அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்த கமல், பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்த கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். தேர்தல் ஆணையமும் கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் ஏதும் இருந்தால் தெரிவிக்க அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், எந்த ஆட்சேபமும் வரவில்லை.
இந்நிலையில் அவரை இன்று தேர்தல் ஆணையம் அழைத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (20-06-2018) டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்த கமல், தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் பெறும் மனுவை அளித்தார்.
தேர்தல் ஆணைய சந்திப்பை முடித்துக்கொண்ட கமல் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து கமலுடன் விவாதித்ததாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை இன்று சந்தித்த கமல்ஹாசன் நாளை காலை சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் தலைவர்களுடனான கமலின் இந்த சந்திப்புகள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்பய்டுத்தியிருக்கின்றன.