபுணர்கள், அதனை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

புதிய வால்வு நன்றாக விரிவடைந்து செயல்படுவதற்காகவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் முன்பு பொருத்தப்பட்ட வால்வின் சட்டத்தை உடைக்கும் சிறப்புத் தொழில்நுட்ப உத்தி பயன்படுத்தப்பட்டது. மேலும், இத்தகைய சிக்கலான சிகிச்சையின் போது மூளைக்குப் பாதிப்பு ஏற்படாமலும், பக்கவாதம் வராமலும் தடுக்க ‘இரட்டை மூளைப் பாதுகாப்பு’ (Dual Cerebral Protection – Spider FX) கவசங்கள் பொருத்தப்பட்டன. இது சிகிச்சையின் போது ஏற்படும் துகள்கள் மூளைக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தியது.

இதுகுறித்து டாக்டர் ராஜாராம் அனந்தராமன் கூறுகையில், “நோயாளியின் இதய அமைப்பு மற்றும் முந்தைய சிகிச்சைகளால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகத் துல்லியமான திட்டமிடல் மூலம் இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. நோயாளி மிக விரைவாகக் குணமடைந்து, சிகிச்சை முடிந்த மறுநாளே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் 48 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்,” என்றார்.

இந்த சாதனை குறித்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உள்ள உலகத்தரம் வாய்ந்த மருத்துவ நிபுணத்துவத்தை இந்த சிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் சாதனை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய உயிரிழப்பு ஏற்படும் ஆபத்துமிக்க மற்றும் சிக்கலான இதய சிகிச்சைகளை இங்கேயே வெற்றிகரமாக மேற்கொள்வதன் மூலம், நோயாளிகள் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது,” என்று தெரிவித்தார்.

உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சைகள் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணத்துவத்தை நோயாளிகளுக்கு வழங்குவதில் காவேரி மருத்துவமனை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மேலும் கட்டமைப்பு சார்ந்த இதய நோய்க்கான சிகிச்சை மேலாண்மையில் தலைமைத்துவத்தை சென்னை காவேரி மருத்துவமனை தொடர்ந்து வலுவாக்கி வருகிறது.