வன்முறையை அடிநாதமாகக் கொண்ட படங்கள் என்றாலே ஒரு காலத்தில் மதுரையே களமாக இருந்தது. சமீப காலமாக வடசென்னை இந்தக் களத்தைப் பிடித்திருக்கிறது.
இதிலிருந்து சற்று வித்தியாசப்படுத்தி சிவகங்கையில் நடக்கும் ஒரு வன்முறைக் கலாச்சாரப் படத்தை நியாயத்துக்கும் அநியாயத்துக்குமான போராட்டக் களமாக வைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வீர முருகன்.
அத்துடன் அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய ஆபத்தாக விளங்கும் போதை கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற செய்தியையும் முன்மொழிகிறார் அவர்.
சிவகங்கையில் தன் தம்பி அப்புகுட்டி மற்றும் மகன் யாசருடன் அன்பே உருவான பெண்மணியாக தீபா சங்கர் வாழ்ந்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அந்த ஏரியாவில் போதை சாம்ராஜ்யத்தை தலைமை ஏற்று நடத்தி வரும் பெண்மணியாக காயத்ரியும் அவர் தம்பி சம்பத் ராமும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
சம்பத்ராமிடம் வேலை பார்க்கும் தன்னுடைய நண்பன் ஒருவனுக்கு நேர்ந்த கொடுமையை தட்டிக் கேட்கப் போன யாசரைக் கொலை செய்து விடுகிறார்கள் சம்பத்ராமின் ஆட்கள்.
இதில் வெகுண்டெழும் தீபாசங்கரும் அவர் தம்பி அப்புகுட்டியும் பழி தீர்க்கப் புறப்பட என்ன ஆனது என்பது மீதிக் கதை.
ஒரு பக்கம் தாயாகவும், தமக்கையாகவும் பாசமுகம் காட்டி நெகிழ வைத்துவிடும் தீபா சங்கர், தன் மகன் யாசர் கொலையுண்ட செய்தி கேட்ட நிமிடத்தில் இருந்து மகாகாளியாக மாறும் உக்கிரம் அற்புதம். கோபமாக அவர் பார்க்கையில் கண்களில் தீக்கனலே தெரிகிறது.
அதற்கு அப்படியே எதிர்ப்புறத்தில் கண்களில் போதை வழிய எந்நேரமும் புகை பிடித்துக் கொண்டிருக்கும் வேடத்தில் நடித்திருக்கும் காயத்ரியும் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் இன்னொரு முகத்தைக் காட்டுகிறார்.
தன் கடைசி வினாடியைக் கூட துச்சமாக மதித்து தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும்போது அதிர்ச்சி அளிக்கிறார் காயத்ரி.
அவரது தம்பியாக வரும் சம்பத் ராமுக்கும் சொல்லிக் கொள்ளத் தக்க வேடம். ஆளைப் பார்த்தாலே பயமுறுத்தும் அளவுக்கு அவரும் மிரட்டி இருக்கிறார்.
எல்லாப் படங்களிலும் பொறுக்கித்தனமான போலீசாக வரும் சேரன்ராஜ் இதிலும் அப்படித்தான் அறிமுகம் ஆகிறார். மகாபாரதக் கதையை சொல்லி அறிமுகமாகும் அவர் செய்யும் வேலைகள் எல்லாம் மகா பாதகமாகவே இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அவரது பாத்திரப்படைப்பில் வரும் ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது.
அப்புக் குட்டிக்கும் பழி தீர்க்கும் முக்கியமான பாத்திரம். போலீஸ் வளையத்துக்குள் சிக்கி உயிரை விடப் போகும் நேரத்தில் அதைத் தலைமை தாங்கும் சேரன் ராஜிடமே மகாபாரதக் கதையை சொல்லும்போது கண்கலங்க வைக்கிறார்.
இவர்களுடன் மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்டவர்கள் பிற வேடங்களை ஏற்று இருக்கிறார்கள்.
ஜெர்சனின் பின்னணி இசையும், ஜெயக்குமாரின் ஒளிப்பதிவும் பட்ஜெட்டுக்கு பாதகம் இல்லாமல் வேலை பார்த்திருக்கின்றன.
இந்தப் படத்தின் தனித்துவமே ஹீரோ ஹீரோயின் என்று யாரும் இல்லாமல் எல்லா பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதுதான்.
அந்த வகையில் கதைக்கு முக்கியத்துவம் தந்திருக்கும் வீர முருகன் பாராட்டுக்குரியவர்.
கள ஆய்வு செய்து இன்னும் பட்ஜெட் கூட்டி இயல்பான முறையில் இந்தப் படத்தை தந்து இருந்தால் வேறு லெவலில் வந்திருக்கும்.
கலன் – போதையின் பலன்..!