October 15, 2025
  • October 15, 2025
Breaking News
October 16, 2025

கம்பி கட்ன கதை திரைப்பட விமர்சனம்

By 0 17 Views

அவர்களே இது ‘கம்பி கட்ன கதை’ என்று சொல்லிவிட்டதால் இதற்கு மேல் நாம் இதை “காதில் பூ சுற்றும் கதை…” என்றோ “எப்படி கம்பி கட்டி இருக்கிறார்கள்..?” என்றோ சொல்வதற்கு ஏதுமில்லை.

படத்தின் லைனே ஒரு கம்பிதான். உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார் இல்லையா..? அந்த லைனைப் பிடித்துக் கொண்டு அதே வைரத்துடன் இன்னொரு வைரத்தையும் மகாராணிக்கு பரிசளித்த அந்த வெள்ளைக்காரர் திருடினார் என்றும், ஒன்றை மகாராணிக்குத் தந்துவிட்டு இன்னொன்றை ஆட்டையைப் போட்டு விட்டார்… என்று ஒரு வரலாறு (?) சொல்லி அந்த வைரம் எங்கெங்கெல்லாம் பயணப்பட்டு இப்போது எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று ஒரு கதை விடுகிறார் அல்லது கதை சொல்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி. 

இப்போது அந்த வைரத்தை அடைய விரும்பி ஒரு அரசியல்வாதி சில போலீஸ்காரர்களை நியமிக்கிறார். நேரடியாக போலீஸ் தலையிட்டால் அது சில சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அதற்கு ஒரு நம்பகமான மோசடிக்காரனை தேடிக் கடைசியில் நட்டியைக் கண்டுபிடிக்கிறார்கள்.

வைரத்தைக் கண்டுபிடிக்க ஒத்துக் கொள்ளும் நட்டி, அந்த வைரம் கைக்கு வந்ததும் அதைத் தானே ஆட்டையைப் போட நினைக்கிறார். ஆனால் அவரை சும்மா விட்டு விடுவார்களா..? நட்டியை அவர்கள் துரத்த இவர் ஓட இவர் கையில் இருந்தும் களவு போகும் வைரம் என்ன ஆனது அதை இவரால் மீட்க முடிந்ததா..? என்பதையெல்லாம் உருக்குக் கம்பி மேல் ஒயர் கம்பியாகக் கட்டி சொல்கிறார்கள். 

சதுரங்க வேட்டைக்கு பிறகு இப்படி ஒரு வில்லங்க வேடம் நட்டிக்கு. “பத்து பைசா செலவில்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன்… உங்களுடைய நான்காவது மாத சம்பளத்தை எனக்கு கமிஷனாக கொடுத்தால் போதும்…” என்று பொதுமக்களை ஏமாற்றுவதில் ஆரம்பித்து சாமியார் வேடம் போட்டுக்கொண்டு சல்லாபிப்பது வரை ‘நாட்டி’யாகவே திரிகிறார் நட்டி.

கிட்டத்தட்ட நித்தியானந்தாவை நினைவுபடுத்தும் அந்த சாமியார் வேடத்தில் ரஞ்சிதாவை நினைவுபடுத்தும் அளவில் வருகிறார் ஸ்ரீ ரஞ்சனி. நல்ல வேளை ரஞ்சிதா அளவுக்கு எல்லாம் நட்டியை குஷிப் படுத்த நேரவில்லை அவருக்கு.

அவருடன் பயணிக்கும் இன்னொரு இளம் ஜோடியான ஷாலினி கலர்ஃபுல்லாகக் காதலிக்கிறார்கள். 

இவர்களுடன் நட்டிக்கு சிஷ்யராக வரும் சிங்கம் புலி, ஷாலினியை கொல்ல ரஜினி ஆக வரும் முருகானந்தம், தீவுக்கு ஒரு மனைவி என்று வைத்துக் கொண்டும் குழந்தை பாக்கியம் தேடி வரும் பூனை சுல்தான் கோவை குணா என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள். 

திரைக்கதை வசனத்தை எழுதி நடித்தும் இருக்கும் தா. முருகானந்தம் படத்தில் நிறைய வேலை பார்த்திருக்கிறார். இவர் எழுதிய வசனங்கள் எல்லாம் வெடித்து சிரிக்க வைக்கின்றன. 

இதுவரை சுந்தர் .சியின் காமெடி ட்ரீட்மெண்டுக்கு மட்டும் வாரிசுகளே இல்லாமல் இருந்தது. இந்தப் படத்தில் அந்தக் குறையை தீர்க்கும் விதமாக சுந்தர்.சி பாணி நகைச்சுவைப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி. 

என்ன ஒன்று… சுந்தர்.சி படத்தில் இன்னும் கிளாமர் தூக்கலாக இருக்கும். இதில் அது ஒன்றுதான் மிஸ்ஸிங். 

கிளைமாக்சில் நட்டி ‘பொய்லாசா’ தீவுக்கு அதிபதியாவது செம லந்து.

கம்பி கட்ன கதை – நம்பி பார்க்கலாம் இதை..!

– வேணுஜி