July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • கண்ணப்பா திரைப்பட விமர்சனம்
June 30, 2025

கண்ணப்பா திரைப்பட விமர்சனம்

By 0 4 Views

கடவுளுக்கே கண்ணை கொடுத்த கண்ணப்பாவின் கதை காலம் காலமாக நாம் கேள்விப்பட்டு வருவது தான். எல்லா தென்னிந்திய மொழிகளிலும் கண்ணப்பாவின் கதை ஒவ்வொரு காலகட்டத்தில் எடுத்தாளப்பட்டு வந்திருக்கிறது. 

இப்போதும் அதை விஷ்ணு மஞ்சு தன்னுடைய திரை கதையாலும் நடிப்பாலும் அந்த கண்ணப்பா பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இந்த தலைமுறை இளைஞர்களுக்கு இறை வழிபாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

மற்ற எல்லா ஆன்மீக படங்களிலும் இல்லாத ஒரு அம்சம் இந்த கண்ணப்பன் கதையில் உண்டு. கடவுளே தங்களுடைய சொத்தாக நினைத்துக் கொண்டு விதிகளை இயற்றி மற்றவர்களை இறைவனை ண்ட முடியாத நிலைமைக்கு ஆளாக்கும் சனாதனவாதிகளின் தோலை உரிக்கும் கதை இது. 

இன்றைக்கு இந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் முன்பிருந்தே சாதிய தீண்டாமை நிலைகளுக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கும் இந்த கதை இந்தக் காலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதைச் சொல்லியே ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் முன்னெடுத்து இருக்கும் நாயகன் விஷ்ணு மஞ்சுவுக்கும், இயக்குனர் முகேஷ் குமார் சிங்குக்கும் ஆளுக்கு ஒரு பொக்கே கொடுத்து இந்த படத்தை பற்றி பார்க்கலாம். 

வேடர் குளத்தில் பிறந்த திண்ணப்பா, ஆன்மீகத்தின் பெயரால் கண்ணுக்கு முன் நடக்கும் அட்டூழியங்களை கண்டு கொதித்து தெய்வமே இல்லை என்ற பகுத்தறிவு நிலைக்கு ஆளாகி, பின்னர் முற்பிறவியின் பலனாக எப்படி சிவ பக்தரான கண்ணப்பாவாக மாறுகிறார் என்பதுதான் கதை. 

இந்த வேடத்தில் நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சுவை விடப் பொருத்தமான நடிகர் இந்தியாவிலேயே இல்லை எனலாம். தோற்றத்தில் மட்டுமல்லாது இந்த கதையை சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அணு அணுவாக ரசித்து இந்த படத்தை உருவாக்கி இருக்கும் அவர்தான் இந்த கதைக்கு மெத்த பொருத்தமானவர். 

வேடர் குளத்தில் பிறந்திருந்தாலும் மிக பலசாலியாக இருக்கும் அவரது வீரமும் தீரமும் ஒரு பக்கம் நம்மை கவர்ந்தாலும், இன்னொரு பக்கம் ஆன்மிகத்தால் கட்டுண்டு போய் கிடக்கும் இனத்தை மீட்டெடுக்க நினைக்கும் செயல்களிலும், முற்பிறவியில் அர்ஜுனனாக பிறந்து அடுத்த பிறவியில்தான் முக்தி கிடைக்கும் என்கிற நிலையில் அந்த வருத்தத்தை கண்களில் காட்டுவதில் நடிப்பிலும் விஷ்ணு மஞ்சு ஜொலிக்கிறார். 

ப்ரீத்தி முகுந்தனை கண்டதும் காதல் கொள்வது மட்டுமல்லாமல், அவருடனான காதல் மற்றும் ஊடலிலும், தந்தைப் பாசத்திலும், கடைசியில் சிவன் மீது கொண்ட பக்தி பரவசத்திலும் தனக்கொரு லைஃப் டைம் பாத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் அவர். 

இந்திய ஆன்மீக சினிமாவில் விஷ்ணு மஞ்சுவின் பெயரும் பொறிக்கப்படும். 

அவருக்கு மட்டுமல்ல… கண்கள் உள்ள எல்லோருக்கும் காதல் வரவழைத்து விடும் பேரழகு ப்ரீத்தி முகுந்தன் உடையது. காவிய கால ஓவியம் போன்ற கட்டழகு காரிகையாக ப்ரீத்தி உள்ளத்தை அள்ளுகிறார்.

சனாதனவாதிகளின் மொத்த வடிவமாக வரும் மகாதேவ சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு, பக்தி மிடுக்கில் பரவசப்படுத்துகிறார்.

வேடர் குல வீரராக வரும்  மோகன்லாலின் ஆற்றல் அர்ஜுனனை விட அபரிமிதமாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. கடைசியில் அவர் யார் என்று தெரியும் போது அதன் நியாயமும் புரிகிறது.

பாகுபலி தவிர இதுவரை தான் ஹீரோவாக நடித்திருக்கும் படங்களை விட ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கும் பிரபாஸ், பிரேமுக்கு பிரேம் ரசிக்க வைக்கிறார். 

ஒரு பக்கம் மோகன் பாபுவின் கர்வத்தை அடக்குவதும், இன்னொரு பக்கம் விஷ்ணு மஞ்சுவுக்கு பக்தியை ஏற்படுத்துவதும், மூன்றாவது முகமாக ப்ரீத்தி முகுந்தனுக்கு கணவன் பெருமைகளை உணர்த்துபவர் ஆகவும் அதகளப்படுத்தி இருக்கிறார் பிரபாஸ்.

சிவனாக அக்‌ஷய் குமாரையும் பார்வதியாக நடித்திருக்கும் காஜல் அகர்வாலையும் பார்ப்பதற்குதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் நடிப்பில் நேர்த்தி தெரிந்தாலும், அவர்களை வேறு முகங்களில் பார்த்திருப்பதால் கடவுள் பாத்திரத்தில் ஒன்ற முடியவில்லை.

சரத்குமாரின் பண்பட்ட நடிப்பு இந்த படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு நியாயம் செய்கிறது. ஒற்றுமையே வெற்றிக்கு வழி தரும் என்கிற உண்மை புரிந்தவராக இருப்பதால் தன் மகனையே கூட தள்ளி வைப்பதில் நல்ல ‘ நாட்டாமை’ யாகவும் இருக்கிறார் சரத்.

இதுவரை தான் ஏற்ற சிறிய பாத்திரங்களின் மூலம் கவனத்தை கவர்ந்து வந்த நடிகர் சம்பத் ராம், இதில் வேடர் குளத்தில் ஒரு பிரிவின் தலைவரான சந்துடு என்ற கதாபாத்திரத்தில் வந்து படம் முழுதும் முக்கியத்துவம் பெறுகிறார்.

இவர்களுடன் மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், தேவராஜ், சிவ பாலாஜி, அர்பித் ரங்கா  உள்ளிட்டவர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாகி இருக்கிறார்கள்.

ஒரு ஹாலிவுட் படத்தை பார்க்கும் நேர்த்தியுடன் ஒளிப்பதிவு செய்து இருக்கும் ஷெல்டன் ஷா பிரமிக்க வைத்திருக்கிறார். படப்பிடிப்பு நடந்த லொகேஷனும் நியூசிலாந்தாக இருக்க, திரையில் இருந்து கண்களை எடுக்க முடியாத அளவுக்கு நமக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.

அதையும் ஒரு படி தாண்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸீ. பாடல்களுக்கான இசையிலும் குறிப்பாக ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு அங்கங்கே மயிர் கூச்செறிய வைக்கும் பின்னணி இசைகளும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். 

திண்ணப்பா கண்ணப்பாவாக மாறும் காட்சிகளில் பின்னணி இசை பக்தி பரவசத்துடன் கூடி ஒலிக்கிறது.

சுத்தமாக பக்தி இல்லாதவர்கள் கூட இந்த படத்தின் பிரம்மாண்டத்துக்காகவும் இதில் சொல்லப்பட்ட சனாதன எதிர்ப்பு கருத்துக்களுக்காகவும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்.

பக்திமான்கள் இந்த படத்தை பார்த்தால் பல இடங்களில் கண்ணீர் ததும்ப பரவச நிலைமைக்கு போய் விடுவது உறுதி. 

கண்ணப்பா – பக்தியிலும் பொதுவுடமை காத்தவன்..!

– வேணுஜி