January 23, 2020
  • January 23, 2020
Breaking News
July 21, 2019

கடாரம் கொண்டான் திரைப்பட விமர்சனம்

By 0 170 Views

தமிழில் நடிப்போச்சிய நடிகர்களை வகை பிரித்தால் சிவாஜி வழியில் கமலும், கமல் வழியில் விக்ரமும் வருவார்கள். அதிலும் தன்னை வருத்திக்கொண்டு கதபாத்திரத்துக்கு நியாயம் சேர்ப்பதில் விக்ரமின் அர்ப்பணிப்பு ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையானது (அதுவும் கோலிவுட் சம்பளத்தில் என்பது கூடுதல் செய்தி…)

அந்த வகையில் கமல் தயாரித்து விக்ரம் நடிக்கிற படமென்றால் எதிர்பார்ப்பு எப்படி எகிறும்..? அப்படியே இந்த ‘கடாரம் கொண்டான்’ படத்தின் மீதும் எதிர்பார்ப்புச் சுமை கூடியிருக்கிறது. அதை எதிர்கொண்டு படத்தைச் சுமந்திருக்கிறார் விக்ரம்.

கதைத் திருட்டுகள் கமலா ஆரஞ்சு போல் புழங்கும் கோலிவுட்டில் ‘பறித்தவனை விட பயிரிட்டவனுக்கே அதன் பலன்’ என்ற அடிப்படையில் ‘எ பௌட் போர்ட்டன்ட்’ என்ற பிரெஞ்சுப் படத்தின் தழுவல் இந்தப்படம் என்று அறிவித்து நேர்மை பாராட்டுவது கமலின் பெருந்தன்மையை உயர்த்துவதுடன், இயக்குநரின் தன்னம்பிக்கையையும் பறை சாற்றுகிறது.

முதலில் ‘காவல் கொண்டானா’க இருந்து பிறகு ‘களவு கொண்டானா’க மாறிய விக்ரம் ஒரு துரத்தலில் விபத்துக்குள்ளாகி மலேசிய மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கே அவரைக் கொலை செய்ய முயற்சி நடக்க, அவரைக் காப்பாற்றுகிறார் அந்த மருத்துவமனை மருத்துவர் அபி ஹசன். அபியைப் பழிதீர்க்க அவரது கர்ப்பிணி மனைவியான அக்ஷரா ஹாசனைக் கடத்தி, பதிலுக்கு விக்ரமைக் கேட்கிறார்கள்.

இன்னொரு பக்கம் போலீஸும் விக்ரமைத் தேட, வேறு வழியில்லாமல் விக்ரமுக்கு உதவும் அபியும் ‘கடலினில் வெள்ளம், கரையினில் நெருப்பு’ என்ற இருதலைக் கொள்ளிகளாக மாட்டிக்கொண்டு அவரவர் பிரச்சினைகளுக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் விறு விறு திரைக்கதை.

மனத்தை நெகிழச் செய்யும் கதைதான் என்றில்லை… இதுபோன்ற கலர்ஃபுல்லான கமர்ஷியல் கதைகளுக்கும் பொருந்துவது போல் தன்னை வடிவமைத்துக்கொள்ளும் விக்ரம் இதிலும் படு ஸ்டைலிஷாக தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறார். அத்துடன் உடலை தேக்குமரத்தைப் போல் உறுதிப்படுத்திக் கொண்டும் முருக்கேறியும் இருக்கிறார்.

சீயானின் கண்களே பாதி வசனங்களைப் பேசி, உடல்மொழியாலும் உணர்ச்சிகளைப் பதிவு செய்து விடுவதால் அவருக்குக் கொஞ்சமே கொஞ்சம்தான் வசனங்களை வைத்திருக்கிறார் இயக்குநர். தன் நடிப்பின் மூலமே அதனை நேர் செய்கிறார் விக்ரம். ஆக்‌ஷன் விஷயங்களிலும் அதகளப்படுத்தியிருக்கிறார் அவர்.

ஜோடியில்லாமல் கூட நடித்து ரசிக்க வைக்க விக்ரம் போன்ற தன்னம்பிக்கையாளர்களால் மட்டுமே முடியும்.

அபி ஹசன், அக்‌ஷரா ஹாசனின் ரத்தத்திலேயே நடிப்பு கலந்திருப்பதாலும், திறமையான இயக்குநரின் படம் என்பதாலும் குறைவைக்காமல் நடித்திருக்கிறார்கள். சின்ன வாய்ப்புதான் என்றாலும் அக்‌ஷராவின் நடிப்பு அற்புதம். முதல் படம் என்பதால் தன்னிடம் தெரியும் சின்னச் சின்ன குறைகளை மதிப்பிட்டு மாற்றிக்கொள்ள முடியும் அபியால்.

மலேசியக் காவலர்களாக வரும் லீனா குமார், விகாஸ் ஸ்ரீவத்சவ் செர்ரி மார்டியா உள்ளிட்டோர் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீநிவாஸ் ஆர்.குப்தாவின் ஒளிப்பதிவு கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு மற்றும் ஜிப்ரானின் இசையில் கலந்து ஆங்கிலப்பட நேர்த்தியைக் கொடுத்திருக்கிறது என்பது கலப்பில்லாத உண்மை..

புரிய வைக்க வேண்டிய சில விஷயங்களைக் கடந்துவிட்டாலும் இந்த பிரமாண்ட ஆக்‌ஷன் படத்தை பிசிறில்லாமல் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, கமல் பிராண்டைக் காப்பாற்றியிருக்கிறார்.

கமல் தந்தார் – விக்ரம் கொண்டார்…
கடாரம் கொண்டான் – கச்சிதமாய் வென்றான்..!