April 23, 2024
  • April 23, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • பாலு மகேந்திரா இல்லாத குறையை போக்கிய மாரி செல்வராஜ் – கலைப்புலி தாணு
March 31, 2021

பாலு மகேந்திரா இல்லாத குறையை போக்கிய மாரி செல்வராஜ் – கலைப்புலி தாணு

By 0 455 Views

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது .

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது .

விழாவில் படக்குழுவினர் பேசியதில் இருந்து…

கலைப்புலி எஸ். தாணு…

“உளப்பூர்வமான , உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி இருக்கும் இப்படம். அத்தனை வேலையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி இயக்குனர் மாரி செல்வராஜ்.

பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் இல்லையே என்ற குறையை எனக்கு மாரி செல்வராஜ் போக்கி இருக்கிறார். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை நடித்துக் கொடுத்திருக்கிறார் தனுஷ். நட்டி நடராஜ் எங்கள் குடும்பத்துப் பிள்ளை. வெற்றிமாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக்கிறோமோ  அதேபோல் மாரிசெல்வராஜ் அவர்களையும்  பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்..!

இயக்குனர் மாரி செல்வராஜ்…

“கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை  திரையில்தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார். கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள் . பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன்.

கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான்.

என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் . இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார்..!”

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்…

“பரியேறும் பெருமாள் படம் பார்க்காமலேயே இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் தனுஷ். இந்த விழாவில் அவர் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது .

கண்டா வரச்சொல்லுங்க, தட்டான் தட்டான் போன்ற பாடல்களுக்கு மக்கள் அளித்த ஆதரவு பெரும் மகிழ்ச்சியை தருகிறது..!”

நடிகர் யோகிபாபு…

“கர்ணன் படத்தில் அனைவராலும் பேசப்படக்கூடிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்். .பரியேறும் பெருமாள் படத்திலும் இதுபோன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிசெல்வராஜ் எனக்கு வாய்ப்பு அளித்தார். தனுஷ் சார் பற்றி நான் சொல்ல வேண்டும் அவர் திரைக்கு பின்னால் வேறொரு முகம் .திரைக்கு முன் கர்ணன் ஆகவே வாழ்ந்தார் .

நடிகை ரெஜிஷா விஜயன்…

“மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில்  ஆக்டிங் லெஜெண்ட் தனுஷ் சார், டைரக்டர் மாரி செல்வராஜ், லால் சார் போன்ற கலைஞர்களுடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக ஊர் மக்களுடன் நடித்த காட்சிகள் இன்னும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது .இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்..!”