அரிய வகை கபாலமுக குறைபாட்டிலிருந்து மீண்டு குணமடைய 5 வயது குழந்தைக்கு உதவியிருக்கும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை..!
• நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுத்த நெகிழ்வான தருணம்
சென்னை, ஆகஸ்ட் 13, 2025 — மருத்துவ நிபுணத்துவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் நிபுணர்கள், கடுமையான முக சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து வயது குழந்தைக்கு, வாழ்க்கையையே மாற்றக்கூடிய அரிய வகை கிரானியோசினாஸ்டோசிஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.
பல மணி நேரம் நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சை, அச்சிறுவனின் தோற்றத்தை நேர்த்தியாக மாற்றியிருக்கிறது; அதுமட்டுமன்றி, குழந்தையின் உடலின் மிக முக்கிய செயல்பாடுகளையும் மேம்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்திற்கான ஒரு புதிய வாய்ப்பை அக்குழந்தைக்கு வழங்கியுள்ளது. டாக்டர் மணிகண்டன் மற்றும் டாக்டர் ஜி. பாலமுரளி தலைமையிலான பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களது குழுவின் இந்த வெற்றி, சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளில் காவேரி மருத்துவமனையின் மிகச்சிறப்பான திறன்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
கிரானியோசினாஸ்டோசிஸ் (கபாலமுக குறைபாடு) என்பது ஒரு அரிய வகை குறைபாடாகும். இது, பிறக்கும் 2,000–2,500 குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது. பிறந்த பிறகு மண்டை ஓட்டின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் மிக விரைவாக இணைந்து ஒட்டிக் கொள்வதால் இக்குறைபாடு ஏற்படுகிறது; மண்டை ஓட்டின் இயல்பான வளர்ச்சியைத் தடுக்கும் இப்பாதிப்பு இயல்பற்ற தலை மற்றும் முக வடிவமைப்பு, மூளையில் அழுத்தம் அதிகரித்தல் மற்றும் கடுமையான பாதிப்பு நேர்வுகளில் வளர்ச்சி தாமதங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, இந்த பாதிப்பு நிலை உணர்வு ரீதியான மற்றும் சமூக ரீதியிலான கடும் சங்கடங்களையும், சிரமங்களையும் பெரும் சுமையாக சுமத்துகிறது; இது பெரும்பாலும் அவர்களின் தன்னம்பிக்கையையும், பள்ளி கல்வியில் ஈடுபாட்டுடன் பங்கேற்பு அல்லது விளையாட்டுகளில் கலந்து கொள்வதை பாதிக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இதன் தாக்கம் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவர்களின் வாழ்நாள் காலம் முழுவதும் நீடிக்கக்கூடும்.
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின், முதுநிலை மருத்துவரும் மற்றும் முக மற்றும் தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் மணிகண்டன் கூறுகையில், “மண்டை ஓட்டு தையல்கள் முன்கூட்டியே இணைவதால் ஏற்படும் கடுமையான முக சிதைவு, மூக்கு மற்றும் கண் குழிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதே மேக்ஸில்லோஃபேஷியல் எனப்படும் மேல்தாடை-முகச்சீரமைப்பு சிகிச்சை நிபுணரின் பங்காக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, பெற்றோரின் விழிப்புணர்வு இல்லாமை, சிகிச்சையின் இடர்வாய்ப்புகள் குறித்த பயம், அல்லது மேம்பட்ட சிகிச்சையை பெற இயலாமை போன்ற காரணங்களால் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல குழந்தைகள் சரியான நேரத்தில் இப்பாதிப்புக்கான சிகிச்சையை பெறுவதில்லை. பாதிப்பு அறிகுறிகள் தென்படும் ஆரம்ப நிலையிலேயே செய்யப்படும் சீரமைப்பு அறுவை சிகிச்சை ஒரு குழந்தையின் வாழ்க்கைப் போக்கையே முற்றிலும் மாற்றி மேம்பட்டதாக ஆக்கிவிடும்,” என்றார்.
ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையின், முதுநிலை மருத்துவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுரளி கூறுகையில், “இந்த அறுவை சிகிச்சைகளுக்கு தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளை பரிசோதித்து உறுதி செய்ய விரிவான மதிப்பாய்வு தேவைப்படுகிறது. இந்த சீரமைப்பு சிகிச்சை செயல்முறை ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை நீடிக்கக்கூடும். இது மண்டை ஓட்டைத் திறந்து, எலும்புகளைப் பிரித்து, சீரான முகம் மற்றும் தலை வடிவத்தை உருவாக்க அவற்றை மறுவடிவமைப்பு செய்வதும் இந்த சிகிச்சையில் இடம் பெறும் முக்கிய அம்சங்களாகும். பல மருத்துவ வல்லுநர்களின் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்துடன் மட்டுமே இந்த சீரமைப்பு சிகிச்சையில் சிறப்பான முடிவுகள் சாத்தியமாகும்,” என்றார்.
காவேரி மருத்துவமனையில், ரோபோட்டிக்ஸ் (robotics), உயர்நிலை மயக்க மருந்து வழங்கல் சாதனங்கள், பிரத்யேகமான குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (pediatric ICU), மற்றும் அனுபவம் வாய்ந்த பல்துறை மருத்துவக் குழு உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளின் ஆதரவோடு இத்தகைய மேல்தாடை-முக சீரமைப்பு அறுவை சிகிச்சை திட்டமிடப்படுகிறது. இம்மருத்துவமனையானது நோய்க்குறி மற்றும் நோய்க்குறி அல்லாத வகையிலான மண்டை ஓடு மற்றும் முகக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இதன் மூலம் ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக இருந்த மேம்பட்ட நவீன சிகிச்சையை பாதிக்கப்பட்ட இக்குழந்தையின் குடும்பங்கள் பெறுவதற்கு இம்மருத்துவமனை வழிவகை செய்திருக்கிறது.
காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “காவேரி மருத்துவமனை, ஒத்துழைப்புமிக்க கூட்டு மருத்துவத்தின் சக்தியை இந்த சிகிச்சையின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தைநல மருத்துவர்கள், மயக்க மருந்தியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் என அனைவரும் இக்குழந்தைக்குச் சீரான தோற்றத்தையும், வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தையும் வழங்குவதற்காக ஒரே நோக்குடன் இணைந்து பணியாற்றினர்,” என்றார்.
இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, ஒரு மருத்துவ சாதனையை விட மிக மேலானது. அந்தச் சிறுவனுக்கு, இது ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பட்ட மூளை வளர்ச்சி மற்றும் முக சிதைவு ஏற்படுத்துகிற சிரமங்களும், கட்டுப்பாடுகளும் இன்றி அன்றாட வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடும் திறனுக்கான கதவை அகலத் திறந்து வைத்திருக்கிறது. அவனது குடும்பத்திற்கு, நிம்மதியையும், புத்துயிர் பெற்ற நம்பிக்கையையும், தங்கள் குழந்தை இப்போது உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்ற உற்சாகத்தையும் இச்சிகிச்சை தந்திருக்கிறது. சிகிச்சையளித்த மருத்துவக் குழுவைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் சிறப்பு நிபுணத்துவத்தின் மதிப்பையும், ஒருங்கிணைந்த சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் இந்த சிகிச்சை நேர்வு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது போன்ற சாதனை நிகழ்வுகள், ஆரம்பகால நோயறிதல், எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவை, மற்றும் இதுபோன்ற மேம்பட்ட சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலேயே சென்னையிலும் சாத்தியம் என்ற விழிப்புணர்வைப் பரப்புவதன் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை நிறுவியிருக்கிறது.